Published:Updated:

அவள் சினிமாஸ் - CZ12

வே.கிருஷ்ணவேணி படம்: சொ.பாலசுப்ரமணியன்

##~##

'ஜாக்கி சானின் கடைசி ஆக்ஷன் ஃபிலிம்’ என்ற எதிர்பார்ப்பைத் தூண்டியபடி வந்திருக்கும் படம், 'சிஇசட் 12’ (CHINESE ZODIAC 12). .

19-ம் நூற்றாண்டின் ஓபியம் போரின்போது, சீனாவை முற்றுகையிடும் பிரிட்டிஷ் படை,  வெற்றிபெற்ற ஜோரில் அரண்மனையில் இருக்கும் பாரம்பரிய வெண்கலச் சிலைகளின் தலைகளைக் கவர்ந்து செல்வது... ஃப்ளாஷ்பேக்!

சீனாவிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட அந்த வெண்கலச் சிலைகளின் தலைகளின் மில்லியன் டாலர் மதிப்பை அறிந்த பாரம்பரிய பொருட்களை விற்கும் டீலர் ஒருவர், சிலைகளை கவர்ந்து வரும் அசைன்மென்ட்டை 'திருட்டு ஹீரோ’ ஜாக்கியிடம் ஒப்படைக்கிறார். அந்தச் சிலைகளில், டிராகன் சிலை பெரிய சேலஞ்ச். ஜாக்கி கண்டுபிடித்தாரா... மீட்டெடுத்தாரா... என்பதையெல்லாம் ஆக்ஷன், ஹியூமர் டிரீட்மென்ட்டில் சொல்லியிருக்கிறார்கள்.

ஜாக்கி சானின் ரசிகைகளான கல்லூரி மாணவிகள் மனீஷா, மோனிகா, லட்சுமி மற்றும் குடும்பத் தலைவி இந்திரா காந்தி ஆகிய நால்வரையும் படத்துக்கு அழைத்துச் சென்றோம். அவர்களின் விமர்சனம் இதோ...

இந்திரா காந்தி: ''படத்தோட தயாரிப்பாளர், இயக்குநர் எல்லாம் ஜாக்கியே. 58 வயசில் என்ன ஒரு ஆக்ஷன்..! கலக்கிட்டார். எப்பவுமே ஜாக்கியோட படத்துல காமெடிக்குப் பஞ்சம் இருக்காது. இந்தப் படத்திலும் நம்மை அதிகமா சிரிக்க வைக்கிறார். ஜாக்கியும் அவர் டீமும் சிலைகளைத் தேடிப் போகும் ஸீன்கள், செம த்ரில். 'பொண்ணுங்க நம்மகூட இல்லாம இருந்தா... நாம ஃப்ரீயா சந்தோஷமா இருக்கலாம்’ என்று தன் நண்பனிடம் அட்வைஸ் செய்துவிட்டு, தன்னுடைய கேர்ள் ஃப்ரெண்டுடன் போனில் கொஞ்சிப் பேசும் ஜாக்கி, லவ்லி! 'இதுதான் ஜாக்கியோட கடைசி ஆக்ஷன் மூவி' என்பது புரளினு சொல்றாங்க. அது புரளியாவே இருக்கட்டும். எங்களையெல்லாம் மறந்து போயிடாதீங்க ஜாக்கி!''

அவள் சினிமாஸ் - CZ12

இந்திரா காந்தி பஞ்ச்: 58 வயசுலயும் அசத்தல் ஜாக்கி!

லட்சுமி: ''பழைய அரண்மனை, கடற்கொள்ளையர்கள், தீவு, காடுனு கதை போகப் போக, நாம ஸீட் நுனிக்கே வந்துடறோம். டிராகன் சிலையோட தலையைக் கண்டுபிடிக்கப் போகும் காட்சிகள், ஹாட். க்ளைமாக்ஸ் டாப்! கதாபாத்திரங்கள் திடீர்னு ஃபிரெஞ்சு, சைனீஸ்னு வேற வேற மொழிகள்ல பேசும்போது, சப் டைட்டில் இல்லாமல் இருக்கறது... ரொம்பவே திணற வைக்குது. அதையும் கவனிச்சிருந்தா... நல்லா இருந்திருக்கும்!''

லட்சுமி பஞ்ச்:  செம ஆக்ஷன் மசாலா!

மனீஷா: ''மேனுவல் பாராசூட்டை வெச்சுக்கிட்டு, அந்த தோட்டத்துக்குள்ள நாய்கள்கிட்ட மாட்டிட்டு ஜாக்கி படுற அவஸ்தை, செம காமெடி கலாட்டா. 'ஃபிரெஞ்சு நாய்கிட்ட... அவன் இங்கிலீஷ்ல பேசுறான்’ - இப்படி வயிறு குலுங்க சிரிக்க வைக்குது வசனங்கள்.''

மனீஷா பஞ்ச்: காமெடி மாக்டெயில் (Mocktail)!

மோனிகா: ''அவ்வளவு பெரிய வில்லன்களா ஒரு கேங்கை காட்டிட்டு, கடைசியில் கடற்கொள்ளையர்கள் வரும் இடத்தில் அவங்களை காமெடி பீஸா ஆக்கியிருக்காங்க. ஆனாலும்... அங்கே நடக்குற ஆக்ஷன் காட்சிகளை எத்தனை தடவை பார்த்தாலும் சளைக்காது. கடற்கொள்ளையர்களை தேனீ கொட்டித் தீர்க்க, வீங்கின முகத்தோட அவங்க வர, புதுசா ஒரு குரூப் உள்ளே வந்துட்டதா ஒரு நிமிஷம் நினைக்க வைக்கறாங்க. சிலைகளை கடத்தி ஒரு பெரிய டீலர்கிட்ட விற்கும் திருட்டுத் தொழிலை சாமர்த்தியமா செய்யும் ஜாக்கி, தன் நாட்டோட பாரம்பரியத்தைப் பாதுகாக்கப் போராடும் ஒரு சைனீஸ் பெண்ணின் கதையை கேட்டவுடன், திருந்தறார். நம்ம ஊர் மசாலா. ஆனாலும் ரசிச்சோம்.''

மோனிகா பஞ்ச்: ஜாக்கி ரசிகர்களுக்கு ஜாலியான விருந்து!

அவள் சினிமாஸ் - CZ12