விகடன் வரவேற்பறை
பரதேசிஇசை:ஜி.வி.பிரகாஷ் குமார்
வெளியீடு: ஜெமினி ஆடியோ விலை:

125

பாலா-வைரமுத்து-ஜி.வி.பிரகாஷ் குமார் என எதிர்பார்ப்பை ஹை டெசிபலில் எகிறவைத்த புதுக் கூட்டணியின் ஆல்பம். முதல் தீண்டலிலேயே காது மடல் வருடுகிறது 'அவத்த பையா சவத்த பையா... அழிச்சாட்டியம் ஏனடா?’ பாடல். மனம் வருடும் மகுடி இசைக்கு யாஸின், வந்தனா ஸ்ரீனிவாசன் குரல்கள் இதமான பாந்தம். 'நான் முந்திப்போட்டு மூடிவச்ச பூக்கள நீ மோந்து பாப்பியா?’ என்ற வரியில் கள்ளுப் பானை கிறக்கம்! 'செங்காடே... சிறுகரடே...’ சற்றே நீளமான சோகப் பாடல். 'உடல் மட்டும் முதலீடாக ஒருநூறு சனம் போறாக... உயிர்மீளுமோ? உடல்மீளுமோ? யார் கண்டது?’ - பஞ்சம் பிழைக்க ஊர்விட்டு ஊர் செல்லும் மக்களின் துயரத்தை உணர்வும் உருக்கமுமாக வடிக்கும் வார்த்தைகளுக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்கிறது இசை. சின்ன நடுக்கத்துடன் ஒலிக்கும் பிரகதியின் குரல், பெருந்துயரத்துடன் ஒலிக்கும் பிரசன்னாவின் குரல்... 'ஓர் மிருகம்...’ பாடலுக்கான சோகம், துயரம் அனைத்தையும் சேர்த்துவிடுகிறது. தேயிலைத் தொழிலாளிகளின் சோகம் சொல்லும் 'செந்நீர்தானா...’ பாடலில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் கனத்த குரலில் ஒலிக்கும் கங்கை அமரன் குரல் பொருத்தமான தேர்வு. 'எங்க மேலுகாலு வெறும் தோலாப் போச்சே... அது-கங்காணி செருப்புக்குத் தோதாப் போச்சே’-முகத்தில் அறைகிறது இறந்தகால நிதர்சனம். துள்ளலும் குதூகலமுமாக ஆரம்பித்து இடையில் தடக்கெனத் தடம்மாறி ஸ்தோத்திரப் பாடலாகும் 'தன்னைத்தானே நமக்காகத் தந்தானே’-வில் கானா பாலாவின் குரல் அத்தனை ஜிலீர்! ஆட்டம் பாட்டத்துக்கு வேலை இல்லாத சூழலிலும் கவனம் ஈர்க்கிறது ஜி.வி.பிரகாஷின் இசை. சபாஷ் பிரகாஷ்!

துணிவின் குரல்! http://justicekatju.blogspot.in/

இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் மார்கண்டேய கட்ஜுவின் வலைப்பூ. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியான கட்ஜு, அனைத்துப் பிரச்னைகளிலும் தன் கருத்தைத் துணிவுடன் பதிவுசெய்து வருபவர். அதனாலேயே இவரது இந்த வலைப்பூவில் 'டிராஃபிக்’ அதிகம். சமீபத்தில் '90 சதவிகித இந்தியர்கள் முட்டாள்கள்’ என்று இவர் வெளியிட்ட கருத்து கடும் சர்ச்சையானது. அதற்கு எதிராக இரண்டு மாணவிகள் இவர் மீது வழக்கு தொடுத்தனர். அவர்களுக்குப் பொறுமையாகத் தன் தரப்பை விளக்கி கட்ஜு எழுதிய கடிதத்தை இங்கே படிக்கலாம். இந்திய சிறையில் 20 ஆண்டுகள் அடைக்கப்பட்டு இருந்த பாகிஸ்தான் டாக்டர் கலீல் செஸ்டியை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்யச் சொன்னது. அதற்கு கட்ஜுவின் வேண்டுகோள்தான் பிரதான காரணம். இணைய சுதந்திரத்தை முழுக்கப் பயன்படுத்திக்கொள்வதில் இளைஞர்களுக்கு இங்கே வழிகாட்டுகிறார் கட்ஜு!
அப்பாஇயக்கம்: வி.ஆர்.பி.மனோகர்

வறுமையில் வாடும் அப்பா, மகளின் கல்லூரிக் கட்டணம் கட்ட முடியாமல் தவிக்கிறார். மனைவியின் வளையலை விற்று மகளுக்குப் பணம் தருகிறார். பதற்றத்தில் 'பணம் பத்திரம்... பணம் பத்திரம்’ என்று மகளைச் சதா எச்சரித்துக்கொண்டே இருக்கிறார். பணத்தைப் பாதுகாக்க பேருந்தில் செல்லாமல், சைக்கிளில் கல்லூரிக்குக் கூட்டிச் செல்லும், தெருஓரக் கடையில் டீ குடிக்கும் அப்பாவைக் கண்டு மகள் எரிச்சல் அடைகிறார். கல்லூரியில் தன் அப்பாவின் தோழியைச் சந்திக்கிறார் மகள். முன்னர் எப்படி வாழ்ந்தவர் இப்போது எப்படி வாடிக்கிடக்கிறார் என்பதையும், அப்பாவின் பாசத்தையும் தெரிந்துகொள்கிறாள். குடும்பத்தின் வறுமையைப் போக்கச் சபதம் எடுக்கிறாள். யதார்த்தத்துக்கும் கனவுக்கும் இடையில் அல்லாடும் நகர்ப்புறத் தந்தைகளை, அவர்களின் வாழ்க்கைச் சூழலை, துயரங்களைச் சொன்ன விதத்தில் கவனம் ஈர்க்கும் படம்.

அஞ்ஞாடி
பூமணி
வெளியீடு: க்ரியா
பி 37,கிரவுண்ட் ஃப்ளோர்,
5-வது குறுக்குத் தெரு, யுனிவர்சிட்டி காலனி,
பாலவாக்கம், சென்னை-41.
விலை:

925 1066 பக்கங்கள்

தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், அசோகமித்திரன், கி.ராஜநாராயணன் வரிசையில், கம்பீரமான ஓர் ஆசனத்தைப் பூமணிக்குத் தந்து இருக்கிறது 'அஞ்ஞாடி’.
ஆண்டி, மாரி என்ற இருவர் இடையே முகிழும் நட்பு தலைமுறை தலைமுறையாகத் தொடரும் கதை... அதனூடே கடக்கும் வரலாற்றின் கறுப்புப் பக்கங்கள்... இவைதான் 'அஞ்ஞாடி’. மனிதனின் அற்ப உணர்வான சாதி வெறியையும் அற்புத உணர்வான நட்பையும் ஒரே கோட்டுக்குள் கொண்டுவந்து இருக்கிறார் பூமணி.
தலித் மக்கள் காலங்காலமாக ஒடுக்கப்பட்டு வந்திருப்பது நமக்குத் தெரியும். ஆனால், நாடார் போன்ற ஏனைய சமூகங்களும் மனிதாபிமானம் அற்ற முறையில் ஒடுக்கப்பட்டு இருப்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஆண்களைப் போலவே பெண்களும் மேலாடை அணியத் தடை விதித்த சமஸ்தானம் நம் முன்னோரை ஆண்டது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? 'சிவகாசி கொள்ளை’ என்று குறிப்பிடப்படும் நாடார்களுக்கு எதிரான கலவரம் இந்த நாவலின் மையம். ஆனால், பூமணி அதோடு நிற்கவில்லை. சம்பந்தர் கால சமணர்கள் கழுவேற்றத்தில் தொடங்கி கட்டபொம்மன் காலத்து விடுதலைப் போர், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை என்று இந்திரா படுகொலையின் நீட்சியான சீக்கியர் கலவரம் வரை வரலாற்றில் பயணம் செய்திருக்கிறார். வரலாறு நெடுக இறைந்துகிடக்கும் மனிதர்களின் சாதி வெறி, மத வெறி யைப் படம் பிடித்திருக்கிறார். வரலாற்றைப் பூமணி கையாண்டு இருக்கும் விதத்துக்காக இந்த நாவலைப் பலரும் கொண்டாடுகிறார்கள். ஆனால், அதைவிடவும் இந்த நாவலில் முக்கியமாகத் தெரிவது நாம் தொலைத்த வாழ்க்கையைப் பற்றிய பதிவுகள்.
20-ம் நூற்றாண்டின் துவக்கம் வரை நம் முன்னோர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தார்கள், இயற்கையோடு எவ்வளவு தூரம் ஒன்றி வாழ்ந்தார்கள் என்பதை 'அஞ்ஞாடி’ அழகாகவும் விரிவாகவும் படைக்கிறது. கிளித்தட்டு, குடட்டி என விளையாடும் சிறுவர்கள்; முண்டு காளான், குடைக்காளான் என்று விதவிதமான காளான்களைத் தேடிச் செல்லும் சிறுமிகள்; தீவட்டிக் கொள்ளையர்கள், கோழித் திருடர்கள், ஆட்டுத் திருடர்கள்; சாமக் கோடாங்கிகள்; வண்ணாந்துறையில் கேட்கும் வெளுப்புப் பாட்டு; காடை கவுதாரி வேட்டை... இப்படிப்பட்ட வாழ்க்கையை நாம் இனி மேல் வாழவோ, பார்க்கவோ முடியாது.
வட்டார வழக்கு, சம்பந்தர் காலத்து உயர் தமிழ் வழக்கு, நெல்லை மாவட்ட கிறித்துவ வழக்கு என்று தமிழின் பல்வேறு பரிமாணங்களிலும் பூமணி புகுந்து வந்திருக்கிறார். நல்ல நாவலாகவும் சரித்திர ஆவணமாகவும் நம் பழங்கால வாழ்க்கை முறையைத் தெரிந்துகொள்வதற்கான தகவல் களஞ்சியமாகவும் 'அஞ்ஞாடி’ உருப்பெற்று இருக்கிறது. 'அஞ்ஞாடி...’ என்றால், வட்டார வழக்கில் 'அம்மாடி’ என்று அர்த்தம். நாவலைப் படித்து முடிக்கும் போது வியப்பில் இந்த வார்த்தையை ஒரு வாசகர் உச்சரிப்பது தவிர்க்க முடியாதது.