Published:Updated:

அவள் சினிமாஸ் - சென்னையில் ஒருநாள்

ஸ்க்ரீன்ஸ்

##~##

காஞ்சிபுரம் மாவட்டம்,  திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த டாக்டர் தம்பதியான அசோகன் - புஷ்பாஞ்சலியின் மகன் ஹிதேந்திரன், சில ஆண்டுகளுக்கு முன் விபத்தில் சிக்கி மூளைச் சாவு ஏற்பட,  கனத்த இதயத்தோடு அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்தனர் டாக்டர் தம்பதியர். அதன் பிறகுதான், 'உடல் உறுப்பு தானம்' என்கிற விஷயத்தில்... இந்தியா முழுக்க பெரும் விழிப்பு உணர்வு உண்டானது.

ஹிதேந்திரன் கதையை அடிப்படையாக வைத்து, மலையாளத்தில் 'டிராஃபிக்' என்று வெளியான படம்... 'சென்னையில் ஒரு நாள்' என்கிற பெயரில் ரீமேக் ஆகியிருக்கிறது!

சச்சின் (கார்த்திக்), சென்னைப் பையன். டி.வி. சேனலில் வேலையில் சேர்ந்த முதல் நாளே 'ஷைனிங் ஸ்டார்' கௌதம் கிருஷ்ணாவை (பிரகாஷ்ராஜ்) பேட்டி எடுக்கும் வாய்ப்புக் கிடைக்க... நண்பனுடன் பைக்கில் கிளம்புகிறான். வழியில் விபத்தில் சிக்கி, மூளைச்சாவு!

கௌதம் கிருஷ்ணாவின் மகள் இதய நோயால் பாதிக்கப்பட்டு வேலூர் மருத்துவமனையில் மரணப் படுக்கையில் இருக்க, கார்த்திக்கின் இதயத்தை பொருத்த முடிவெடுக்கிறார்கள். சென்னையில் இருந்து வேலூருக்கு, 150 கி.மீ. தூரம். ஒன்றரை மணி நேரத்துக்குள் இதயத்தைக் கொண்டு சேர்த்தால்தான்... உயிரைக் காப்பாற்ற முடியும் என்கிற இக்கட்டான நிலை!

அவள் சினிமாஸ் - சென்னையில் ஒருநாள்

சாலை வழியில் சாத்தியமே இல்லாத இந்த விஷயத்தை, சாதிக்கும் பொறுப்பைக் கையில் எடுக்கிறார் போலீஸ் கமிஷனர் சுந்தரபாண்டியன் (சரத்குமார்). லஞ்சப் புகாரில் சிக்கிய அவமானத்திலிருக்கும் டிராஃபிக் போலீஸ் டிரைவர் சத்தியமூர்த்தி (சேரன்), அந்தக் கறையைத் துடைப்பதற்காக, வலிய வந்து பொறுப்பை ஏற்கிறார். இதயத்தை சுமந்தபடி கார் வேகமெடுக்க... பார்வையாளர்களின் இதயம் துடிக்க ஆரம்பிக்கிறது!

கல்லூரி மாணவிகள் ப்ரியதர்ஷினி, பாலகீதா, அனிதா, ராதிகா, பவானி மற்றும் குடும்பத் தலைவிகள் வித்யா, ரம்யா கூட்டணி... சத்யம் தியேட்டரில் படம் பார்த்து தந்த விமர்சனம் இதோ..!

பிரியதர்ஷினி: பொதுவா இந்த மாதிரி மெஸேஜ் படங்கள் பார்க்கும்போது, ஒரு கட்டத்தில் போர் அடிச்சுடும். ஆனா, இந்தப் படத்தோட திரைக்கதை, ஸீட் நுனிக்கு வர வைக்குது!

பஞ்ச்: கடைசி அஞ்சு நிமிஷம் கண்கள் விலகாது!

பாலகீதா: சரத்குமார், சேரன், பிரகாஷ்ராஜ், ராதிகானு படத்துல ஏகப்பட்ட ஸ்டார்ஸ். எல்லாருமே நிறைவா செஞ்சிருக்காங்க. மகன் உயிரோட இருக்குறப்பவே இதயத்தை தானம் செய்யச் சொல்றத கேட்டு கலங்கி வெடிக்கும் இடத்துலயும்... மகனோட இதயத்தை சுமந்தபடி அந்த கார் கடந்து போறப்பவும்... பெற்றோரின் இயல்பான சோகத்தை திரையில் கொட்டியிருக் காங்க ஜெயபிரகாஷ் - லட்சுமி ராமகிருஷ்ணன்.

பஞ்ச்: ஸ்டார்ஸ்கூட சென்னையில் ஒரு நாள் இருந்த ஃபீல்!

அனிதா: நல்ல டீம் வொர்க். பேக்கிரவுண்ட் மியூஸிக்ல படத்தோட டென்ஷனை நமக்கும் கடத்துற மியூஸிக் டைரக்டர், பாடல்கள்ல ஏமாற்றிட்டார்.

பஞ்ச்: பாதி வழியில காணாமபோற கார்... செம பக் பக்!

அவள் சினிமாஸ் - சென்னையில் ஒருநாள்

ராதிகா: ஒரு உயிரை எடுக்கவும் முடியும், கொடுக்கவும் முடியும்னு டாக்டரா வர்ற பிரசன்னா கேரக்டர் உணர்த்துது. ஆனா, பிரசன்னா - இனியா காதல், கள்ளக்காதல் கதை... படத்தோட ஒட்டல, ரசிக்க முடியல.

பஞ்ச்: நல்ல திரைமுயற்சி!

பவானி: ஒவ்வொரு கேரக்டருக்கும் பேக்கிரவுண்ட் சொல்றதுல ஸீன்களை வேஸ்ட் பண்ணாம, சுருக்கமா அறிமுகப்படுத்துறது குட்.

பஞ்ச்: நல்ல படம் பார்த்த திருப்தி.

ரம்யா: நடிகர் சூர்யாவை... சூர்யாவாவே படத்துக்குள்ள இழுத்து, கேமியோ ரோல் பண்ண வெச்சது வேஸ்ட்! அண்டர் பிளேவிலேயே இருந்த படத்தோட டிராமாடிக் தனம், பட்னு அந்த ஸீன்ல மொத்தமா வெளிய எட்டிப்பார்த்து... 'ச்சே’ சொல்ல வைக்குதே!

பஞ்ச்: லாஜிக் லாஸ்... மெசேஜ் சக்சஸ்!

வித்யா: ஹெலிகாப்டர்ல போக முடியாதுனு சொல்றது... ஒன்றரை மணி நேரத்துல வேலூர் போய்ச் சேர்றது... இப்படி ஏகப்பட்ட இடங்கள்ல நெருடல்கள் இருந்தாலும், உடல் உறுப்பு தானம் பத்தி பேசறதுக்காகவே... படத்துக்கு ஜே போடலாம்!

பஞ்ச்: வாழ்க ஹிதேந்திரனின் தியாகம்!

அவள் சினிமாஸ் - சென்னையில் ஒருநாள்

- வே.கிருஷ்ணவேணி

படம்: பா.கார்த்திக்