Published:Updated:

சென்னை உன்னை வரவேற்கிறது!

ஆர்.சரண், ஓவியங்கள்: கண்ணா

##~##

மிழகத்தின் பிற நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து சிங்காரச் சென்னைக்கு முதல்முறை வந்தவனை ஈஸியாக இனம் காணலாம். இதோ அப்படிப்பட்ட ஒருவனுக்கான பிராண்டட் ரியாக்ஷன்ஸ்!

பேருந்து சென்னைக்குள் நுழையும்போது அந்த அதிகாலையிலும் மீனம்பாக்கம் ஏர்போர்ட்டில் விமானம் நிற்கிறதா என்று ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்ப்பான். புத்திசாலித்தனமாக நகரப் பேருந்தில் ரன்னிங் கில் லேடீஸ் சீட்டில் கர்ச்சீப் போட்டு இடம் பிடிப்பான். ஆனால், ஒரு லேடி பொன்னம் பலம் வந்து லெக்சர் கொடுத்தவுடன், நடுங்கி எழுந்து இடம் கொடுப்பான். இறுக்க, கிறக்க ஜீன்ஸ் போட்டுக்கொண்டு ஹாயாகத் திரியும் டீன் டிக்கெட்டுகளை வாய் பிளந்து பார்ப் பான். இரு சக்கர வாகனத்தில் கடக்கும் கட்டிப் பிடி ஜோடியைக் காதில் புகைவரக் கவனிப்பான். சாலையைக் கடக்க அவ்வளவு குழம்புவான். சிக்னல் புரிபட நாட்கள் ஆகும் அவனுக்கு. எங்கும் எப்போதும் நடப்பான்... நடப்பான்... நடப்பான். 'நோ பார்க்கிங்’ என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை சென்னைதான் அவனுக்குக் கற்றுக்கொடுக்கும்.

வள்ளுவர் கோட்டத்துக்கு வள்ளுவரைப் பார்க்கப் போய் பல்பு வாங்கி வருவான். பீக் ஹவர் பீச் வெயிலில் லவ்ஸ் விடும் சென்னை யூத்துகளை ஏக்கப் பெருமூச்சோடும், ஆச்சர்யத்தோடும், குறிப்பாக வயிற்றெரிச்சலோடும் ஓரக்கண்ணால் பார்ப்பான். ஒவ்வொரு முறை எஸ்க லேட்டரில் ஏறிக் கடக்கும்போதும் மனசுக்குள் மாரியாத்தாவை வேண்டிக்கொள்வான். ரோட்டு இட்லிக் கடையில் அழுக்குக் கைலியோடு பீடி வலிப்பவனும் பீட்டர் இங்லாண்டில் டை கட்டியவனும் ஒன்றாகச் சாப்பிடுவதை, விழி பிதுங்கப் பார்ப்பான். சாந்தி தியேட்டர் சப்வேயில் புத்தகங்களையும் குண்டு ஆன்ட்டி களையும் குழப்பத்தோடு நோக்குவான். அதே சப்வேயில் சாந்தி தியேட்டருக்குப் போவதற்குப் பதில் அண்ணா தியேட்டர் பக்கம் போய் ஏறி நின்று ரிட்டர்ன் அடிப்பான்.

சென்னை உன்னை வரவேற்கிறது!

'ஷேர் ஆட்டோவுல இம்புட்டுப் பேரை ஏத்த முடியுமா?’ என்பது அவன் மைண்ட்வாய்ஸ். அதே ஆட்டோவில் அவனை இடித்துக்கொண்டு ஒரு ஜீன்ஸ் போட்ட அப்சரஸ் பெர்ஃப்யூம் வாசனையோடு சக பயணியாக அமர்ந்தால், சிறகு முளைக்கும் அவனுக்கு. இவனை ஆட்டோ சீட்டாகக்கூடக் கண்டுகொள்ளாத அந்த ஃபிகருடன் கற்பனையிலேயே குட்டி டூயட் பாட, ஃபாரின் லொகேஷனுக்குப் போய்விடுவான். திருவல்லிக்கேணி மேன்ஷன் ரூம்களில் மனிதர்கள் வாழ்வதைப் பார்த்து ஆச்சர்யப்படுவான். ரங்கநாதன் தெரு, பாண்டி பஜாருக்கு சும்மா சும்மா போய்த் திரிவான்.

சினிமா ஷூட்டிங் என்றால், நாள் முச்சூடும் வேடிக்கை பார்ப்பான். முத்துக்காளை, பொன்னம்பலம், அல்வா வாசு எனப் 'பிரபலங்கள்’ யாரைப் பார்த்தாலும் ஓடிப்போய் மொபைலில் போட்டோ எடுத்துக்கொள்வான். சத்யம், எஸ்கேப்களில் சினிமா பார்க்கும்போது எதேச்சையாக குஷ்புவைப் பின் இருக்கையில் பார்த்துவிட்டால், ஸ்க்ரீன் பக்கம் திரும்பாமல் குஷ்புவையே வெறிப்பான்.

சென்னை உன்னை வரவேற்கிறது!

தி.நகரும் தியாகராயர் நகரும் வேறுவேறென நினைத்துக் கொள்வான். பீச் ஸ்டேஷனில் இறங்கி பீச்சைத் தேடுவான். வேப்பேரிக்கும் வேளச்சேரிக்கும் வித்தியாசம் தெரியாது அவனுக்கு. மவுன்ட் ரோடு டி.வி.எஸ்ஸுக்குப் போவதற்குப் பதிலாக, லூகாஸ் டி.வி.எஸ்ஸுக்குப் பஸ் பிடிப்பான். 'பாடினு ஏன் பேர் வெச் சாய்ங்க?’, 'சூளைல இருக்கிற மேடுதானே சூளைமேடு. ஆனா, அது வேற ஏரியானு சொல்றாய்ங்களே?’, 'சாலிகிராமத்துல கிராமத்தையே காணோம்?’ எனக் காட்சிப் பிழையில் குழம்பித் தவிப்பான்.

சென்னை உன்னை வரவேற்கிறது!

எக்ஸ்பிரஸ் அவென்யூ, ஃபீனிக்ஸ், சிட்டி சென்டர், ஃபோரம் போன்ற பளபள மினுமினு ஷாப்பிங் மால்களின் நடுவில் நின்றுகொண்டு அதன் உத்தரத்தை அண்ணாந்து பார்ப்பது, அவன் ஸ்பெஷல் அடையாளம். நகரப் பேருந்தில் உயரமான ராஜா சீட்டில் உட்கார்ந்து பெருமிதப்பட்டுக்கொள்வான். ஒயிட் போர்டு, க்ரீன் போர்டு, டிஜிட்டல் போர்டு வித்தியாசம் தெரியாமல் ஏறி, 'காசு அதிகமா வாங்குறாய்ங்க’ என்று கண்டக்டரைத் திட்டித் தீர்ப்பான். பஸ்ஸில் பாஸிங்கில் டிக்கெட்டுக்குக் காசு கொடுத்து விட்டு, திரும்ப கைக்கு டிக்கெட் வர்ற வரைக்கும் 'பக்...பக்...’ என்று பதறி நிற்பான். செக்கரிடம் மாட்டிக்கொண்டு, ''கண்டக்டர் வரவே இல்லை'' எனச் சண்டை போடுவான். ''அண்ணே... தெரியாம ஏறிட்டேண்ணே'' எனப் புறநகர் டி.டி.ஆரிடம் பிடிபட்டுக் கெஞ்சுவான்.

யோசிச்சுப் பார்த்து சரிதானான்னு சொல்லுங்க மக்கா!