Published:Updated:

அவள் சினிமாஸ் - கடல்

வே.கிருஷ்ணவேணி படங்கள்: வீ.நாகமணி

##~##

'நல்லதுக்கும் கெட்டதுக்கும் இடையில் நடக்கும் யுத்தம்' என்கிற ஆதிகால 'கதைக்கரு'தான், 'கடல்’ படத்திலும்! 'தேவதூதன்’ அரவிந்த் சாமியும், 'சாத்தான்’ அர்ஜுனும் அந்த யுத்தத்தை திரையில் நடத்துகிறார்கள்!

கிறிஸ்தவ ஊழியப் பள்ளியில் அரவிந்த்சாமியும், அர்ஜுனும் ஒன் றாகப் படிக்கிறார்கள். அங்கு அர்ஜுன் செய்யும் தகாத வேலை பற்றி அரவிந்த்சாமி முறையிட, பள்ளியில் இருந்து வெளியேற்றப்படுகிறார் அர்ஜுன். பின்னாளில் பெரிய தாதாவாகும் அவர், திட்டமிட்டு ஒரு பெண்ணை வைத்து கதை ஜோடித்து, பாதிரியாராக இருக்கும் அரவிந்த்சாமியை ஜெயிலுக்கு அனுப்புகிறார்.

முறை தவறிய உறவால் பிறந்து, ஊராராலும், தந்தை பொன்வண்ணனாலும் புறக்கணிக்கப்பட்ட கௌதம் கார்த்திக், பாதிரியார் அரவிந்த்சாமி யால் நல்வழிப்படுத்தப்படும் நிலையில், அரவிந்த்சாமி சிறைக்குச் சென்றுவிட, அர்ஜுனுடைய ஆளாக மாற்றப் படுகிறார் கௌதம். தண்டனை முடிந்து வரும் அரவிந்த்சாமி, மீண்டும்      கௌதமை நல்வழிப்படுத்த முயற் சிக்கிறார்.

இதற்கு நடுவே, மனநலம் பாதிக்கப் பட்ட நிலையில் இருக்கும் துளசியிடம் கௌதமுக்கு காதல். துளசியோ... அர்ஜுனின் மகள். காதலை சேர்த்து வைக்க அரவிந்த்சாமி நினைக்க, அர்ஜுன் ருத்ரதாண்டவத்தை ஆரம் பிக்கிறார். சாத்தானா, தேவதூதனா... ஜெயித்தது யார் என்பது க்ளைமேக்ஸ் (அப்பாடா... ஒரு வழியா கதையைச் சொல்லிட்டோம்ல!).

அவள் சினிமாஸ் - கடல்

மணிரத்னம் இயக்கம், ஏ.ஆர்.ரஹ்மான் இசை, ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு என இந்தியாவின் சிறந்த திரை தொழில்நுட்பக் கலைஞர்களின் கூட்டணி, கார்த்திக்கின் மகன் கௌதம், ராதாவின் மகள் துளசி என ஃப்ரெஷ் புதுவரவுகள், அரவிந்த்சாமி, அர்ஜுன், வைரமுத்து, ஜெயமோகன் என மிகப்பெரிய கூட்டணி... மிகுந்த எதிர்பார்ப்புடன் 'கடல்’ பார்க்க வந்தார்கள் கல்லூரி மாணவிகளான சுதா, நந்தினி, அருண் பிரீத்தி பிள்ளை, கலைவாணி மற்றும் குடும்பத் தலைவி இளவரசி! அவர்கள் தந்த விமர்சனம் இதோ...

சுதா: ''துளசி, அடுத்த படத்துலயாச்சும் நடிக்கணும். கௌதமுக்கு சாக்லேட் ஹீரோ வாய்ப்புகள் வரிசை கட்டும். அர்ஜுன் சேலஞ்ஜிங் ரோலை சூப்பரா செய்திருக்கார். அரவிந்த்சாமி தொடர்ந்து ஸ்க்ரீனுக்கு வந்தா சந்தோஷம். மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், வைரமுத்து கூட்டணி மறுபடியும் ஹிட். ஆமாம்... மியூஸிக் மட்டும் ஓகே!''

சுதா பஞ்ச்:  'கடல்’ படத்தை வேறொரு தளத்தில் மணிரத்னம் முயற்சி செய்திருக்கார். ஆனா, அது என்னனு புரியலையே ராசா!''  

இளவரசி: ''குட் வெர்சஸ் ஈவில்ங்கறது... ஒண்ணாங் கிளாஸ்ல இருந்து நாம படிக்கற பாடம்தான். ஆனா, அதைச் சொல்ற விதத்துல சொல்லல. அதனால, திரைக்கதை, நமக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தல.''

இளவரசி பஞ்ச்: 'கடல்ல கதையை தொலைச்சுட்டார் மணிரத்னம்.'

அவள் சினிமாஸ் - கடல்

கலைவாணி: ''பொதுவா மணிரத்னம் படங்கள்ல சப்போர்டிங் கேரக்டர்கள்கூட 'நச்’னு மனசுல நிக்கும். இங்க மெயின் கேரக்டர் களே தள்ளாடுது. கதாபாத்திர உருவாக்கத்தில் அழுத்தம் போதல.''

கலைவாணி பஞ்ச்: 'நாயகன்', 'தளபதி’னு காவியம் படைச்ச மணிரத்னம் எங்கே?!

நந்தினி (பஞ்ச் மட்டும்) : ''மணிரத்னம் ரசிகையான நான்... 'கடல்’ பத்தி பேசாம இருக்கறதே பெட்டர்.''

அருண் பிரீத்தி பிள்ளை (பஞ்ச் மட்டும்): ''ஆடியோ சி.டி-யை வாங்கி பாட்டுகளை நல்லா ரசிக்கலாம்.''