விகடன் வரவேற்பறை
வே.பாபு
வெளியீடு:தக்கை பதிப்பகம்,
15, திரு.வி.க. சாலை, அம்மாப்பேட்டை, சேலம்-3. பக்கங்கள்: 64 விலை:

50

ஒரு கவிதையை வாசித்ததும் அதன் ஆன்மாவை நீங்கள் தரிசிக்க முடிந்தால், அதுதான் சிறப்பான கவிதை. அப்படியான ஒரு தொகுப்பு, வே.பாபுவின் 'மதுக்குவளை மலர்’.
'சாத்தியமில்லை
உன் பின்னால் வருவது.
நீ விழும் அதே பள்ளத்துள்
நானும் விழ வேண்டியிருக்கிறது!’ - இப்படியான எளிய மொழியே தொகுப்பின் கவர்ச்சி. வே.பாபு அம்மு என்கிற பாத்திரத்தைத் தன் கவிதைகளில் உயிருடன் உலவ விட்டிருக்கிறார்.
'ஏதோ ஒரு கணம்தான்
தீர்மானிக்கிறது
எல்லாவற்றையும்’
என்கிறார் கவிஞர். ஒரு கணம் மகிழ்ச்சி, மறுகணம் துயரம், அடுத்த கணம் திடுக் கிடல், பின் அதிர்ச்சி என்று ஒன்றன் பின் ஒன்றாக இந்தக் கவிதைகள் நமக்குள் ஊட்டும் உணர்வுகள் விதவிதமானவை. குழந்தைகளுடன் விளையாடு கையில் முகமூடிகளைக் கழற்றி எறிய, உடல் நொறுங்கி அப்படியே விழுங்கப்படும் கணத்தைக் காதலின் தகிப் போடு உணர, பவிக்குட்டிக்குக் கதை சொல்ல, பெருநகரத்துக் காரனின் ஒரு மழை நாளை எண்ணிப்பார்க்க, லட்சத்தில் ஒருவனுக்கு மட்டுமே உதிரும் தறுவாயில் கிடைக்கும் அபூர்வ மலரை எண்ணித் தவிக்க என்று பல உணர்வுகளில் தீண்டுகின்றன கவிதைகள். அன்பும் காதலும் மட்டுமேவா 'மதுக்குவளை மலர்’? ஈழம், தாமிர பரணிக் கொலைகள், பெண்கள் மீதான சமையலறை வன்முறை என்று சமூக விஷயங்களையும் பேசுகிறது.
'நீ
சொல்லியபடி
வரைந்தபடி
இல்லை பறவைகள்
நேரில்
பார்த்தபோது
பறவைகளாக இருந்தன
பறவைகள்!’
- ஆம். இந்தத் தொகுப்பும் அப்படித்தான். வாசிக்கும்போது அவரவர்க்கான புரிதலுடன் கவிதைகள் வாசிப்பவருக்குத் தென்படக்கூடும்.
போவோமா ஊர்கோலம்...
www.traveltriangle.com

உல்லாசச் சுற்றுலாவுக்கு இருந்த இடத்தில் இருந்தே அனைத்து முன்னேற்பாடுகளையும் 'பட் ஜெட்’ விலையில் முடிக்கக் கை கொடுக்கும் தளம். கோவா அல்லது அந்தமான் என எந்தப் பகுதிக்கு சுற்றுலா செல்லத் திட்டமிடுகிறீர்களா... இந்தத் தளத்தில் உங்கள் பயணத் திட்டத்தையும் எதிர்பார்ப்பு களையும் பதிய வேண்டும். உதாரணமாக, இரண்டு பெரியவர் கள், ஒரு குழந்தை - மூன்று நாட்கள் தங்க, உணவு, உள்ளூர் போக்குவரத்து வசதி என உங்கள் தேவைகளைப் பதிய வேண்டும்.
நீங்கள் குறிப்பிட்ட பட்ஜெட்டில் உங்களுக்குச் சேவை அளிக்கத் தயாராக இருப்பவர் களை உங்களுக்குப் பரிந்துரைக் கிறார்கள். எவரேனும் ஒருவரை ஃபிக்ஸ் செய்து கட்டணங் களைச் செலுத்திவிட்டால், உங்கள் உல்லாசப் பயணத்துக்கு இவர்கள் முழுப் பொறுப்பு எடுத் துக்கொள்கிறார்கள். முன்னாள் ஐ.ஐ.டி. மாணவர்களின் யோசனையில் உதித்த இந்தத் தளம் 2011-க்கான சிறந்த வெப்சைட் விருது வென்று உள்ளது.
நீதானே என் பொன்வசந்தம்
இசை: இளையராஜா பாடல்கள்: நா.முத்துக்குமார்
வெளியீடு: சோனி மியூஸிக் விலை;

99

இளையராஜா - கௌதம் வாசுதேவ் மேனன் - நா.முத்துக்குமார்... பிரமாண்ட எதிர்பார்ப்புக் கிளப்பியிருக்கும் ஆல்பம். 'வழக்கமான தொனி இருக்கக் கூடாது... இன்றைய தலைமுறை ரசிகர்களையும் கவர வேண்டும்.’ இந்த இரண்டு நிர்பந்தங்களையும் கவனமாகக் கடந்திருக்கிறார் இளையராஜா.
'சாய்ந்து சாய்ந்து...’ பாடல்... மிக ரசனையான கம்போசிஷன். கிடாரின் முதல் மீட்டலிலேயே இரவின் ரம்மியத்துக்கு நம்மைக் கடத்தும் இசை, 'என் தந்தை, தோழன் ஒன்றான ஆணை நான் கண்டுகொண்டேன்...’ ரம்யாவின் குரலில் காதல் வருடல். 80-களின் 'ராஜா’ சாயலோடு மனதை வருடிச் செல்கிறது 'காற்றைக் கொஞ்சம் நிற்கச் சொன்னேன்...’ பாடல். அட... காதல் குறித்த வன்உணர்வுகளைக் காதலி குமுறுகிறாள் 'முதல் முறை...’ பாடலில். சுனிதி சௌஹான் குரலில் கோபம், ஆதங்கம், வெறுப்பு அனைத்து உணர்வுகளும் காதல் கலந்து எட்டிப் பார்க்கிறது.
'வானம் மெள்ளக் கீழிறங்கி வந்தாடுதே...’ பாடலில் இளையராஜா, பெலா சென்டே குரல்களில் குதூகல உற்சாகம். இரு வித்தியாச டோன்களில் ஏகத்துக்கும் எனர்ஜி ஏற்றுகிறது 'புடிக்கல மாமு...’ பாடல்.
முதல் நொடியிலேயே பிடித்துவிடுகிறது 'என்னோடு வா வா...’ பாடல். ஆல்பத்தின் மெஸ்மரைஸிங் மெலடி. இடையிடையே ஹைபிட்ச் உற்சாகம்கொள்ளும் இசை, பிறகு மென்மையாகக் காது மடல் வருடுகிறது. 'காதலுக்கு இலக்கணமே... தன்னால் வரும் சின்னச் சின்ன தலைக்கனமே!’ குறும்பு வரிகளில் மெலடிக்கு அழகு சேர்க்கிறார் நா.முத்துக்குமார்.
மிகக் குறைந்த அளவு வாத்தியங் களைக்கொண்ட பாடல். ஆனால், அந்தத் தொனியே இல்லாமல் ராக் பேண்ட் பாடல்போல அதிரடிக்கிறது 'பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா...’ பாடல். 'சற்று முன்பு’ பாடலில் 'ஏங்கி ஏங்கி நான் கேட்பது உன்னைத்தானடா... தூங்கிப் போனதாய் நடிப்பது இன்னும் ஏனடா?’ என ரம்யாவின் குரலில் ஒரு காதலியின் துயரம்... அவ்வளவு அழுத்தம்.
இந்தத் தலைமுறை ரசிகர்களுக்கான ராஜா ஆல்பம்.
அவஸ்தை
இயக்கம்: வி.ஆர்.பி.மனோகர்
வெளியீடு: எஸ்.ஜே.கிரியேஷன்ஸ்

கிராமங்களில் கழிப்பிட வசதியின்மை தொடர்பான பெண்களின் அவஸ்தையைச் சொல்லும் படம். அஞ்சலைக்கு இன்னும் சில தினங்களில் திருமணம். அப்பாவோ பெண்களின் கழிப்பிட வசதிபற்றி யோசிப்பதே இல்லை.
கருவேலங்காடுகளில் 'உட்கார’ அலையும் அஞ்சலை கோபமுற்று திருமணத்தையே நிறுத்தி விடுகிறார். ஆரம்பமோ, முடிவோ இல்லாத இந்தக் குறும்படக் கதையில் வரும் அஞ்சலை யின் அவஸ்தை நமக்கும் பிடிபடுகிறது. உணர்த்தும் விஷயத்தில் கவனம் பெறுகிற குறும்படம்!
வேலி ஒடக்கான்!
www.perumalmurugan.com

மேற்குத் தமிழகத்தின் வாழ்வியலை இலக்கியத் தில் அழுத்தமாகப் பதிவு செய்யும் எழுத்தாளர் பெருமாள் முருகனின் வலைதளம். 'தமிழ் அறிக’ என்ற பொதுத் தலைப்பில் தமிழின் குறிப்பானகுழப் பங்கள், சொற்களின் மூலம், வரலாறு, பயன்படும் விதம், எப்படிச் சரியாகப் பயன்படுத்த முடியும் என்பதுபற்றி அவ்வப்போது தொடர்ச்சியாக எழுதி வருகிறார். கொங்கு வட்டாரச் சொற்கள் குறித்தும் எழுதியிருக்கிறார். ஓணானுக்கு கொங்கு பகுதியில் ஒடக்கான், பெருக்கான் என்று சொல்வார்களாம். கவிதைகள், கட்டுரை கள், சிறுகதைகள், விமர்சனங்கள், தமிழ் ஆய்வு... பல தளங்களில் செறிவான எழுத்துக்களைத் தாங்கியிருக்கும் வலைதளம்!