விகடன் வரவேற்பறை
வி.ஏ.ஓ. தேர்வு மாதிரி வினா-விடை தொகுப்பு: ம.கா.செந்தில்குமார், எஸ்.காயத்ரி
வெளியீடு: விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-2.
பக்கம்: 496 விலை:

230
தமிழக அரசின் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்குத் தயாராகி வருபவர்களுக்கான அவசியப் பெட்டகம். பொது அறிவு, அறிவியல், கணிதம் எனப் பலவற்றில் இருந்து கேள்விகள் எடுக்கப்பட்டு, அதற்கு விடைகளும் அருகருகே தொகுக்கப்பட்டுள்ளன. பொதுத் தமிழ் பகுதிக்கு அதிக பக்கங்கள் ஒதுக்கியிருப்பது சிறப்பு. 'மினி கலெக்டர்’ கனவு காணும் அனைவரும் கட்டாயம் கைக்கொள்ள வேண்டிய புத்தகம்!
உலகை அளக்கலாம்! http://onlineconversion.com/
சட்டை, ஷூ போன்ற பொருட்களில் குறிக்கப்பட்டு இருக்கும் வெளிநாட்டு அளவுகளை நமது சராசரிக்கு எப்படிப் பொருத்துவது என்று புரியாமல் பல சமயங்களில் குழம்பி நின்றிருப்போம். அந்தக் குழப்பங்களை தவிர்க்க, இந்தத் தளத்துக்கு ஒரு விசிட் அடியுங்கள். எடை, தட்பவெப்பம், வேகம், பணப் பரிவர்த்தனை, ஏரியா அளவீடு என நாட்டுக்கு நாடு வேறுபடும் விஷயங்களை ஒப்பிட்டு விளக்குகிறது இத் தளம்!
வினை-எச்சம் இயக்கம்: அழகு மித்திரன்
'உறவாடிக் கெடுக்கும் பிளாஸ்டிக்கை ஒழிப்போம்’ என்று குரல் கொடுக்கும் ஆவணப்படம். 'உலகம் எங்கும் உற்பத்தி செய்யப்படும் 100 மில்லியன் டன் பிளாஸ்டிக் குப்பையில், இந்தியாவின் பங்கு இரண்டு மில்லியன் டன்’, 'பிளாஸ்டிக்கை உணவு என்று நினைத்து உட்கொள்வதால், வருடத்துக்கு 10 கோடி கடல் பறவைகளும், ஒரு லட்சம் திமிங்கிலம் மற்றும் ஆமைகளும் இறந்துபோகின்றன’ என்பனபோன்ற பகீர் தகவல்களை அடுக்குகிறார்கள். கன்னியாகுமரியில் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டு இருப்பதையும், அதை அம்மாவட்ட நிர்வாகம் எப்படிக் கச்சிதமாக அமல்படுத்துகிறது என்பதையும் சுவாரஸ்யமாக விளக்குகிறார்கள். பூவுலகின் மேல் அக்கறை உள்ள/இல்லாத அனைவரும் பார்க்க வேண்டிய படம்!
தமிழ்க் கேணி! http://thamizhkeni.wordpress.com/
அமெரிக்க கலிஃபோர்னியா மாகாணத்தில் செயல்படும் தமிழ்க் கழகம், கலிஃபோர்னியா தமிழ் மாணவர்களுக்கு தமிழ் கற்பிக்க ஏதுவாக அமைத்துள்ள வலைப்பூ. அடிப்படை எழுத்துக்களைக் கற்றுத்தருதல், குழந்தைப் பாடல்களை அசைவுகளுடன் பாடிக்காட்டுதல், நிறங்கள் மற்றும் வடிவங்களுக்கான தமிழ்ப் பெயர்களை அறிமுகப்படுத்துதல் எனப் பல படிநிலைகள் விளக்கப் பட்டு உள்ளன. பொருள்நிமித்தமும் போர்நிமித்தமும் புலம்பெயரும் தமிழர்கள் தங்கள் குழந்தை களுக்கு தமிழ்க் கல்வி அளிக்க உதவும் வலைப்பூ!
மன்மதன் அம்பு இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடல்கள்: கமல்ஹாசன் வெளியீடு: வீனஸ் மியூஸிக் விலை:

99
'நல்லவன்னு யாரைச் சொல்ல? கெட்டவன்னு யாரைச் சொல்ல? நல்லவனைக் கெட்டவனா மாத்துறவன்தான் கெட்டவனோ?’ போன்ற கருத்துக்கள் 'தகுடு தத்தோம்’ பாடல் முழுக்க. ஆங்கிலம், தமிழ் 'கிராஸ் ஓவர்’ பாடல் 'ஹூ இஸ் த ஹீரோ’. மயிலிறகு வருடல் தொனியைப் பறக்கவிட்டு 'ரஃப் அண்ட் டஃப்’ உற்சாகத்துடன் பாடல் பாடியிருக்கிறார் ஆண்ட்ரியா. மென்சோகக் காதல் வரிகள் ஸ்பரிசிக்கும் 'நீல வானம்’ பாடல் மிக மெல்லிய மெலடி ரகம். 'சூடப் பூவத் தருவ, சூடா ஆச தருவ, பாரு மொகப் பருவ, இத்தனைக்கும் காரணம் நீதானே!’ இசையின் மீட்டருக்குள் அழகாகப் பொருந்தி குறும்பு அர்த்தம் தொனிக்கிறது விவேகாவின் வரிகளில் ஒலிக்கும் 'ஒய்ய ஒய்ய ஒய்ய’ பாடல்.
த்ரிஷா குரலில் கமல் கவிதை! பெண்களின் செய்கைகளுக்கு அர்த்தம் சொல்வது முதல் பகுதி. தனது கனவுக் காதலனின் தகுதிகளை ஸ்ரீவரலட்சுமி அம்மனிடம் அடுக்குவது இரண்டாம் பகுதி. 'கழுத்தைக் கவ்வும் பளிச் பற்கள், நாற்றம் இல்லாத வாய், காமக் கழிவு அகற்றுவதில் உதவி, என்றெல்லாம் அடுக்கிவிட்டு இறுதியில், 'உறங்கிக்கொண்டே இருக்கும் உந்தன் அரங்கநாதன் எப்படி?’ என்று வரலட்சுமியிடமே கேட்பது, அக்மார்க் கமல் குறும்பு!
##~## |