
விமலாதித்த மாமல்லன்
கோவாவில் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் திரைப்பட விழா, உலக சினிமா ரசிகர்களுக்கு உற்சாக உற்சவம். இந்த ஆண்டு திரையிடப்பட்ட திரைப்படங்களில் முக்கியமான படங்கள் குறித்துப் பார்ப்போம்.
A Son | Dir.: Mehdi Barsaoui | Tunisia |2019 | 95 min
மகிழ்ச்சியாகவும் வசதியாகவும் வாழும் தம்பதி, மகனுடன் காரில் பயணம் செல்கின்றனர். நண்பர்களின் குடும்பங்களுடன் குதூகலமாக இருந்துவிட்டு திரும்பும்போது தீவிரவாதிகளுக்கும் காவற்படைக்கு மிடையே நடக்கிற துப்பாக்கிச்சூட்டில் இந்தக் குடும்பத்தின் ஒரே குழந்தையின்மீது குண்டு பாய்கிறது.

சிறுவனுக்கு உடனடியாகக் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்தாக வேண்டும். தமது கல்லீரலை அளிக்க முன்வரும் தந்தை, அசல் தந்தையே இல்லை என்பது பரிசோதனையில் தெரியவருகிறது. இதை மனைவி கணவனிடம் தெரிவித்தாக வேண்டும். த்ரில்லருக்கு உரிய பரபரப்புடன் நம்பத்தகுந்த விதத்தில் நிறைய நுட்பங்களும் நகாசுவேலைகளுமாக பிரமாதப்படுத்தி இருக்கிற படம். நெருக்கடியான சூழ்நிலையை இயல்பாக உருவாக்கி, அதைவைத்து அவர்களின் மனங்களையும் வாழ்வையும் உடைத்துப்போட்டு முடித்திருப்பது செம கிளாஸ்.
God Exists, Her Name is Pertunija | Dir.: Teona Strugar Mitevska | Macedonia |2019 | 100 min
மதம், அதன் ஆண்மையப் பார்வை, அதன் காரணமாக பெற்ற தாய்கூட ஆணுக்கு ஒரு படி குறைவாகவே பெண்ணை நினைக்கும் மனப்பான்மை, சட்டம் எல்லோருக்கும் சமம் என்றாலும் நடைமுறையில் மதம் என்பது சட்டம் தொடமுடியாத உயரத்தில் இருக்கிற எதார்த்தம் எனப் பற்பல விஷயங்களைத் தொட்டுச் செல்கிற படம்.

சரித்திரம் படித்த 32 வயதான குண்டுப்பெண் வேலைதேடிப் போகிறாள். வேலை கிடைக்காதது மட்டுமன்றி, உருவம் காரணமாக அவளது பெண்மையும் அவமானப் படுத்தப்பட்டு திரும்ப நேர்கிறது. வழியில் பாதிரியார், குளிர்ந்த ஆற்றுநீரில் எறியும் சிலுவையை எடுக்கும் திருவிழா நடக்கிறது. ஏராளமான வெற்றுடல் இளைஞர்கள் சிலுவையை எடுக்க ஆற்றில் குதிக்கிறார்கள். எதையும் யோசிக்காமல் அந்தப் பெண்ணும் குதித்துவிடுகிறாள். சிலுவையை அவளே எடுத்தும்விடுகிறாள். அதிலிருந்து கிளைவிரிக்கும் காட்சிகளும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் வசனங்களுமாகத் திரையங்கே அதகளப்படுகிறது.
Marighella | Dir.: Wagner Moura | Brazil |2019 | 155 min
சர்வாதிகாரிக்கு எதிராக பொதுமக்கள், அறிவுஜீவிகள் என சகல தரப்பின் ஆதரவோடும் கிளர்ந்தெழுந்து ஆட்சியைக் கைப்பற்றி ஓராண்டில் மக்களாட்சி என்று உறுதியளிக்கிற ராணுவம், 21 ஆண்டுகள் கொடுங்கோலாட்சியாக நிலைக்கிறது. கார்லோஸ் மாரிகெல்லா என்கிற கம்யூனிஸ சிந்தனைகொண்ட எழுத்தாளர், 1961-64 காலகட்டத்தில் ராணுவ ஆட்சிக்கு எதிராக எப்படி ஆயுதமேந்திப் போராடியிறக்கிறார் என்பதைக் கூறும் படம்.

போராளியின் இலக்கிய பக்கமும் வெளிப்பட்டிருந்தால் படத்துக்கு இன்னொரு பரிமாணம் கிடைத்திருக்கும்.
My Name is Sara | Dir.: Steven Oritt | USA |2019 | 111 min
ஹிட்லரின் நாஜி படையிடம் யூதர்கள் அனுபவித்த கொடுமைகளையும் நேசநாட்டுப் படைகளின் தீரத்தையும் கூறுவதில் ஹாலிவுட் முனைப்பு காட்டும். இந்தப்படமோ, ‘எப்படியாவது பிழைத்திரு, அதுவே நமது பழிவாங்கல்’ என்று தப்பி ஓடச் சொல்லும்போது தாய் கூறிய வார்த்தைகளின்படி, உயிருடன் பிழைத்துக் கிடக்க வேண்டி மத ரீதியாகவும் மன ரீதியாகவும் தன் அடையாளங்கள் அனைத்தையும் அழித்துக்கொண்டு 13 வயது யூதச் சிறுமி எவ்வளவு சமரசங்களைச் செய்துகொண்டு பொய் சொல்லி 19 மாதங்கள் எப்படிப் பிழைக்கிறாள், என்பதைப் பிரமாதமாகச் சொல்லும் உண்மைக் கதை.

நாஜி படைகளின் வீழ்ச்சி தொடங்கி, ஆபத்து விலகியதும் அவள் செய்கிற முதல் காரியமே தனது உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்தி பெர்லினுக்குச் செல்லும் போராளிகளுடன் இணைந்துகொள்வதுதான்.
The Infiltrators | Dir.: Cristina Ibarra, Alex Rivera | USA |2019 | 95 min
தனியார் தடுப்புச் ‘சிறை’ ஒன்றுக்குள் நுழைந்து, கேட்க நாதியற்ற மக்களை நாடு கடத்தப்படுவதிலிருந்து தடுத்து, மீண்டும் அவரவர் குடும்பத்துடன் சேர்ந்து வாழவைக்க இளைஞர்கள் சிலர் எப்படி உதவுகின்றனர் என்பதைக் கூறும் உண்மைக் கதை.

முற்பகுதியில் நடிகர்களும் பிற்பகுதியில் உண்மையான போராளிகள் ‘அவர்களாகவே’ வருவதும் படத்தின் தனிச்சிறப்பு. அமெரிக்கா என்றாலே பணம் பணம் என்று திரிகிற சுயநலமிகளின் நாடு என்கிற பொதுக்கருத்து எவ்வளவு தவறானது, தன்னலமற்ற தனி நபர்களும் குழுக்களும் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள், தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்கிற நம்பிக்கையை உறுதிசெய்து இப்படி ஒருவராக நாமும் இருக்க வேண்டும் என்கிற சிந்தனையை விதைக்கும் படம்.
Captives | Dir.: Kristóf Deák | Hungary |2019 | 88 min
1951 – ரஷ்ய ஆக்கிரமிப்பில் இருக்கும் ஹங்கேரி. வெளியில் தெரியாத விடியற்காலை ரெய்டுகள், கைதுகள், விசாரணை என எந்த கேள்விமுறையும் இல்லாமல் எவர் வீட்டிலும் நுழைகிறது சர்வ அதிகாரம் படைத்த ரகசிய போலீஸ்.

இவ்வளவு பெரிய கொடுமையை நகைச்சுவையாகச் சொல்லி அரச கெடுபிடியின் அபத்தத்தை அம்பலப்படுத்தி இருப்பதுதான் இந்தப் படத்தின் வெற்றி. கலவரமான விஷயத்தை, கலகலப்பாகவும் பரபரப்பாகவும் காட்சிப்படுத்தியிருந்தாலும் படத்தின் தீவிரம் கொஞ்சமும் குறையவில்லை.
Happy Birthday | Dir.: Cédric Kahn | France |2019 | 101 min
மகள் - அம்மா - பாட்டி என்னும் மூன்று பெண் கதாபாத்திரங்களுக்கு இடையேயான அன்பும் வெறுப்புமான உறவையும் மன உணர்வுகளையும் விவரிக்கும் படம். திரைக்கதையில் ஆர்வம் கொண்டவர்களுக்கு இதில் சொல்லிக்கொண்டே போக நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

சில பாத்திரங்களை எடுத்துக்கொண்டு கண்ணிகளைக் கோர்த்துக்கொண்டே போய் அழகான ஆபரணமாக ஆக்கிவிடுவதில் பிரெஞ்சுக்காரர்கள் கில்லாடிகள். இந்தப் படமும் அப்படியானதொரு தரமான படைப்பு.
By the Grace of God | Dir.: François Ozon | France |2019 | 137 min
MeToo படம். இப்படி ஒரு படத்தை இந்தியாவில் எடுக்கவே முடியாது. தப்பித்தவறி யாராவது எடுத்துவிட்டாலும் இந்தத் தரத்தில் இவ்வளவு ஆழமாக இருக்குமா என்பது ஐயமே.

முப்பது வருடங்களுக்கு முன்பு, பள்ளிச் சிறுவனாக இருந்த தன்னிடம் பாலியல் அத்துமீறல் செய்த கிறித்துவ பாதிரியை, சட்டத்தின் முன் கொண்டுவர போராடுபவரின் கதை. ஒருவனிடம் கதை ஆரம்பிக்கிறது. பாதியில் அவனுக்கே தெரியாமல் அவனைப்போலவே பாதிக்கப்பட்ட வேறொருவனிடம் தொடர்கிறது. அவன், முன்னவனைவிட தீவிரம் காட்டுகிறான். ஆனால் மூன்றாமவனால்தான் அந்த நபரை போலீஸ் முன்பு கொண்டுவந்து நிறுத்தவே முடிகிறது. முகத்தில் அறைவதைப்போல் யதார்த்தத்தை முன்வைக்கும் படம்.