ஸ்க்ரீன்ஸ்
##~## |
காதல் பிரச்னை காரணமாக உயரதிகாரியிடம் மோதி, வேலை பறிபோனவன்; ஊரில் நயன்தாராவுக்கு கோயில் கட்டி, ஊர் மக்களிடம் தர்ம அடிவாங்கி சென்னைக்கு தப்பி வந்தவன்; சொகுசு காருக்கு ஆசைப்பட்டு, கையிலிருந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் வேலையையும் தொலைத்தவன்... இந்த மூவரும், சின்னச் சின்ன கடத்தல்களை செய்யும் விஜய்சேதுபதியுடன் கைகோக்கிறார்கள். தனக்கென 5 விதமான கொள்கைகளை உருவாக்கிக் கொண்டு, கடத்தல் மூலமாக சம்பாதிக்கும் விஜய்சேதுபதி... 'பெரிய இடத்தில் எல்லாம் கை வைக்கக் கூடாது' என்கிற கொள்கையை சற்றே தளர்த்த, அரசியல்வாதியின் மகனை பணத்துக்காகக் கடத்துகிறது இந்தக் கும்பல். இவர்களைப் பிடிக்க... ஈவு, இரக்கமின்றி கொலை செய்யக்கூடிய 'சைகோ' போலீஸ்காரர் ஒருவர் களத்தில் குதிக்கிறார். முடிவு என்ன என்பதுதான் 'சூது கவ்வும்'!
''ஆக்சுவலா... 'சூது கவ்வும்'னா என்ன அர்த்தம்?'' என்று கேட்டபடியே சென்னை, சத்யம் தியேட்டருக்குள் நுழைந்தார்கள் கல்லூரி மாணவிகளான திவ்யா, பிரீத்திகா ரோஸ், சிந்துஜா, காயத்ரி, கார்த்திகா மற்றும் இல்லத்தரசிகளான சித்ரா, பத்மபிரியா! படம் பார்த்த கையோடு விறுவிறுவென அவர்கள் தந்த விமர்சனம் இதோ...

திவ்யா: 'பீட்சா', 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்'னு ஹிட் பட வரிசையில்... இதுவும் நிச்சய ஹிட்! விஜய்சேதுபதி ஏத்துக்கிட்டிருக்கற 'தாஸ்' கேரக்டர்... இதுவரை பார்த்திராத வித்தியாசமான ரோல். சினிமாத்தனம் இல்லாத, அதேசமயம் பாத்திரத்துக்கு சரியாக பொருந்தக்கூடிய முகம் அவரோட ப்ளஸ்! இவருக்கு சற்றும் குறைவில்லாத கதாபாத்திரங்கள்ல சிம்ஹா, ரமேஷ், அசோக் மற்றும் கருணா நாலு பேரும் அசத்துறாங்க. சிம்ஹாவின் வெகுளித்தன முகம், வெகுவா கைகொடுக்குது. எம்.எஸ் பாஸ்கரோட அரசியல்வாதி கெட்டப்... செம சூப்பர்!
பஞ்ச்: மூணே நாள் ஷூட்டிங். முழுப்படமும் முடிக்கறோம். டைட்டில்... ஹனிமூன். எப்பூடி? செம பஞ்ச் இல்ல..?
பிரீத்திகா ரோஸ்: இயக்குநர் நலன் குமாரசாமியின் முயற்சிக்கு ஜேஜே! புதுமை என்று சொல்வதைவிட, சரியான காட்சிஅமைப்புகள் மற்றும் சொற்பிரயோகங்களின் நேர்த்தி... படத்தை வெகுவாக ரசிக்க வைக்கிறது. ஒரு கடத்தல்காரன், தனக்கென 5 கொள்கைகளை வகுத்துக் கொண்டு, அதற்குள்ளாகவே செயல்படுவது... சூப்பர் டச்! அவனுக்கு கூடவே இருந்து அறிவுரை கூறும் அந்த நிழல் பெண் கதாபாத்திரம்... கே.பாலச்சந்தர் டச்!
பஞ்ச்: அடடே, என்னமா தலையாட்டறான்... அமைச்சர் ஆகறதுக்கு... இதைவிட என்ன தகுதி வேணும்?
சிந்துஜா: 'ஏன்... ஏன்... இந்த முகத்துல ரொமான்ஸே வரமாட்டேங்குது' என டாக்டராக வருபவர் திட்டி நடிக்க வைப்பது; 'என் காசுலதானே குடிச்சீங்க... என் காசுலதான் சாப்பிடணும்' என்று விஜய்சேதுபதி அடம்பிடிப்பது; 'நான் கத்த மாட்டேன்.. தயவு செஞ்சு இந்த கர்சீப்பை வாயில வைக்காதீங்க... நாறுது' என 'கிட்நாப்' செய்யப்படும் பெண் அலறுவது என படம் முழுக்கவே நகைச்சுவையில் பிய்த்து உதறுகிறார்கள்.
பஞ்ச்: ஃபிராடுத்தனம் பண்றது ஈஸி இல்ல. அதுக்கு குருட்டுத்தனமான முட்டாள்தனமும், புத்திசாலித்தனமான முரட்டுத்தனமும் வேணும்.
சித்ரா: தினேஷ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவுக்கு ஒரு சபாஷ். ஒரு சாதாரண அறையில் ஆரம்பித்து... நீதிமன்றம், இருட்டறை என நெடும் பயணம் மேற்கொள்ளும் கேமரா... நன்றாகவே கலக்கி இருக்கிறது. காமெடிக்கு உடல் அசைவுகள், டயலாக் இவற்றோடு பின்னணி இசையும் இருந்தால்... படம் ஜோர்தான். அப்படி ஒரு மியூசிக்கை படைத்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.
பஞ்ச்: கோயில் கட்டறதுக்கு நயன்தாராவை யோசிச்சவங்களுக்கு, இந்த அமலா பால் நினைவு வரலையோ?!

பத்மபிரியா: 'நல்ல படம்னா... அது இப்படித்தான் இருக்கும்' என்று இங்கே கல்வெட்டில் எழுதி வைக்கப்பட்டிருக்கும் பழைய கணக்குகளையெல்லாம் உடைக்கிறது இந்தப் படம். பெரிதாக பேசப்படவேண்டிய கருத்துக்கள்... மனதைத் தொடும் சம்பவங்கள்... என்று எதுவுமே இல்லை. அதேபோல... கதையையோ, கதாபாத்திரங்களின் போக்கையோ எந்த இடத்திலும் யூகிக்கவும் முடியவில்லை. ஆனாலும், படம் முழுக்கவே ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
பஞ்ச்: திரைக்கதைதான் நிஜ ஹீரோ!
காயத்ரி: இரண்டு கோடி ரூபாயைக் கடத்துறப்ப ஆரவாரமான கைத்தட்டல்களை அள்ளுற அந்த ரோபோ ஹெலிகாப்டர் ஸீனை, இன்னும்கூட நல்லா பண்ணி இருக்கலாம். அவ்வளவு பணத்தை அள்ளிட்டு வர்றதுக்கு கொஞ்சம் பெரிய ஹெலிகாப்டரா காட்டியிருந்தா நம்புற மாதிரி இருந்திருக்கும். 'கம்முனா கம்... கம்மாட்டி போ’, 'காசு, பணம், மணி மணி, எல்லாம் கடந்து போகுமடா, டவுசர் கிழிஞ்சுச்சு'னு பாடல்களும் சத்தமில்லாமல் அசத்துறது சூப்பர்!
பஞ்ச்: குடும்பத்தோட போங்க... குபீர்னு சிரிங்க!
கார்த்திகா: அடர்ந்த தாடி, லேசாக நரைத்த முடி என 40 வயது மதிக்கத்தக்க தோற்றத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் விஜய்சேதுபதி. இதுவரை தான் நடித்த படங்களில் நாயகியைக் கட்டிப் பிடித்து நடிக்காத குறையை, இந்த படத்தில் நாயகியை மடியில் அமர்த்தி கொண்டே படம் முழுவதும் பயணித்து நிவர்த்தி செய்திருக்கிறார். மடியில் துள்ளும் அந்த நிழல் கேரக்டர்... சில நேரங்களில் போர் அடிப்பதையும் சொல்லியே ஆக வேண்டும்!
பஞ்ச்: 0% லாஜிக்... 100% மேஜிக்!

- வே.கிருஷ்ணவேணி
படம்: பா.கார்த்திக்