ஸ்க்ரீன்ஸ்
##~## |
தன் தெருவில் வசிக்கும் பெண்ணை, வம்புக்கு இழுத்தவனை கோபத்தில் வெட்டி வீழ்த்திவிட்டு திரும்பும்போது, பதிலுக்கு வெட்டப்பட்டு உயிரிழக்கிறார் சசிகுமாரின் அப்பா. குழந்தை சசிகுமாருடன் நிராதரவாக நிற்கும் அம்மா சரண்யா பொன்வண்ணன், கணவன் வழியில் மகனும் சென்றுவிடக் கூடாது என்பதால், அப்பாவின் புகைப்படத்தைக்கூட காட்டாமல் வளர்க்கிறார். ஆனால், சசிகுமாரோ மீன்குஞ்சாகவே வளர்கிறார்.
ரவுடியாக வலம் வரும் சசிகுமாருக்கு, திருமணம் செய்து வைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று சரண்யா ஆசைப்படுகிறார். ஆனால், தன்னைக் கொல்லக் காத்திருப்போரை நினைத்து, தன் அம்மாவின் கதி வேறு எந்தப் பெண்ணுக்கும் வேண்டாம் என திருமணத்தை தவிர்க்கிறார் சசிகுமார். இடையில் காதலுடன் லஷ்மி மேனன் வர, கதை மாறுகிறது. கொலைவெறியுடன் திரிபவர்களிடம் இருந்து சசிகுமார் தப்பித்தாரா என்பதுதான் 'குட்டிப்புலி’ க்ளைமேக்ஸ்.

சென்னை, சத்யம் தியேட்டரில் படம் பார்த்த குடும்பத் தலைவிகள் வனிதா மோகன், லட்சுமி தேவி மற்றும் கல்லூரி மாணவிகள் பார்கவி, பிரதிபா, வர்ஷா ஆகியோரின் பரபர விமர்சனம் இதோ...
வனிதா மோகன்: 'சுப்பிரமணியபுரம்’, 'நாடோடிகள்’, 'சுந்தரபாண்டியன்’னு ஊர்ப்பக்க கதைகளா தேர்ந்தெடுத்து நடிக்கிற சசிகுமார், அதேமாதிரியே இந்தத் தடவையும் களமிறங்கி இருக்கார். அவருக்கான இலக்கணங்கள் மாறாம, புதுமுக இயக்குநர் முத்தையாவும் படம் பிடிச்சுருக்கார். அதே 'சசிகுமார்'ங்கறதுதான் சலிப்புத் தட்ட வைக்குது! 'பள்ளிக்கூடத்துலகூட இடம் கிடைச்சுடும் போல இருக்கு, பார்லதான் இடம் கிடைக்காது போல’னு ஒன்லைனர்ல சிரிக்க வைக்கிறது, உண்டியல்ல பபிள்கம்மை வைத்து பணம் எடுக்கிறதுனு அங்கங்க ரசிக்க வைக்குறான் 'குட்டிப்புலி’.
பஞ்ச்: அளவுக்கு மிஞ்சினால், அமிர்தமும் நஞ்சு.

லட்சுமி தேவி: மகன் மேல பாசம் வைக்கலாம். அதுக்காக வில்லனைக் கொல்லும் அளவுக்கு கொள்ளைப் பாசம் வெச்சிருக்கறது... ரொம்பவே அதிகமாத்தான் தோணுது. 'ஒரு ஆண் தவறு செய்தா அவன் வாழ்க்கை போச்சு... ஒரு பெண் தவறு செய்தா அந்த வம்சமே போச்சு!’னு டயலாக் பேசுற சசிகுமார், மாஸ் ஹீரோவா மேல ஏற முயற்சி பண்றார். ஆனா, படம்தான் ஆரம்பத்துல ஏகத்துக்கும் டல் அடிக்குது. இடைவேளைக்குப் பிறகு சூடு பிடிச்சாலும்... ஆரம்பத்துலயே வீட்டுக்கு எழுந்து போனவங்கள யார் போய் கூட்டிட்டு வர்றது?!
பஞ்ச்: தாய் எட்டடி... குட்டி?
பார்கவி: பெட்டரா ஏதாவது செய்யணும்னு, பிரயத்தனப்பட்டு, இந்தப் படத்துல பரவாயில்லை ரகமா டான்ஸ் ஆடியிருக்கார் சசிகுமார். 'என் பேச்சை கேட்கலல்ல, அதனால உன் முகத்துலயே முழிக்கமாட்டேன்’னு உப்பு சப்பில்லாத விஷயத்துக்கெல்லாம் அம்மாகிட்ட அவர் கோபப்படறது... சகிக்கல.
பஞ்ச்: 'புலி வயித்துல பிறந்தேனு நினைச்சியா... வைராக்கியத்துக்கு பொறந்தவன்டா!’ ம்... எங்க சார் பேட்டா கொடுக்குறாங்க?!

வர்ஷா: வைரமுத்து புண்ணியத்துல ஒன்றிரண்டு பாடல்களை ரசிக்கலாம். அதேபோல, 'கனா காணும் காலங்கள்’ சீரியல்ல வர்ற பப்பு, பாயசம், கசகசா குரூப்... இந்த கதைக்கான காமெடி தளத்துக்கு கொஞ்சம் தோள் கொடுக்கறாங்க. லட்சுமி மேனன் அழகு கூடியிருக்கறது... கவனிக்க வைக்குது. சசி குமார் - லட்சுமிமேனன் ரெண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி, பயாலஜி, ஃபிஸிக்ஸ் எல்லாம் ஒத்துப்போகுதோ?!
பஞ்ச்: பழைய ஃபாப்கார்ன்... புதிய பாக்கெட்டில்!
பிரதிபா: கமர்ஷியல் படமா இருந்தாலும், அங்கங்க பெண்கள் சென்டிமென்டை அளவா பயன்படுத்தியிருக்கார் இயக்குநர். அம்மா, பக்கத்து வீட்டு அம்மா, மனைவினு பாசப் பந்தல் போட்டிருக்கார். படத்தில் சரண்யாவையும், பக்கத்து வீட்டு அம்மாவையும் பெண் தெய்வங்களா காண்பிச்சிருக்காங்களே... பொதுவா இறந்துபோன பெண்களைத் தானே சாமியா நினைப்பாங்க? இங்க ரெண்டு பேரையும் உயிருள்ள தெய்வங்களா காண்பிக்கிறது கொஞ்சம் ஓவர்தான்னு தோணுது.
பஞ்ச்: பாரின்ல ரூம் போட்டு யோசிங்கப்பா!

- வே.கிருஷ்ணவேணி, படங்கள்: ஆ.முத்துக்குமார்