Published:Updated:

அவள் சினிமாஸ் துப்பாக்கி

வே.கிருஷ்ணவேணி, படங்கள்: ஆ.முத்துக்குமார்

##~##

''விஜய், இந்தப் படத்திலாவது ஏமாற்றாம இருப்பாரா..?'', ''ஏ.ஆர். முருகதாஸ் - விஜய் காம்பினேஷன் நிச்சயமா நல்லா இருக்கும்..!'', ''இந்த தீபாவளிக்கு 'துப்பாக்கி’ துறுதுறுனு வெடிக்குமா..?''

- நம் வாசகிகள் ஆறு பேரும் இப்படி பலவித எதிர்பார்ப்புகளுடன் 'துப்பாக்கி’ படம் பார்க்க வந்திருந்தனர் சென்னை, வடபழனியிலிருக்கும் கமலா தியேட்டருக்கு!

ராணுவ அதிகாரியான விஜய், இந்திய ஆர்மியின் சீக்ரெட் இன்வெஸ்டிகேஷன் டிபார்ட்மென்டிலும் இருக்கிறார். விடுமுறையில் செல்கிறார் விஜய். அவர் பயணம் செய்யும் பேருந்தில் ஒருவரின் பர்ஸ் காணாமல் போக, திருடனைத் துரத்திப் பிடிக்கிறார். அந்த நேரம் அந்தப் பேருந்து வெடித்துச் சிதற, பிறகுதான் பிடிபட்டவன் தீவிரவாதி என்று தெரியவருகிறது. நூல் பிடித்துச் செல்லும் விஜய், வில்லன் வித்யுத் ஜம்வலை நெருங்கி, மும்பையின் 'ஸ்லீப்பர் செல்' தீவிரவாதிகளை அழிக்கும் ஹாட் த்ரில்லர் ஆக்ஷன் மூவிதான்... 'துப்பாக்கி’! இடையிடையே ரொமான்ஸ் ஸ்பேஸ் நிரப்புகிறார்... காஜல் அகர்வால்!

சுமித்ரா பிரேம்குமார், இல்லத்தரசி: ''தேசத்தைக் காக்கும் ராணுவத்தின் கம்பீரத்தை, கஷ்டத்தைச் சொல்லும் படம். அந்நியர் கேம்ப்ல அகப்பட்டு அண்ணன் இறந்த பதினான்காம் நாள், தம்பி ராணுவத்தில் சேர்வது, 'ஆயிரம் பேரை அழிக்கிறவனே சாகும்போது, ஆயிரம் பேரை காக்க நாம ஒருத்தர் ஏன் சாகக் கூடாது?’னு வர்ற வசனம், தீவிரவாதிகளை அழிக்கும் போர்ல வீரர்கள் துணியும் சாகசங்கள்னு... நம் ராணுவத்தின் மேல மரியாதை ஏற்படுத்துது படம். காஜல், கொஞ்சம் ரோல்தான்னாலும் நல்லாவே செய்திருக்கார். எஸ்.ஐ. கேரக்டர்ல வர்ற சத்யனோட நகைச்சுவை... ஓகே. ஆனா, போலீஸ் ரோலுக்கு இன்னும் கொஞ்சம் 'கெத்’ வேணாமா..?''

அவள் சினிமாஸ் துப்பாக்கி

சுமித்ரா பஞ்ச்: ''நாட்டுப்பற்றுப் படம் கொடுத்த விஜய் - ஏ.ஆர் முருகதாஸ் டீமுக்கு சல்யூட்!''

அவள் சினிமாஸ் துப்பாக்கி

லஷ்மி, இல்லத்தரசி: ''சந்தோஷ் சிவனோட ஒளிப்பதிவு ஒவ்வொரு ஃப்ரேமிலும் ரசிக்க வைக்குது. ஸ்ரீகர் பிரசாத்தோட எடிட்டிங், ஆக்ஷன் கதையோட வேகத்தை கடைசி வரை தக்கவைக்குது. இவங்க ரெண்டு பேரோட உழைப்புக்கு ஒரு ஸ்பெஷல் பொக்கே. ஆனா, விஜய்யும் காஜலும் சந்திக்கும்போதெல்லாம் டூயட் வர்றது... ரொம்பவே போர். ராணுவம்ங்கற கருவை வைத்து நகரும் கதையில, ராணுவ வீரர்களின் குடும்பங்களின் நிலையை, வசனத்தில் மட்டும் சொல்லாம காட்சியாவும் காட்டியிருந்தா, இன்னும் உணர்வுப்பூர்வமா இருந்திருக்கும்!''

லஷ்மி பஞ்ச்: ''உங்களைப் பெத்தாங்களா, செஞ்சாங்களா காஜல்?! (பசங்க சொல்ல வேண்டியதை அவங்க சார்பா நாங்க சொல்லிக்கிறோம்!)

தீபா ஸ்ரீநாத், இல்லத்தரசி: ''ஆர்மி ஆபீஸர்களின் தங்கைகளை திட்டம் போட்டு ஒவ்வொருவராக தீவிரவாதிங்க கடத்துறப்ப... இது தெரிஞ்சு, கடத்தல்காரங்க லிஸ்ட்ல இருக்கற மற்றொரு ஆபீஸரோட தங்கைக்கு பதிலா, தன் தங்கையை விஜய் அனுப்பி வைத்து, தீவிரவாதியைக் கண்டுபிடிக்கற நேர்த்தி... அருமை! எதுக்காக தன்னை அனுப்பி வைக்கிறாங்கனுகூடத் தெரியாம, 'எனக்கு நீ த்ரீ ஃபோர்த் பேன்ட் வாங்கித் தருவியாடா..!’னு தங்கை கேட்கற இடத்தில் விஜய்யின் நடிப்பு ஏ க்ளாஸ். இந்த தீபாவளிக்கு இது விஜய்யோட சரவெடி!''

தீபா பஞ்ச்: ''விஜய்யோடு வர்ற நாய்க்கு கௌர வேடம் போல. விஜய் வர்றதுக்கு முன்னயே வந்து நின்னுடுதே! ஐ லைக் தட் டாக்!''

சன்மதி, கல்லூரி மாணவி: ''ஒரு என்டர்டெயின்மென்ட் மூவியா மட்டும் இல்லாம, ராணுவத்துக்கு சல்யூட் சொல்ல வைக்கிற படமா இருக்கு. சீரியஸான கதையில அங்கங்கே காமெடி தூவி, சலிக்காம பார்த்துக்கிட்டதுக்கு தாங்க்ஸ் சொல்லணும். வில்லன் வித்யுத் ஜம்வல், என்ன அழகு..! ஹாரிஸ் ஜெயராஜ் கம்போஸிங்ல வழக்கம்போல யூத்தை டார்கெட் செய்திருக்கார். ஆனா, எடுபடற மாதிரி தெரியல.''

சன்மதி பஞ்ச்: ''ரொம்ப நாளைக்கு அப்புறம்... ஒரு விஜய் ஹிட்!''

அவள் சினிமாஸ் துப்பாக்கி

நந்தினி, இல்லத்தரசி: ''காஜலுக்கு, டப்பிங் வாய்ஸ் மேட்ச் ஆகல. தான் லவ் பண்ணுற பொண்ணுகிட்டகூட விஜய் உண்மையைச் சொல்லாம இருக்கிறதை ஏத்துக்க முடியல. 'கூகுள்’ பாட்டு மட்டும்தான் மனசுல நிக்குது. க்ளைமாக்ஸ் நம்புற மாதிரி இல்ல. ஜெயராம் இந்தப் படத்துக்கு எதுக்குனே தெரியல. இப்படி பல விஷயங்கள் தொட்டும் தொடாமலும் இருந்தாலும்... மொத்தத்தில் ரசிக்க வைக்கிறதுதான் 'துப்பாக்கி’யோட பலம்!''

நந்தினி பஞ்ச்: ''விஜயோட பஞ்ச் டயலாக்ஸ்... அப்பப்ப நம்மள பஞ்சராக்குது!''

லஷ்மி ராகவன், இல்லத்தரசி: ''ஆர்மி பேஸ்டு மூவி விஜய்க்கு புதுசு. ஆனாலும் அசத்தியிருக்கார். இப்படிப் படங்கள் தொடர்ந்து கொடுங்க விஜய். காதல் ஸீன்கள்தான் கடமைக்கு வந்து போகுது. காஜல், எக்ஸ்பிரஷன்ஸ்ல முன்னேறியிருக்கார். வில்லன் செலக்ஷன் அட்டகாசம்! விஜய்யோட குடும்பம், நிஜ குடும்பம் போல அழகா அமைஞ்சுருக்கு. டிவிஸ்ட்டுகள் நிறைய வெச்சு, நம்மை டயர்டாகாம கூட்டிப் போறது, படத்தோட ப்ளஸ்.''

லஷ்மி ராகவன் பஞ்ச்: ''துப்பாக்கி... நல்லாவே சுட்டிருக்கு!''

நறுக் சுறுக்கென்று கலந்துரையாடி முடித்த பிறகு, ''இதெல்லாம் சரி... படத்தை மையமாக வெச்சு சர்ச்சைகள் கிளம்பி இருக்கே... அது என்ன வாகும்?'' என்று பேசிக்கொண்டே கலைந்தனர்.

அவள் சினிமாஸ் துப்பாக்கி