
அவருடைய இவ்வளவு வேலைகளுக்கு இடையில் இதையெல்லாம் செய்யணும்னு அவசியமே இல்லை. ஆனால், மனமுவந்து செய்தார்.
புகைப்படக்காரர் எல்.ராமச்சந்திரன் எடுக்கிற ஒவ்வொரு படத்திலும், உயிரை இழைத்து இதயத்தின் ஆழத்திலிருந்து உணர்வுகளை வெளிக்கொண்டுவரும் அர்ப்பணிப்பு தெரிகிறது. 2023 காலண்டருக்காக விஜய் சேதுபதியை வைத்து இவர் எடுத்திருக்கும் ‘தி ஆர்ட்டிஸ்ட்' படத்தொகுப்பு பெரும் கவனம் பெற்றிருக்கிறது. ராமச்சந்திரன் உலகம் கொண்டாடும் தமிழ்ப் புகைப்படக் கலைஞன். மாடல் உலகின் நம்பிக்கைக்குரிய தமிழன். புது வருடத்திற்கான புது கான்செப்டில் சேதுபதியை உள்ளே அழைத்து வந்திருக்கிறார். ஓவியம் வரைகிற சேதுபதி கூடுதல் கனிவாகவும் சாந்தமாகவும் தெரிகிறார். வண்ணங்கள் தோய்ந்து நிற்கையில் கம்பீரத்துடன் அத்தனை எண்ணங்களிலும் புகுந்து விளையாடுகிறார் சேதுபதி. அரும்பாக்கத்தின் இறுக்கமான சந்தடி கடந்து ராமச்சந்திரனின் அலுவலகம் போயிருந்தேன். அதுவே ஒரு சித்திரக்கூடம் போலிருக்கிறது. தேநீர் இளைப்பாறலில் துளிர்விட்டது உரையாடல்.

‘‘புகைப்படக் கலைஞனாக நான் மாறினதே ஆச்சரியம்தான். ஆறாவது படிக்கும்போதே என்னை ஏதாவது ஒரு தொழிலுக்கு ஆயத்தமாகணும் அல்லது அதைப் புரிஞ்சுக்கணும்னு அப்பா சொல்வார். அப்படி நிறைய வேலை பார்த்திருக்கேன். கல்லறுக்கிற வேலை பார்த்தால் மக்கள் கஷ்டம் புரியும்பார். டெய்லர் ஷாப்ல உட்கார்ந்தால் பொறுமையைக் கத்துக்கலாம்னு சொல்வார். சந்தையில் உட்கார்ந்து பார்த்து பணப்புழக்கம், வியாபாரம் எப்படி நடக்குதுன்னு அதன் சூட்சுமம் புரிஞ்சிருக்கேன். அதே மாதிரி ஆர்ட்டிஸ்ட் கிட்டவும் போனேன். அதுதான் சரின்னு பட்டது. அப்புறம் மல்டி மீடியா படிச்சு விளம்பரத்துறையில் நுழைஞ்சு அனுபவம் கைக்கொண்டு புகைப்படமும் கத்துக்கிட்டேன். எல்லாமே அனுபவங்களோட சேர்மானம்தான். என் வாழ்க்கையில் நிறைய நல்ல மனிதர்கள் உதவியிருக்காங்க. தடுக்கி விழுந்த நேரத்திலெல்லாம் யாரோ ஒருவர் தூக்கி நிறுத்தி தட்டிக் கொடுத்து ஆறுதல்படுத்தி அனுப்பி யிருக்காங்க. பிறகுதான் சர்வதேச அளவில் டாப் மாடல்களை வச்சுப் படம் எடுத்தேன். பிளேபாய், வோக், மாக்ஸிம்னு எனது படங்கள் வெளியாகி சட்னு பெரிய கவனத்திற்கு வந்தேன்.

கொஞ்சம் முன்னாடிதான் விஜய்சேதுபதி அறிமுகம் கிடைச்சது. கொரோனா உச்சத்தில் இருந்த நேரம். என்னவென்று புரியாமல் எதிர்காலம் அறியாமல் அடுத்து என்னவென்று தவிச்சுக்கிட்டு இருந்த நேரம். நடமாட்டம் குறைஞ்சு, வீட்டில் இருந்து, மனசு ஓட்டம் மட்டும் அதிகமாகி இருந்த நேரத்தை ‘ஹியூமன்’ என்ற கான்செப்டில் அவரை வச்சு காலண்டர் ஷூட் பண்ணினேன். அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அடுத்த வருஷம் ‘கலைஞன்'னு ஒரு எண்ணம் வந்தது. கொரோனாவில் பயணம் போயிட்டேன். ஏராளமான தெருக்கூத்துக் கலைஞர்களைப் பார்த்தேன். சலங்கை கட்டினாலே ஆட ஆரம்பிக்கிற கால்கள் சோர்ந்து போய் இருந்தன. அவர்களின் நல்வாழ்வுக்கு உதவணும்ங்கிற எண்ணத்தில் மறுபடியும் சேதுபதியை நாடினேன். அவருக்கு நான் சொன்னது எல்லாமே பிடிச்சுது. உடனே அதற்கான நேரம் ஒதுக்கினார். அவங்களையே வண்டியில் அழைச்சிட்டு வந்து அவங்க ஒப்பனையை சேதுபதிக்குச் செய்து எடுத்தோம். எட்டு விதமான ஒப்பனையிலும் புன்னகை மாறாமல் இருந்தார். அதுவும் வெளியாகி பயங்கர ஹிட். அதில் கிடைச்ச பணத்தை அப்படியே தெருக்கூத்துக் கலைஞர்களின் கையில் கொடுத்தார். அவங்க அப்படியே கண்ணில் நீர்துளிக்க நின்னாங்க. ‘மறுபடியும் கூப்பிடுகிறேன். என் பொண்டாட்டி பிள்ளைகளைக் கூட்டிட்டு வர்றேன். எங்களுக்காக ஒரு கூத்தைக் கட்டுங்க'ன்னு சொன்னார்.

இப்ப மறுபடியும் ‘தி ஆர்ட்டிஸ்ட்'காக சேதுவை அணுகினேன். அவ்வளவு நேர நெருக்கடி, மும்பை, சென்னைன்னு பிளைட்டில் பறந்துகிட்டு இருந்த டைம். ரெண்டு நாள் வேணும்னு சொன்னதும் ‘சரி பண்ணிட்டு வர்றேன்'னு சொன்னார். அப்புறம் தங்குதடை இல்லாமல் தொடர்ந்து 18 மணி நேரம் எங்ககூட இருந்து வேலையில் இறங்கினார். எக்கச்சக்க கான்செப்ட். கலைஞனோட மனசில்லையா? அப்படியே அவருக்குப் புரிஞ்சது. கேரவன்கூட இல்லை. முற்றிலும் ஓவியப் பின்னணி. ஒரு கட்டத்தில் முறையான ஓவியன் மாதிரி பிரஷ் பிடிக்க ஆரம்பிச்சிட்டார். வண்ணங்களுடன் உறவாட ஆரம்பிச்சிட்டார். அலைபேசியைத் தூக்கிக் போட்டுட்டார். அழுக்குப் பார்க்காமல் செட்டோடு, பெயின்ட் வாசனையோடு உள்ளே உட்கார்ந்திட்டார். தலைமுடி, கை கால் எல்லாம் பெயின்ட். ஒரு கான்செப்ட் குழந்தைகளோடு அமைஞ்சது. அந்த இடத்தில் பார்த்தால் இன்னொரு குழந்தையாகவே தெரிந்தார்.

கேரக்டர், ஸ்கின், கலர், மூடு எல்லாமே அவருக்குப் படிப்படியா கைவந்தது. ஓவியத்தின் நுண்ணுணர்வுகள் அவருக்குத் தெரிய வந்துவிட்டது. இதுக்காக சேதுபதி ஒரு பைசாகூடப் பெறவில்லை. மாறாக அவருடைய பிசியான பரபரப்பான நேரத்தில், தொடர்ச்சியாக 18 மணி நேரத்தை சந்தோஷமாக விட்டுக் கொடுத்தார்.
அவருடைய இவ்வளவு வேலைகளுக்கு இடையில் இதையெல்லாம் செய்யணும்னு அவசியமே இல்லை. ஆனால், மனமுவந்து செய்தார். இந்தக் காலண்டர்கள் விற்பனையாகி வருகிற தொகை விஜய் சேதுபதி டிரஸ்ட் மூலமாக ஏழை எளியவர்களுக்குப் போய்ச் சேருது. இப்படிச் செய்கிறபோது நம் கலை மக்களுக்குப் போய்ச் சேருதுன்னு சந்தோஷமா இருக்கு.


இந்த நேரத்தில் ஷூட்டிங் போய் பல லட்சங்களை வரவில் வைக்கலாம். ஒரு கலைஞனாக அவர் போஸ் கொடுக்கிறதை விட்டுட்டு, அவரது உள்ளுணர்வை வெளிப்படுத்தினார். ஆயிரம் பக்கம் எழுதுவதைவிட, நூறு புகைப்படங்களில் நம் சந்ததிக்கு நம் வாழ்க்கையையே புரிய வைக்கலாம். தனி மனிதனுக்கு நினைவு இருப்பது போல் இந்தச் சமூகத்திற்கும், இந்த எளிய மனிதர்களுக்கும் நினைவு இருக்கிறது. விஜய் சேதுபதி ஆத்மார்த்தமாக உள்ளே இறங்கியதில் அழகு அவர் உடல் அசைவின் போக்கிலேயே வந்தது.
தொடர்ந்து இன்னும் மக்களுக்குப் போய்ச் சேர்கிற வகையில் வேலை செய்யப் போகிறேன். நான் பார்க்கிற எத்தனையோ கலைஞர்களிடம் அவ்வளவு கஷ்டங்கள் இருக்கின்றன. ஆனாலும் வாழ்க்கையை ரசித்து வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவுவது மாதிரி இப்படிப்பட்ட காரியங்கள் செய்வது தவிரவும் வேறு முக்கியமான வேலை எனக்குக் கிடையாது.''