Published:Updated:

அவள் சினிமாஸ்

லைஃப் ஆஃப் பை வே.கிருஷ்ணவேணி,படங்கள்: வீ.நாகமணி

##~##

'ஆஸ்கார்’ அவார்டு இயக்குநர் ஆங் லீ தந்திருக்கும் கிளாஸிக்கான ஆங்கில த்ரீ டி படம், 'லைஃப் ஆஃப் பை’ (Life of PI)!

பை, தன் வாழ்வின் முக்கியமான சம்பவத்தை ஒரு எழுத்தாளரிடம் பகிர்ந்துகொள்ளும் ஃப்ளாஷ்பேக்கில் நகர்கிறது படம்!

பை, தன் பெற்றோருடன் (தபு, அடில் ஹுசைன்) பாண்டிச்சேரியில் இருக்கிறான். அப்பா ஜூ வைத்திருப்பதால், விலங்குகளுடன் பழகுவதிலும், அவற்றைப் புரிந்துகொள்வதிலும் அன்பும் ஆர்வமும் அதிகம். ஆனால், எல்லா விலங்குகளும் மனிதர்கள் பழகுவதற்கு ஏற்றதல்ல என்று அறிவுறுத்திக் கொண்டே இருக்கும் அப்பா, ஜூ கூண்டில் இருக்கும் புலி, ஓர் ஆட்டை கொன்று தின்பதை செய்முறை விளக்கமாகவே பைக்கு காட்டுகிறார். மதங்கள், தெய்வங்கள் குறித்த மயக்கம் மற்றும் குழப்பம் வேறு பையை ஆட்டுவிக்கின்றது.

அவள் சினிமாஸ்

இதற்கிடையில், கனடாவில் அப்பாவுக்கு நல்ல வாய்ப்பு ஒன்று கிடைக்கவே, ஜூ விலங்குகளுடன் கப்பலில் பயணிக்கிறது பையின் குடும்பம். திடீரென்று ஏற்பட்ட விபத்து, கப்பலை மூழ்கடிக்க... ஒரு 'லைஃப் போட்’டில் தப்பிக்கிறான் பை. கூடவே... கழுதைப்புலி, வரிக்குதிரை, ஒராங்குட்டான், புலி ஆகியவையும். விலங்குகளுக்கு இடையேயான மோதலில், எஞ்சி இருப்பது பை மற்றும் புலி மட்டுமே! புலியிடமிருந்து அவன் எப்படி தப்பித்தான், புலி என்ன ஆனது, எப்படி கரையை அடைந்தான் இதுதான் கதை. பை மற்றும் புலி இடையிலான நுட்பமான உணர்வுகளே, படத்தின் முதுகெலும்பு. இதை வைத்துக் கொண்டு த்ரில்லர், அட்வென்சர், லைஃப், லவ், ஃபிலாசபி என்று எல்லாமும் பேசியிருக்கிறார் டைரக்டர் ஆங் லீ!

கல்லூரி மாணவிகளான ஷைனி, உத்ரா, பள்ளி மாணவிகளான திவ்யஸ்ரீ, மகாலட்சுமி, மற்றும் குடும்பத் தலைவிகளான விஜயா, நப்பினை பாலாஜி ஆகிய ஆறு பேரும் சென்னை, சிட்டிசென்டர் ஐநாக்ஸ் தியேட்டரில் 'லைஃப் ஆஃப் பை’ பார்த்த பின் தந்த விமர்சனம் இதோ...

நப்பினை பாலாஜி: ''எழுத்தாளர் யான் மார்டல் எழுதின 'லைஃப் ஆஃப் பை’ நாவலை படமாக்கியிருக்கிறார் ஆங் லீ. தன் முயற்சியில் வெற்றியும் அடைஞ்சுருக்கார். பை, ரிச்சர்டு பார்க்கர் (புலியின் பெயர்)... இவங்க ரெண்டு பேரும்தான் ரெண்டு மணி நேரப் படத்தையும் ஆளுமை செய்றாங்க. ஆனா, கொஞ்சம்கூட அலுப்பு தட்டல. 3 டி எஃபக்ட் பெயருக்காக இல்லாம, படத்தில் அழகா, அழுத்தமா பயன்படுத்தப்பட்டிருக்கு. குறிப்பா, நடுராத்திரியில் வரும் திமிங்கலக் கூட்டங்களும், பறக்கும் மீன்கள் கூட்டமா வந்து பையை தாக்கும் காட்சிகளும் அவ்வளவு தத்ரூபம். வாழ்க்கையின் விளிம்புக்கே செல்லும்போது, பை கொண்டிருந்த மதக்கொள்கைகள் உருமாறுவதையும், தன் உயிர் காக்க, அவன் நடத்தும் போராட்டங்களையும் மனதில் 'திக்திக்’ என்று பதிய வைக்கிறார் இயக்குநர்.''

அவள் சினிமாஸ்

நப்பினை பஞ்ச்: ''குழந்தைகள், பெரியவர்கள்னு குடும்பத்தோட பார்க்கலாம்!''

உத்ரா: ''படத்தோட கேரக்டர் செலக்ஷன் பிரமாதம். டீன் ஏஜ் பை கேரக்டர்ல வர்ற சூரஜ் ஷர்மா, நம்ம வீட்டுப் பையன் மாதிரி மனசுக்குள் வந்து உட்கார்ந்துட்டார். வெகுளி, குறும்பு, அழுகை, அமைதினு அவ்வளவு நேர்த்தியா எக்ஸ்பிரஷன்ஸ் தர்றார். தபுவோட ரோல் கொஞ்சமே என்றாலும், நிறைவா செய்திருக்காங்க. தன் பையனுக்கு விலங்குகளோட அபாய குணத்தைப் புரியவைக்கப் போராடும் அப்பாவா, அடில் ஹூசைன் மனதில் நிற்கிறார். 'இறுதியில் ஆனந்தியை பை சந்திச்சுடணும்...’னு நம்மை தவிக்க வைக்கறாங்க ஆனந்தியா வர்ற ஷ்ரவந்தி சாய்நாத். அவங்களோட நடனம்... அழகு!''

உத்ரா பஞ்ச்: ''பை கூட ரெண்டு மணி நேரம் இருந்த ஃபீல் இருக்கு தியேட்டர் விட்டு வெளிய வரும்போது!''

திவ்யஸ்ரீ: ''விஷ்ணு... எனக்கு அல்லாவைக் காட்டியதற்காக நன்றி, ஏசுவைக் காட்டியதற்காக நன்றினு சிறுவன் பை சொல்வதை ரசிச்சாலும், ஒரு சிறுவனால இவ்வளவு தத்துவார்த்தமா யோசிக்க முடியுமானு தோணுது. அதேபோல அந்த ஃப்ளாஷ்பேக் யுக்தியும் கொஞ்சம் போரடிக்குது. அந்த புலி... வாவ்! ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்ல மிரட்டிட்டாங்க. நீண்ட கடல் பயணம், நல்ல அட்வென்சர்.''

திவ்யஸ்ரீ பஞ்ச்: ''அவங்களோட டீம் வொர்க்குக்கு ஒரு பொக்கே!''

விஜயா: ''நம்பிக்கையையும் அன்பையும் பேசும் படம், 'லைஃப் ஆஃப் பை’. படத்தில் உணர்வுப்பூர்வமான காட்சிகள் நகர நகர, என்னையே நான் நேசிக்க ஆரம்பிச்சதுபோல இருந்தது. கேமரா கடலுக்கடியில் காட்டுற அமைதியும் அழகும் சிலிர்க்க வைக்குது. தொடர்ந்து கடல் நீரில் ஜீவிக்கும்போது... உடலில் எப்படியெல்லாம் சிராய்ப்புகள், அரிப்புகள் ஏற்படும்னு நிறைய டீட்டெய்ல்ஸ் சொல்லியிருக்காங்க. பொதுவா மிருகங்களை வைத்து கதை அமைக்கும்போது, திரையில் வரும் விலங்கை கொஞ்சம் மனித குணத்தோட காட்டி மிகைப்படுத்துவாங்க. ஆனா, இந்தப் படத்துல புலியை, புலியாவே பதிவு செய்திருக்கிறது... சபாஷ்!''  

அவள் சினிமாஸ்

விஜயா பஞ்ச்: ''கிங்காங் மாதிரி... இந்த ரிச்சர்டு பார்க்கரும் (புலி) மறக்க முடியாத கேரக்டரா மக்கள் மனசுல நிற்கும்!''

மகாலட்சுமி: ''படத்தின் ஆரம்பமே பை ஃப்ளாஷ்பேக் சொல்வதா இருக்கறதால, அவன் உயிரோட இருக்கறது நிச்சயமாயிடுது. அதனால புலிகிட்ட இருந்து பை பிழைப்பானா, இல்லையா என்பதில் எந்த சஸ்பென்ஸும் இல்லை. ஆனாலும், எப்படிப் பிழைச்சான், என்னதான் நடந்தது என்ற எதிர்பார்ப்பைத் தூண்டி படம் பார்க்க வைக்கிறார் டைரக்டர். லைஃப் போட்ல கொஞ்ச நேரம் கழிச்சே புலியும் இருக்கறதை பை கவனிக்கும்போது, நமக்கும் நெஞ்சு திக்திக்!''

மகாலட்சுமி பஞ்ச்: ''வளவள பேச்சுக்களை குறைச்சிருக்கலாம்!''

ஷைனி: ''அனிமேஷன் ப்ளஸ் அட்வென்சரஸ் படம்னு போனா, அதை டெக்னிக்கலா மட்டுமே பயன்படுத்தி, கதை அடிப்படையில் சினிமாத்தனம் இல்லாத உணர்வுப்பூர்வமான படமா 'லைஃப் ஆஃப் பை’ படைச்சுருக்கார் ஆங் லீ. புலி ஆபத்தானது என்பதைப் புரிய வைக்க, பையோட அப்பா, அந்தப் புலி ஆட்டை கொன்று குதறி சாப்பிடுறதைக் காட்டுறார். குழந்தைகள் பார்த்தா... கோரமாத்தான் இருக்கும். அந்தக் காட்சியைத் தவிர்த்திருக்கலாம்.''

ஷைனி பஞ்ச்: ''கொடுத்த காசுக்கு... வித்தியாசமான அனுபவம் கியாரன்டி!''

அவள் சினிமாஸ்

''முதல்ல படிப்பு... அப்புறம் நடிப்பு!''

'லைஃப் ஆஃப் பை’ படத்தில் 'ஆனந்தி’யாக வரும் ஷ்ரவந்தி சாய்நாத், சென்னைப் பெண். அண்ணாநகர், எஸ்.பி.ஓ.ஏ ஜூனியர் காலேஜில் ப்ளஸ் டூ காமர்ஸ் படிக்கும் மாணவி.

''அப்பா சாய்நாத், பிஸினஸ் செய்துட்டு இருக்கார். கிருஷ்ணகிரிக்காரர். அம்மா கற்பகம் பி.எஸ்.என்.எல்-ல வேலை பார்க்கறாங்க. திருநெல்வேலிதான் சொந்த ஊர். அண்ணன் இன்ஜீனியரிங் படிக்கிறாங்க. சின்ன வயசுல இருந்தே டான்ஸ் மேல காதல். அஞ்சு வயசுல கே.கே.நகர் ஸ்ரீதேவி மித்ராலயா டான்ஸ் ஸ்கூல்ல சேர்த்துவிட்டாங்க. 12 வருஷமா டான்ஸ் கத்துக்கிட்டிருக்கேன். கிளாசிக்கல், ஃபோக், வெஸ்டர்ன்னு எல்லாம் தெரியும்'' என்ற ஷ்ரவந்தி, 'லைஃப் ஆஃப் பை’ பற்றிப் பேசினார்.

அவள் சினிமாஸ்

''ஸ்ரீதேவி ந்ருத்யாலயா டான்ஸ் கிளாஸ் டீச்சர் ஷீலா உன்னிகிருஷ்ணன்கிட்ட, 'லைஃப் ஆஃப் பை’ படத்தில் நடிக்க நடனம் தெரிந்த பெண் வேணும்னு கேட்டிருந்தார் டைரக்டர் ஆங் லீ. மொத்தம் மூணு பேரோட போட்டோக்களையும், வீடியோவையும் அவருக்கு அனுப்பி வெச்சாங்க டீச்சர். என்னை டிக் பண்ணி, தைவான் வரச் சொன்னார் டைரக்டர், ஒரு ஸீன் நடிச்சுக் காட்டச் சொல்லி, டிக் அடிச்சுட்டார்!

நடிப்பில் பெரிய ஆர்வமெல்லாம் இல்லைனாலும், ஆங் லீயோட படம், டீசன்ட்டான ரோல்ங்கறதால 'ஓ.கே’ சொல்லிட்டோம். அப்போ 10-ம் வகுப்பு போர்டு எக்ஸாம் நெருங்கிட்டிருந்ததால, நடிப்பு, படிப்புனு ரொம்பவே சிரமப்பட்டேன். கிளாஸ் டீச்சர் கீதா மிஸ், பிரின்சிபால் செல்வராணி மேம் சப்போர்ட்டிவ்வா இருந்ததால... பேலன்ஸ் செய்தேன்'' என்று புருவங்களை நடனமாட வைத்தவரிடம், நடிப்பு அனுபவம் கேட்டோம்.

''ஒரு ஷாட்டுக்கு இத்தனை ஆங்கிள் வைத்து கஷ்டப்பட்டு எடுக்கணுமானு வியந்து போனேன். என் டான்ஸை டைரக்டரில் இருந்து ஹீரோ வரை எல்லாரும் ரசிச்சுப் பாராட்டினது மறக்க முடியாத அனுபவம். மூணு வாரம் என்னுடைய போர்ஷன் மட்டும் எடுத்தாங்க. இன்னும் சில ஸீன்ஸ் தேவை இருக்குனு திரும்பவும் தைவானுக்கு வரச் சொன்னாங்க. டென்த் எக்ஸாம் நேரம்கிறதால போக முடியல. 'இட்ஸ் ஓ.கே’னு அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டாங்க. படம் வந்ததும் பாராட்டு மழையில் தினமும் நனைஞ்சுட்டு இருக்கேன். படத்தில் நடிக்க நிறைய அழைப்புகள் வருது. முதல்ல படிப்பை முடிக்கணும். நல்ல ரோல் வந்தால் நடிப்பேன்!''

- அழகாகச் சிரிக்கிறார் 'ஆனந்தி’!