Published:Updated:

அவள் சினிமா - கும்கி

வே. கிருஷ்ணவேணி, படங்கள்: பா.கார்த்திக்

 ##~##

ஒரு மலை கிராமம். அவர்களின் விவசாயத்தையும் வாழ்வையும் அவ்வப்போது காட்டில் இருந்து வந்து நாசமாக்கிப் போகும் காட்டு யானை 'கொம்பன்’. அதை அடக்க, பயிற்சி பெற்ற 'கும்கி’ யானை ஒன்றை நாடுகிறார்கள். ஒரு குளறுபடியில், கோயில் யானை 'மாணிக்கம்’... கும்கி யானையாக மலை கிராமம் வந்து சேர்கிறது. பாகன் 'பொம்ம’னுக்கும், ஊர்த் தலைவரின் பெண் 'அல்லி’க்கும் காதல். கோயில் யானை, காட்டு யானையை அடக்கியதா... காதல் ஜெயித்ததா..?

''சிவாஜி சாரோட பேரன் பிரபு விக்ரம், டைரக்டர் பிரபு சாலமன், ஏற்கெனவே ஹிட் ஆயிட்ட இமான் பாடல்கள், லஷ்மி மேனன்னு நிறைய எதிர்பார்ப்புகளோட வந்திருக்கோம்!'' என்றபடி சென்னை, சத்யம் தியேட்டருக்கு வந்தார்கள் கல்லூரி மாணவிகளான தீபாலட்சுமி, அனிதா, காயத்ரி, திவ்யா மற்றும் குடும்பத் தலைவிகளான ஷீலா, உஷா. படம் முடித்து வெளியே வந்த பின், இந்த ஆறுபேரும் தந்த விமர்சனம்...

தீபாலட்சுமி: ''ஹீரோ ஓபனிங் பாடல், ஹீரோயின் கிளாமர், ஆக்ஷன், சென்ட்டிமென்ட், குரூப் சாங்னு சினிமாத்தனங்களை விட்டு விலகி நின்னு, மலையும் மலை சார்ந்த இடமும்னு களம் பிடிச்சு, மறுபடியும் நமக்கு ஒரு வித்தியாச அனுபவம் தந்திருக்கார் பிரபு சாலமன். பாகன் 'பொம்மனா’ விக்ரம் பிரபு தன்னோட ரோலை அழுத்தமா செய்திருக்கார். ஆறடி சொச்ச உயரம், அளவா வெச்சுருக்கிற உடம்பு, கூர்மையான கண்கள்... இதோட, முதல் படத்துலயே நடிப்புலயும் ஸ்கோர் செய்திருக்கார்.

அவள் சினிமா - கும்கி

லஷ்மி மேனனோட இளமை, படத்தை இன்னும் அழகாக்குது. பெரிய பொட்டும், அகன்ற கண்களும், மேக்கப் இல்லாத முகமும், அவரை மனசுல மாட்டுது. தம்பி ராமையாவுக்குதான் ஹீரோ, ஹீரோயினைவிட அதிக வசனங்கள். மனுஷன் கலக்கி எடுத்திருக்கார்.

யானை 'மாணிக்கம்’, கால் மடக்கி பொம்மனை ஏறச் சொல்லும்போது, நமக்கும் பிடித்தமான யானையாகிப் போகுது.''

தீபாலட்சுமி பஞ்ச்: ''மைனா பட சாயல் அடிக்குதே!''

அனிதா: ''படத்துல வர்ற... 'பாதையை எல்லாம் நீங்க அடைச்சு ஹோட்டல் கட்டினதாலதான் கொம்பன் இப்போ கீழ இறங்குறான்', 'இந்தக் காட்டுல அப்படி ஒரு நம்பிக்கை துரோகி இல்ல தம்பி’, 'நீ என் ரத்தம்டா... தப்பு பண்ண மாட்டே’, 'மதம் பிடிச்சது உனக்கு இல்ல, எனக்குதான்’னு வசனங்கள் எல்லாம் மனசுல நிக்குது.

இன்னொரு பக்கம், '52 வயசு வரைக்கும் நாய்படாத பாடுபடுவீங்க. அப்புறம்... அதுவே பழகிடும்’னு ஜோசியர் சொல்றது, போலீஸ்கிட்ட, 'நீங்க மாமாதானே சார்..?’னு தம்பி ராமையா கேட்குறதுனு அன்லிமிட்டடா சிரிக்க வைக்குது.''

அவள் சினிமா - கும்கி

அனிதா பஞ்ச்: ''அடுத்த படத்துலயாச்சும் பாஸிட்டிவ் க்ளைமாக்ஸ் ப்ளீஸ்... பிரபு சாலமன்!''

உஷா: ''படத்தோட பெரிய சப்போர்ட்... ஒளிப்பதிவு. அந்த மலையில் நம்மையும் ஏற வெச்சு, ஹீரோ, ஹீரோயின் மலைக் குளத்துல விழுந்து எழும்போது நம் மனசையும் ஈரம் உதற வெச்சு, அருவியோட உச்சந்தலையில் சுற்றிச் சுழலும்போது அந்தப் பரவசத்தையும் பயத்தையும் நமக்கும் தந்து, பாடல் காட்சிகள்ல விருந்து வெச்சுனு... சுகுமாரோட கேமரா கொண்டாட வைக்குது.''

உஷா பஞ்ச்: ''கேர்ள்ஸுக்கு பிரபு விக்ரம், பாய்ஸுக்கு லஷ்மி மேனன், குழந்தைகளுக்கு யானை, பெரியவங்களுக்கு கதை.''

திவ்யா: ''படம் நெடுகிலும் பாடல் படிக்கட்டுகள்ல பயணிச்சாலும், ரசிக்க வைக்கிறார் இமான். 'அய்யய்யோ ஆனந்தமே’, 'சொல்லிட்டாளே’, 'கையளவு நெஞ்சத்துல’னு எல்லாப் பாட்டும் எனக்குப் பிடிச்சிருக்கு. அந்த மெலடி ஸ்வரங்களுக்கு... காதல் தமிழால உயிர் கொடுத்திருக்கார் யுகபாரதி.''

திவ்யா பஞ்ச்: ''மியூஸிக்கல் ஹிட்!''

அவள் சினிமா - கும்கி

ஷீலா: ''பட்ட மரம், மச்சு வீடு, ஊர்க்கட்டுப்பாடு, தண்டட்டி கழற்றிக் கொடுக்கும் பாட்டி, மாற்றிக் கட்டின சேலை தவிரவும் மலை சார்ந்த வாழ்க்கை முறையை இன்னும் அள்ளிக் கொடுத்திருக்கலாம். செல்போனுக்கு சார்ஜ் போடுறதுக்கெல்லாம் மின்சார வசதி இருக்கிற கிராமத்துல, டார்ச் லைட் கூடவா வெச்சுக்க மாட்டாங்க? எல்லாரும் லாந்தர், தீப்பந்தம்னே ராத்திரியில அலையுறாங்களே!

அந்த போலீஸ்காரங்க கண்ணும், அவங்க வரும்போது தர்ற பேக்கிரவுண்ட் மியூஸிக்கும்னு, அந்த கேரக்டர்களுக்கு கொடுத்த பில்ட்-அப்புக்கு பெருசா எதையும் செய்யல.

'கொம்பன் வர்றான் கொம்பன் வர்றான்...’னு படம் முழுக்க பெப் ஏத்திட்டு, க்ளைமாக்ஸ்ல அந்த யானைச் சண்டை பட்டையக் கிளப்பியிருக்க வேணாமா? புஸ்ஸ்!''

ஷீலா பஞ்ச்: ''இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தா, கிளாஸிக் மூவிதான்!''

காயத்ரி: ''தன் யானை மேல அவ்வளவு உயிரா இருக்கும் பொம்மனுக்கு, காதலுக்காக அதை காட்டு யானையோட மோதவிட எப்படி மனசு வந்துச்சு? பொம்மனுக்கு அல்லி மீதும், அல்லிக்கு பொம்மன் மீதும் காதல் வர்றதுக்கான காரணங்கள், சினிமா 'கிளிஷே’க்கள்.

ஊர்த்தலைவர் சொல்றமாதிரி, கொம்பன் கீழ இறங்கி வர்றதுக்கான காரணமே... மனிதர்களோட பேராசைதான். அதை இன்னும் அழுத்தமா, மனசுல அறையற மாதிரி சொல்லாம, கொம்பன் யானையை வில்லனாக்கி கொல்றது சரியா?''

காயத்ரி பஞ்ச்: ''உயிர் வருத்தி உழைச்சுருக்கிற 'கும்கி’ டீமுக்கு சல்யூட்!''