Published:Updated:

அவள் சினிமாஸ்

வே. கிருஷ்ணவேணி,படம்: சொ.பாலசுப்ரமணியன்

##~##

'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ - தலைப்பிலேயே கதை சொல்வதை சின்ஸியராக செய்திருக்கிறார் இயக்குநர் பாலாஜி தரணிதரன்!  

கதையின் நாயகன் பிரேம் (விஜய் சேதுபதி), தன் காதலி தனலட்சுமியை (காயத்ரி), இரு குடும்பத்தின் ஒப்புதலோடு திருமணம் செய்ய இருக்கிறார். அடுத்த நாள் ரிசப்ஷன். அதற்கடுத்த நாள் திருமணம். இந்த நேரத்தில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடப் போக, கேட்ச் செய்ய முயற்சிக்கும்போது கால் ஸ்லிப் ஆகி, கீழே விழுந்து பின் மண்டையில் அடி விழுகிறது. மெள்ள எழும் அவருக்கு... கடந்த சில நாட்களின் நினைவுகள் தப்புகிறது.

'என்னாச்சு... கிரிக்கெட் விளையாண்டோம்... நீதானே அடிச்சே... பால் மேல போச்சு... கேட்ச் பிடிக்கலாம்னு பின்னாடியே போனேன்...  விட்டனா... கால் ஸ்லிப் ஆகி விழுந்துட்டனா... இங்க அடிபட்டிருக்கும்... இங்கதான் மெடுலா ஆப்லாங்கேட்டா இருக்கு' என்று திரும்பத் திரும்பச் சொல்கிறார்.

அவள் சினிமாஸ்

ஏதோ ஆகிவிட்டது என்பதை உணர்ந்து, டாக்டரிடம் அழைத்துச் செல்கிறார்கள் நண்பர்கள். 'ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ்' என்று சொல்லும் டாக்டர், 'சீக்கிரமே நினைவு திரும்பும்' என்கிறார். காதலி பற்றி எந்த நினைவும் இல்லாத சூழலில்... பிரேம், தனலட்சுமி மற்றும் இரு குடும்பத்தார் என அனைவரையும் சமாளித்து, திருமணத்தை திட்டமிட்டபடி நடத்தி முடிக்க நண்பர்கள் படும்பாடும், போடும் நாடகங்களுமே... படம்!

நம் வாசகிகள் தீபா, சித்ராதேவி, கிருஷ்ணா, ரிட்டு, பவித்ரா மற்றும் ரஞ்சிதா ஆகியோர்... சென்னை, அம்பா ஸ்கைவாக், பி.வி.ஆர். தியேட்டரில் படம் பார்த்து வெளிவந்தபோது, அத்தனை பேரிடமும் வயிறு குலுங்க சிரித்த சோர்வு! அவர்களின் விமர்சனம் இதோ...

தீபா, (தனியார் நிறுவன ஊழியர்) : ''லோ பட்ஜெட்டில் சிம்பிளா ஹிட்டடிக்கும் சூப்பர் படங்களோட வரிசையில, இப்போ 'என்கேபிகே' (நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்) படமும் இணையுது. ஒரு காமெடி கதை, கொஞ்சம் கேரக்டர்ஸ், சிரிக்க சிரிக்க டயலாக்ஸ்... இதை வைத்தே சிக்ஸர் அடிச்சுருக்கார் இயக்குநர். குத்துப் பாட்டு, சண்டை, சென்டிமென்ட்ஸ் எதுவுமே இல்ல. பொண்ணுங்கள டீஸ் பண்ற வசனம் வெச்சு தியேட்டரில் விசில் வாங்குற தரக்குறைவும் இல்லை. முழுக்க முழுக்க சிரிக்க வைக்க முயற்சி செஞ்சு, வெற்றியும் அடைஞ்சுருக்காங்க.''  

தீபா பஞ்ச்: ''ஹீரோ, நண்பர்கள், சலூன் கடை பையன், ஹீரோவோட அப்பா, அம்மா, பெரியப்பானு சின்ன கேரக்டர்கள் வரைக்கும் கேரக்டரைசேஷன் அருமை!''

சித்ரா தேவி (குடும்பத் தலைவி) : ''ஹீரோவோட பிரச்னைக்கு 'மெடுலா ஆப்லாங்கேட்டா’னு (னீமீபீuறீறீணீ ஷீதீறீஷீஸீரீணீtணீ) படத்துல பேர் சொல்றாங்க. இந்தப் பெயரை இனி சீரியஸான இடத்தில் கேட்டாகூட சிரிச்சுடுவேன். அந்த அளவுக்கு இதை வெச்சே படத்துல நம்மை பல தடவை சிரிக்க வைக்கறாங்க. ஹீரோ விஜய் சேதுபதி 'தென்மேற்குப் பருவக்காற்று’, 'பீட்ஸா’, 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’னு தன்னோட கிராஃபை ஏத்திட்டே போறார். வாழ்த்துக்கள். ஹீரோயின் காயத்ரிக்கு, படத்தில் வேலையே இல்லை. நண்பர்கள், மற்ற கேரக்டர்ஸ்னு அத்தனை பேரையும் புதுமுகங்களா நடிக்க வெச்சாலும், பாஸ் பண்ண வெச்சுட்டார் இயக்குநர்''.

சித்ரா பஞ்ச்: ''ரெட்டை அர்த்தம் இல்லாத, குடும்பத்தோட உட்கார்ந்து பார்க்கக் கூடிய படம்.''

கிருஷ்ணா (கல்லூரி மாணவி): ''ஒரு படத்தோட முதுகெலும்பு கதையும், அதுக்கு இயைந்து போற பின்னணி இசையும்தான். அந்த விஷயத்துல 'நச்’சுனு வேலையைச் செய்திருக்கார் இசையமைப்பாளர் வேத் சங்கர். சினிமோட்டோகிராஃபர் பிரேம்குமார், படத்தில் தன் பங்கை நிறைவா செய்திருக்கார். கிரிக்கெட் விளையாடும்போது அடிபடுறது, 'மெடுலா ஆப்லாங்கேட்டா' அளவுக்குப் போகுமானு தோணுது. அதேபோல, படம் கொஞ்சம் ஸ்லோவா போற ஃபீலையும் தவிர்க்க முடியல. செகண்ட் ஹாஃப்ல சிரிக்க வெச்சு சரிகட்டுறாங்க.''

கிருஷ்ணா பஞ்ச்: ''ஒரு தடவை பார்க்கலாம்''.

ரிட்டு (கல்லூரி மாணவி) : ''அஞ்சு பாட்டு, நாலு ஃபைட், கொஞ்சம் காமெடி, ஹீரோயிஸம், ஹீரோயின் கிளாமர்... இதையெல்லாம் உடைச்சு, இப்படி படம் எடுத்தாலும் சக்சஸ் ஆகும்னு நிரூபிச்சுருக்காங்க, 'என்கேபிகே’ டீம். விஜய் சேதுபதியோட நண்பர்களா வர்ற மூணு பேரும் காமெடியில கலக்கி எடுத்திருக்காங்க. 'காதல்ங்கறது ஆழ்மனசுல அடிச்ச ஆணி மாதிரி, மரணப் படுக்கையிலும் மறக்காது...’னு 'பக்ஸ்’ சொன்ன பிறகு, ரிசப்ஷன் மேக்-அப்போட காயத்ரி வந்து நிற்க, 'ப்பா... யார்றா இந்தப் பொண்ணு? பேய் மாதிரி இருக்கு!’னு சேதுபதி ஷாக்காக... ஹிஹிஹிஹி!

ரிட்டு பஞ்ச்: ''உண்மைக் கதையை... உண்மையா கொடுத்திருக்காங்க.'' (சினிமோட்டோகிராபர் பிரேம்குமாருக்கு நிஜமாகவே ஏற்பட்ட பிரச்னைதான், படத்தின் கதைக்கரு)!

பவித்ரா (கல்லூரி மாணவி) : ''ஹீரோவுக்கு பிரச்னை இருக்கறத மறைக்கறதுக்காக நண்பர்கள் போடுற கூத்து ஓ.கே... ஆனா, அத்தனை சொந்தக்காரங்க நிறைஞ்சுருக்கற கல்யாண மண்டபத்துல, ஒருத்தருக்குக் கூடவா சந்தேகம் வராது. இப்படி சில லாஜிக் கேள்விகள் எழுந்தாலும், வகைதொகை இல்லாம வரிசை கட்டுற காமெடி, எல்லாத்தையும் மறக்கச் செய்யுது. ஏற்கெனவே பங்காளி பிரச்னையில் இருக்கும் உறவினரை, மெமரி லாஸில் இருக்கும்போது கட்டிப்பிடிச்சு எடுத்துக் கொண்ட போட்டோவை, செல்போனில் பார்த்து, 'இவனுங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட சொரணையே இல்ல... இப்படி வந்து கட்டிப்பிடிச்சி போஸ் கொடுக்கச் சொல்லுதா? இந்த சதீஷ் ஏண்டா என் பக்கத்துல வந்து நிக்குறான்?’னு திட்டும்போது, நாம விழுந்து விழுந்து சிரிக்கிறோம்!''

பவித்ரா பஞ்ச்: ''டயலாக்ஸ், இந்தப் படத்துக்கு டானிக்!''

ரஞ்சிதா (தனியார் நிறுவன ஊழியர்): ''பியூட்டி பார்லர்ல சேதுபதி இருக்கும்போது அவரோட அப்பாவும் அங்கே வர, எப்படி சமாளிக்கப் போறாங்கனு நாம எதிர்பார்க்க, 'ஃபேஸ் பேக்' அப்ளை செய்து வாயில் ஒரு வெள்ளரிக்காய் துண்டையும் வைத்துவிட, சிரிப்பை அடக்க முடியல. இப்படித்தான் ஒவ்வொரு ஸீனையும் சிரிப்பாலயே செதுக்கியிருக்காங்க. நான்கு நண்பர்கள், கிரிக்கெட், ஹாஸ்பிட்டல், திருமணம்... இதுக்குள்ளயே ஒரு கியூட் ஸ்டோரி சொன்னதுக்கு ஹேட்ஸ் ஆஃப்!''

ரஞ்சிதா பஞ்ச்: ''ஒரே டயலாக்கை வெச்சு... ஒரு படத்தையே ஓட்டிட்டாங்க!''