Published:Updated:

அவள் சினிமாஸ்

வே.கிருஷ்ணவேணி படம்: வீ.நாகமணி

##~##
பாக்கியராஜின்
காமெடி ஹிட் 'இன்று போய் நாளை வா’... 2013 வெர்ஷனாக வந்திருக்கிறது... 'கண்ணா லட்டு தின்ன ஆசையா’!

சவுண்ட் சர்வீஸ் நடத்தி வருகிற சந்தானம், வெட்டி ஆபீஸர்களாக ஊரைச் சுற்றும் 'பவர் ஸ்டார்' சீனிவாசன், சேது... மூன்று பேரும் நண்பர்கள். சேதுவின் எதிர்வீட்டில் குடித்தனம் வருகிறார்கள் விஷாகா குடும்பத்தினர். விஷாகாவை காதலிப்பதில் மூவருக்குள் ஒரு அக்ரிமென்ட். லாகவமாக லவட்டிப் பிடிப்பவர்களுக்கே லட்டு... மற்றவர்கள் விலகிக்கொள்ள வேண்டும். விஷாகாவின் காதல் கிடைக்க மூவரும் செய்யும் தகிடுதத்தங்களில் சிரித்துக் களைத்திருந்தால்... லட்டு யாருக்கு என்ற கிளைமாக்ஸ்!

ராம.நாராயணன் மற்றும் சந்தானம் இணைந்து தயாரிக்க... கே.எஸ். மணிகண்டன் இயக்கியிருக்கிறார். படத்தைப் பார்க்க கல்லூரி மாணவிகள் ராஜேஸ்வரி, சங்கீதா, சிந்துஜா, பவித்ரா மற்றும் குடும்பத் தலைவி தேவி ஆகியோரை சென்னை, தேவி தியேட்டருக்கு அழைத்துச் சென்றோம். அவர்களின் விமர்சனம் இதோ...

அவள் சினிமாஸ்

ராஜேஸ்வரி: ''இன்று போய் நாளை வா படத்தோட கருவை எடுத்திருந்தாலும்... கதை, திரைக்கதையில் நிறைய வித்தியாசங்கள் செய்திருக்கார் இயக்குநர். சந்தானம், பவர் ஸ்டார், சேது... கேரக்டர் செலக்ஷன் சூப்பர். குறிப்பா, பவர் ஸ்டாரோட அறிமுகம்... ஹப்பா! சந்தானம் தயாரிப்பு, 'இன்று போய் நாளை வா’ ரீமேக், சந்தானம், பவர் ஸ்டார், 'விடிவி’ கணேஷ்னு படத்தைப் பத்தின எல்லா விஷயங்களும்... ஸ்கிரீன்ல ஆட்டோமேடிக்கா காமெடியை எதிர்பார்க்க வைக்குது. அதை ஏமாற்றாம தந்திருக்காங்க. டைட்டில் கார்டில் இருந்து எண்ட் கார்டு வரை கணக்கில்லாம சிரிக்குறோம்!''

ராஜேஸ்வரி பஞ்ச்: ''2013-ம் வருடத்தின் இனிய காமெடி துவக்கம்!''

அவள் சினிமாஸ்

தேவி: ''படத்தோட பெரிய பலம், சந்தானத்தோட கெக்கபிக்க காமெடி வசனங்கள். பவர் ஸ்டார் சவால் விடும்போது, 'வீட்டுக்கே போயிட்டேன்... இன்னும் அங்க நின்னு பஞ்ச் டயலாக் பேசிட்டு இருக்க.?’னு போன் பண்ணி கலாய்க்கிறது, 'நானும் எவ்வளவு நாளைக்குத்தான் ஊரான் காதலையே ஊட்டி வளர்க்கிறது? எனக்கும் லவ் பண்ணி ஊட்டியில் டூயட் பாடற ஆசையிருக்காதா?’னு எகிறுவது, 'அவன் ஹீரோ ஆயிட்டான், நீ காமெடியனாயிட்டே’னு சொல்ற பவர்ஸ்டார்கிட்ட, 'நானாவது காமெடியன்னு தெரிஞ்சு காமெடியனா ஆயிட்டேன். நீ அது தெரியாமலேயே காமெடி பண்ணிட்டிருக்கே பாரு..!’னு 'கட்’ கொடுக்கிறதுனு... நிஜத்தைக் கலந்து கலந்து சந்தானம் அடிக்கிறது மொத்தமும் சிரிப்பு சிக்ஸர்ஸ்!''

தேவி பஞ்ச்: ''பவர் ஸ்டார்... படத்துக்கு பலமான ஸ்டார்!''

சங்கீதா: ''தமனோட மியூஸிக் அங்கங்கே ரசிக்க வைக்குது. ஆனா... பாடல் எதுவும் மனசுல ஒட்டல. 'லவ் லெட்டர் எழுத ஆசைப்பட்டேன்’ பாடல் ஓரளவுக்குப் பரவாயில்ல. இந்த பவர் ஸ்டாரை சந்தானம் கலாய்க்கற கலாய்ப்புலயே... அவர் மேல பரிதாபம் வந்துடுது. சிம்புவும் கௌதம் மேனனும்... கௌரவ தோற்றத்துல... சிம்பு, கௌதமாவே வந்து சர்ப்ரைஸ் தர்றாங்க. பாலசுப்ரமணியெமோட கேமரா, கலர்ஃபுல். ஸ்லிம் பியூட்டி விஷாகா, மூணு பசங்க போட்டுப் போட்டு காதலிக்கிற கிரேஸோட இருக்கார். சேது, அடுத்தடுத்த படங்களில் சாக்லேட் ஹீரோவா வர குட் லக்!''

சங்கீதா பஞ்ச்: ''ஆனந்தத் தொல்லை... ஆனந்தத் தொல்லை!''

பவித்ரா: ''கணேசன், மியூசிக் வித்வானா கலக்கி இருக்காரு. கோவை சரளா டி. ஆர் பாணி டயலாக்ஸ்ல பின்னி எடுத்திருக்காங்க. ஆனா, படத்துல எல்லோரும் காமெடி பஞ்ச் பேசிட்டே இருக்குறது, போர். வசனங்களைக் குறைச்சு, காட்சிகளில் காமெடி சேர்த்திருக்கலாம். பாடல்கள், பனிஷ்மென்ட்.''

பவித்ரா பஞ்ச்: ''அசத்தல் அப்டேட்டட் ரீமேக்.''

சிந்துஜா: ''நான் ஸ்ட்ரைட்டா 'பஞ்ச்' கொடுத்துடறேன்... நோ லாஜிக்... ஒன்லி காமெடி மேஜிக்!''

அவள் சினிமாஸ்