விகடன் வரவேற்பறை
சவாரி விளையாட்டு
தொகுப்பு: சி.மோகன்
வெளியீடு: நற்றிணை பதிப்பகம், புதிய எண்: 243கி, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை-5. விலை:

200 பக்கம்: 272

இலக்கியம், நவீன கலை, நாட்டுப்புறக் கலை ஆகியவற்றுக்கான களமாக எழுத்தாளர் சி.மோகன் ஆசிரியராக இருந்து நடத்திய இதழ் புனைகளம். அவ்விதழின் இலக்கியப் பகுதியில் இடம்பெற்ற மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இது.
ஜூலியோ கொர்த்தஸாரின் 'தெற்கு நெடுஞ்சாலை’ கதையில் நவீன வாழ்வில் போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் பிரச்னைகளை அற்புதமாகப் பதிந்திருக்கிறார். மிலன் குந்தேராவின் 'சவாரி விளையாட்டு’ ஒரு காதல் ஜோடி விடுமுறையைக் கொண்டாடும் திட்டத்தோடு வெளியூர் செல்லும் போது அவர்களின் மனங்களில் எழும் விந்தையான எண்ணங்கள் ஒரு விபரீத விளையாட்டுக்கு இட்டுச்செல்வதை சுவாரஸ்யமாக விவரிக்கிறது. யசுனாரி கவபத்தா உருவாக்கிய உள்ளங்கைக் கதைகள் ஜப்பானிய ஹைக்கூ மரபின் தொடர்ச்சி எனலாம். இவை குட்டிக் கதைகள் என்றாலும் அவற்றின் வெளி மிகவும் விரிந்துகிடக்கிறது. இந்தியா வின் மிகச் சிறந்த ஓவியரான பூபன் கக்கரின் பிரசித்திபெற்ற 'போரன் சோப்’ கதையின் பாலுணர்வு கலந்த உரையாடல்களில் ததும்பி வழிகிறது நகைச்சுவை. ஜெர்மானியர்களின் 'தொழில்நுட்பச் சாதனை’யான விஷவாயுக் கிடங்கின் நேரடிப் பாதிப்பில் உருவான மிகச் சிறந்த கதை 'சால்வை’. உலுக்கி எடுக்கும் படைப்பு. இந்தத் தொகுப்பில் கதைகளுடன் அந்தப் படைப்பாளி களின் கலை இலக்கியப் பார்வைகளும் பதிவுசெய்யப்பட்டு இருக்கிறது. ஜூலியோ கொர்த்தஸாரின் நேர்காணல், யசுனாரியின் நோபல் உரை என அவர்களின் படைப்புலகமும் விரிவாக முன்வைக்கப்படுகிறது.
நச்சுக்களைக் கண்காணிக்கிறோம்!
http://toxicswatch.blogspot.in

அணு உலை தொடங்கி, வனங்களை அழிக்கும் 'வளர்ச்சித் திட்டங்கள்’ வரை... அரசாங்கத்தின் அனைத்து வகையான அநீதிகளையும், அதற்கு எதிரான இயக்கங்கள் மற்றும் மக்களின் நடவடிக்கைகளும் இங்கு பதியப்படுகின்றன. சூழலைக் கெடுக்கும் சிமென்ட் கம்பெனிக்கு எதிரான மெக்ஸிகோ மக்களின் போராட்டம், சட்டத்துக்குப் புறம்பாக மக்களுக்கே தெரியாமல் நடத்தப்பட்ட மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தைத் தடுத்து நிறுத்திய ஜார்கண்ட் மக்கள், கூடங்குளம் போராட்டத்தின் இன்றைய நிலவரம்... என உள்ளூர் தொடங்கி உலகளாவிய அளவில் போராடும் மக்க ளின் குரலாக இருக்கிறது 'நச்சுக்களைக் கண்காணிக் கும்’ இந்த வலைதளம்!
காதலும் காதல் சார்ந்ததும்...
www.mydearvalentine.com

'வாங்க காதலிக்கலாம்!’ என்று காதல் டிப்ஸ்களை அள்ளி வீசும் தளம். நட்பின் இடையே ஒளிரும் காதல் சிக்னல்களை உணர்வதில் தொடங்கி, காதலன்/காதலியுடனான சண்டையைச் சமாதானப்படுத்தும் வழிகள் வரை வகை வகையாக வழிகாட்டுகிறார்கள். இரவுகளில் ஆளரவமற்ற சாலைகளில் துணையுடன் திடீர் ட்ரிப் அடியுங்கள், உங்கள் துணையிடம் இருக்கும் நல்ல விஷயத்தை அடிக்கடி பாராட்டுங்கள், முன்னாள் காதலியின் நினைவுகளை மறப்பது எப்படி?, முன்னாள் காதலனின் தொல்லைகளைத் தவிர்ப்பது எப்படி... 360 டிகிரியில் காதலின் அனைத்து அம்சங்கள் குறித்தும் டிப்ஸ் தெளிக்கிறார்கள்!
அம்மாவின் கைப்பேசி
இசை: ரோஹித் குல்கர்னி
வெளியீடு: ஸரிகம விலை:

99

'தமிழ் இசையமைப்பாளர்களுக்கு இசையமைக்கத் தெரியவில்லை’ என்று முழங்கிய தங்கர்பச்சான், இந்தி இசைஅமைப்பாளர் ரோஹித் குல்கர்னியுடன் கூட்டணி அமைத்திருக்கும் ஆல்பம். 'என்ன செஞ்சிப் போற...’ பாடலின் இடையில் இழையும் நாகஸ்வரம்... அழகு. 'இது நீ பார்க்கும் நிலவென்றுதான் - அதைத் தூங்காமல் நான் பார்க்கிறேன்’ என்று காதலின் பிரிவையும் சுகத்தையும் ஒரு சேரச் சொல்கின்றன நா.முத்துக்குமாரின் வரிகள். 'அம்மா தானே..’ பாடலில் 'சிறுநாழிகை தூங்கவில்லை உனக் காகத்தானடா... பெருமூச்சிலே சோறாக்கினாள் உனக்காகத்தானடா... கடல் வாங்கி அழுதாள் இவள்தான்’ என்று அம்மா புகழ் பாடும் ஏகாதசியின் வரிகள்... உருக்கம்! 'அம்மா பாடல்களில்’ இந்தப் பாடலுக்கும் முக்கிய இடம் உண்டு. தங்கர்பச்சான் படத்தில் வழக்கமாக இடம்பெறும் துள்ளல் இசைப் பாடலாக ஒலிக்கும் 'போடு தில்லாலே’ பாடலுக்கு புஷ்பவனம் குப்புசாமி, ராகினி ஸ்ரீயின் குரல்கள் செம சுதி சேர்க்கின்றன. 'நெஞ்சில் ஏனோ’ பாடல் அமைதியாக வசீகரிக்கிறது. கரகாட்ட இசை - மேற்கத்திய இசைக் கலவை அட்டகாசம். முன் பாதியில் கிராமிய மணமும் பின் பாதியில் அந்நிய அலட்டலு மாகத் தாளமிடவைக்கும் இசை. படத்தின் தீம் மியூஸிக் கேட்டவுடன் ஈர்த்தாலும், 'பிறை தேடும் இரவிலே’ பாடலின் சாயல் தொனிக்கிறது.
தமிழ் இசையமைப்பாளர்கள் பாடம் கற்றுக் கொள்ளும் அளவுக்கான 'சங்கதி’கள் எதுவும் இல்லையே தங்கர்!
'உங்களுக்காக...’
இயக்கம்: மு.கலைவாணன்

குழந்தைகளுக்குக் கதை சொல்லும் பல குறுந் தகடுகள் வந்துவிட்டாலும், உள்ளடக்கத்திலும், கதை சொல்லும் வடிவத்திலும் வேறுபட்டு இருக்கிறது இந்த முயற்சி. அழிந்து வரும் கலை களில் ஒன்றான பொம்மலாட்டத்தை அடிப்படை யாகக்கொண்டு கதாபாத்திரங்களை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர். ஒரு கதை சொல்லி, கதை கேட்க மூன்று குழந்தைகள். 'பேசிக்கொண்டே இருக்கிறாரே கதைசொல்லி’ என்று நாம் நினைக்கும்போதே, கதைக்குள் நுழைந்துவிடுகிறார். மருது சகோதரர்கள்குறித்து ஒரு கதை, உழைப்பை நம்பா மல் அதிர்ஷ்டத்தை நம்பி வாழும் ஒரு சோம்பேறி திருந்திய கதை இன்னொன்று. கார்ட்டூன் பார்க்கும் குழந்தைகளுக்கு வெறுமனே கதை சொன்னால் சரிப்படாது என்று புரிந்துகொண்டு, கிட்டத்தட்ட கார்ட்டூன் ஓவியங்கள் போன்றே பொம்மலாட்டக் கதை மாந்தர்களை வைத்திருப்பது அழகு. அவற் றுக்கான உடை தேர்வும் பொருத்தம். கே.கர்ண னின் இசையும் குழந்தைகளை ஈர்க்கும்அளவுக்கு எளிமையாக இருக்கிறது. கதை சொல்லும் பின்ன ணிக் குரல்களில் தெரியும் நாடகத்தனத்தைத் தவிர்த்து இருக்கலாம். 'ஆங்க்ரி பேர்ட்ஸ்’ குழந்தைகளிடம் மீண்டும் கதை கேட்கும் சுவாரஸ்யத்தைத் தூண்டும் முயற்சி.