ஒரு லைவ் ரிலேக.ராஜீவ் காந்தி, படம்: ஜெ.வேங்கடராஜ்
##~## |
ஜூன் 3 - எப்போதும் ஜூஸ் சாப்பிட்ட உற்சாகத்தை தி.மு.க. தொண்டனுக்குக் கொடுக்கும். இந்த ஆண்டு 90 வயது என்ப தால், அவர்கள் அனைவரும் பழச்சாறு மழையில் திளைத்துக் கிடக்கிறார்கள். அனுதினமும் சர்ச்சைகளும் விமர்சனங்களும் உண்டாக்கும் மனச்சோர்விலிருந்து சின்ன விடுதலையாக இருக்கட்டும் என்று தனது 90-வது பிறந்த நாளை வெகு சிறப்பாகக் கொண்டாடலாம் என்று விரும் பினார் கருணாநிதி. ஆனாலும், என்னென்ன சர்ச்சைகளும் பிரச்னைகளும் வரக் கூடாது என நினைத்தாரோ... அவற்றைவிட அதிக நெருடல்களுடனே கடந்துசென்றிருக்கிறது, கருணாநிதியின் 90-வது பிறந்த நாள்!
கனிமொழி... இதயத்தில் வலி!
கடந்த சில வார அரசியல் நிகழ்வுகள் ராஜ்யசபா தேர்தலை முன்வைத்தே அரங்கேறுகின்றன. ஆனால், அவற்றில் எதுவுமே தி.மு.க-வுக்குச் சாதகமாக இல்லை. கனிமொழியின் ராஜ்யசபா எம்.பி. பதவி அடுத்த மாதத்தோடு முடிவடையஇருக்கிறது. கனிமொழி மீண்டும் ராஜ்யசபா எம்.பி. ஆனால்தான் ஸ்பெக்ட்ரம் வழக்குக்கு அது கேடயமாக இருக்கும் என்பதால், மீண்டும் அவரை ராஜ்யசபாவுக்குத் தேர்வுபெறவைக்க மிகுந்த பிரயாசைப்பட்டார் கருணாநிதி. ஆனால், தி.மு.க. தரப்பு எவ்வளவோ இறங்கிவந்தும் விஜயகாந்திடம் இருந்து பாசிட்டிவ் சமிக்ஞையே இல்லை. கனிமொழி குறித்த அந்தக் கவலை பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒவ்வொரு தருணத்திலும் கருணாநிதியின் முகத்தில் பிரதி பலித்துக்கொண்டே இருந்தது!
தயாளு... தர்மசங்கடம்!
மே 31 அன்று டெல்லி நீதிமன்றத்தில் நடந்த ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையில் தயாளு அம்மாள் அடுத்த மாதம் 8-ம் தேதி கண்டிப்பாக நேரில் ஆஜராகியே தீர வேண்டும் என்றும், எந்தவிதப் பேச்சுக்கும் இனி இடமே இல்லை எனக் கண்டிப்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பிறந்த நாள் கொண்டாட்டங்கள் தொடங்கவிருக்கும் நிலையில், அப்படி ஓர் அதிர்ச்சி அஸ்திரம் பாயும் என்று எதிர்பார்க்கவே இல்லை கருணாநிதி. வைரமுத்து ஏற்பாடு செய்திருந்த கவிஞர்கள் சந்திப்பு மாலையில் நடக்கவிருக்க, அன்று காலையில் நிருபர்களைச் சந்தித்த கருணாநிதி, ''என் மனைவியைக் கட்டாயப் படுத்தி நேரில் வரவழைக்கும்போது, அவருடைய உடல்நிலைக்கு மேலும் ஏதாவது பாதிப்பு ஏற்படு மாயின் அதற்கு யார் பொறுப்பு?'' என்று கவலை தோய்ந்த முகத்தோடு கேட்டார். மாலை நடந்த கவிஞர்கள் சந்திப்பிலும் அந்தக் கவலை தொனித் தது. அந்தச் சந்திப்பில் முதலில் 90 கவிஞர்களும் கருணாநிதியைப் பற்றிக் கவிதை படிப்பதாகத்தான் திட்டம். ஆனால், கவிதை படித்தால் நேரமாகும் என்பதால், சந்திப்பு என்பதோடு நிறுத்திக் கொண்டார்கள். அப்போது பேசிய கருணாநிதி, ''நான் இப்போது முழு நிம்மதியாக இல்லை. எனக்குப் பல்வேறு இடைஞ்சல்கள், இடையூறுகள் வருகின்றன. என்னைப் பொறுத்தவரை பொது வாழ்க்கையில் அவை எல்லாம் தூசிகள். நான் தொடர்ந்து பயணம் செய்ய விரும்புகிறேன். எனக்கு இழைக்கப்படும் தீங்குகளெல்லாம் ஒரு வகையில் தமிழுக்கு இழைக்கப்படும் தீங்குகள்!'' என்று தன் உள்ளக் கொதிப்பை வார்த்தைகளில் வடித்தார்.

ஜூன் 1-ம் தேதி தி.மு.க. மகளிர் அணி சார்பில் கொண்டாட்டங்கள் அண்ணா அறிவாலயத்தில் நடந்தன. ஸ்டாலின், கனிமொழி இருவரும் அரங்கில் இருக்க... குஷ்புவை எங்குமே காண முடியவில்லை. கருணாநிதியைச் சுற்றி மகளிர் அணியினர் சூழ்ந்து நின்றுகொண்டு, 'முகுந்தா முகுந்தா’ பாடலின் ரீமிக்ஸுக்குப் பாடி ஆடினார்கள். அப்போதுதான் கருணாநிதி முகத்தில் சிறிது உற்சாகத்தைப் பார்க்க முடிந்தது!
ராஜாத்தி... நெஞ்சுக்குள் புயல்!
ஞாயிற்றுக்கிழமை 'நெஞ்சுக்கு நீதி - ஐந்தாம் பாகம்’ மற்றும் 'சிறுகதைப் பூங்கா’ நூல்கள் வெளியீட்டு விழா. வழக்கம்போல கருணாநிதியை அனைவரும் பாராட் டித் தள்ளினார்கள். நூல்களை வெளியிடும் நேரத்தில் திடீரென ராஜாத்தி தடுமாறி விழ, மேடையில் இருந்தபடி அதைக் கவனித்துவிட்ட கருணாநிதி பதறிப்போனார். அந்தச் சமயம் அனைவரது கவனமும் மேடையிலேயே இருந்ததால், கனிமொழிகூட அருகில் இருந்த தாயாரின் தடுமாற்றத்தைக் கவனிக்கவில்லை. முதலில் பதறிய கருணாநிதி, பிறகு சீறிவிட்டார். சில நொடி சலசலப்புக்குப் பிறகே நிலைமை சகஜமானது.

90 வயதிலும் கருணாநிதி எவ்வளவு ஷார்ப் என்பது ஓர் இடத்தில் வெளிப்பட்டது. நெஞ்சுக்கு நீதி, சிறுகதைப் பூங்கா என்ற இரண்டு புத்தகங்களின் வெளியீட்டு விழா அது. ஆனால், வரவேற்புரை ஆற்றிய துரைமுருகன், நெஞ்சுக்கு நீதியைப் பற்றியே குறிப்பிட்டார். 'இது தவறு’ என்று கருணாநிதி சுட்டிக் காட்டியபோது அரங்கம் அதிரக் கைத்தட்டல். உடனே, அருகில் இருந்த நீதியரசர் மோகன், 'உணர்ச்சிவசப்பட்ட நிலையில் தவறு செய்துவிட்டார்’ என்று சொன்னார். அடுத்த நொடியே, 'உணர்ச்சிவசப்பட்டு தவறு செய்பவர்களுக்குத் தண்டனை தருவதுதானே நீதியரசர்களின் வேலை’ என்று கருணாநிதி சொன்னபோது, அறிவாலயம் குலுங்கியது. கருணாநிதியின் சிந்தனைக்கு வயதாகவே இல்லை!
மனுஷ்யபுத்திரன்... புதிய 'பிறப்பு’!
கருணாநிதி பிறந்த நாளன்று யாருமே எதிர்பார்க்காத புதிய 'உடன்பிறப்பாக’ அவதரித்தவர்... கவிஞர் மனுஷ்யபுத்திரன். இதுவரை பொதுவெளிகளில் கருணாநிதி, ஜெயலலிதா இருவரையும் சரிவிகிதத்தில் விமர்சித்து வந்த மனுஷ்யபுத்திரன், அந்த நூல் வெளியீட்டு விழாவில்தான் முதன்முதலாக தி.மு.க-வுக்காக மேடையேறினார். மேடையில், துரைமுருகனே அதிசயமாக அரசியல் பேசாமல் ஒதுங்க, மனுஷ்யபுத்திரன் தி.மு.க-வுக்கான தனது கன்னிப் பேச்சிலேயே அ.தி.மு.க. அரசை வசைபாடி கருணாநிதியின் மனதில் இடம்பிடித்துவிட்டார். ''தி.மு.க-காரனிடம் மட்டும்தான் அரசியல் பேச முடியும். மற்ற கட்சிக்காரர்களிடம் பேசினால் பதில் கிடைக்காது. கலைஞரின் துரதிர்ஷ்டமே அவரின் தகுதிக்குக் குறைந்தவர்களோடு சரிசமமாக அரசியல் செய்ய வேண்டிய நிர்பந்தம்தான்!'' என்று புருவம் உயரவைத்தார். இறுதியாகப் பேச கருணாநிதி முன் மைக் வைக்கப்பட்டது. ''நாளை ஒருநாள் ஒற்றுமையாக இருந்து அமைதி காத்து, நல்லவிதமாக விழா நடக்க அனைவரும் பாடுபட வேண்டும்!'' என்று யாருக்கோ செய்தி சொல்லி முடித்துக்கொண்டார் கருணாநிதி.
ஸ்டாலின்தான் கருணாநிதியின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் அனைத்தையும் முன்னின்று நடத்தியது. எப்படியும் தளபதிக்குச் சாதகமான அறிவிப்பு வந்துவிடும் என்று ஸ்டாலின் ஆட்களும் வரிந்துகட்டிச் செயல்பட்டனர். அழகிரி ஒரு வாரமாகவே முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டு ஒதுங்கி இருக்க, ஸ்டாலின் தரப்புக்கு அது இன்னும் வசதியாகிவிட்டது. ஆனால், இறுதி வரை ஸ்டாலின் எதிர்பார்த்த அந்த அறிவிப்பு வரவே இல்லை!
திங்கள்... க்ளைமாக்ஸ்!
திங்களன்று பிறந்த நாள். சி.ஐ.டி. காலனியில் மரம் நட்டுவிட்டு 6 மணிக்கு அங்கிருந்து கோபாலபுரம் கிளம்பினார். அங்கு அழகிரி, துரை தயாநிதி, தயாநிதி மாறன், ஸ்டாலின், உதயநிதி, மு.க.தமிழரசு, அருள்நிதி ஆகியோர் ஒருவர் பின் ஒருவராகக் குடும்பத்தோடு வந்து ஆசி பெற்றனர். 8 மணிக்கு அனைவரது முன்னிலையில் கேக் வெட்டி மகிழ்ந்தார். அதன் பின்னர் அண்ணா, பெரியார் நினைவிடங்களில் மரியாதை செலுத்திய பின்னர், காலைச் சிற்றுண்டிக்காக மீண்டும் கோபாலபுரம் சென்றவர் 10 மணி சுமாருக்கு அறிவாலயம் வந்து தொண்டர்களைச் சந்தித்தார். பிறந்த நாள் விழாவை வைத்து விஜயகாந்த் வருவார், ராமதாஸ் வருவார் என ஏகப்பட்ட கூட்டணிக் கணக்கு களைப் போட்டு விடைகளுக்காகக் காத்திருந்தனர் உடன்பிறப்புகள். ஆனால், எதிர்பார்த்ததில் ஒன்று கூட நடக்கவில்லை.
கொண்டாட்டம் முழுக்க கருணாநிதி கேட்டுக்கொண்டது ஒன்றுதான். ஒற்றுமை... ஒற்றுமை... ஒற்றுமை! அது யாருக்காகச் சொல்லப்பட்டது என்பதை அவரவர்கள் புரிந்துகொண்டால் சரி!