Published:Updated:

சிவப்புத் தாழ்வாரத்தின் கதை!

டி.அருள் எழிலன்

##~##

சிவந்து கிடக்கிறது மத்திய இந்தியா. மாவோயிஸ்ட்களால் பலிவாங்கப்பட்ட காங்கிரஸ்காரர்களின் உடல்களில் இருந்து சிந்திய ரத்தம் தண்டகாரண்யாவின் பசுமைக் காடுகளில் சிவப்பாகப் படிந்திருக்கிறது. ''இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்'' என்கிறார்கள் மன்மோக னும் சோனியாவும். ''மக்களுக்கு எதிராக வன்முறை, படுகொலைகளை நிகழ்த்தும் பாசிஸ்ட்கள் ஒருபோதும் மன்னிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் தவிர்க்க முடியாமல் மக்களால் தண்டிக்கப்படுவார்கள்'' என்கிறது மாவோயிஸ்ட்களின் அறிக்கை.

சத்தீஸ்கர் மாநிலத்தில் விரைவில் தேர்தல் வரப்போகிறது. அதற்கான முன்னெடுப்பாகக் கடந்த 25-ம் தேதி பஸ்தர் பகுதியில் காங்கிரஸ் கட்சி 'பரிவர்த்தன் யாத்ரா’  (மாற்றத்துக்கான யாத்திரை) என்ற பெயரில் பேரணி நடத்தியது. அதில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர்கள் மீதுதான் மாவோயிஸ்ட்கள் தாக்குதல் நடத்தினார்கள். சுமார் 250 மாவோயிஸ்ட் போராளிகள் காடுகளுக்குள் மறைந்திருந்து நடத்திய திடீர் கெரில்ல தாக்குதலில் மொத்தம் 27 பேர் கொல்லப்பட்டனர். அதில் முக்கியமானவர் மகேந்திர கர்மா (பார்க்க பெட்டிச் செய்தி).

சிவப்புத் தாழ்வாரத்தின் கதை!

'பன்னாட்டு நிறுவனங்களுக்கு இயற்கை வளங்களைக் கூறு போட்டு விற்கும் இந்த அரசு தனது படைகள் மூலமாகப் பல்லாயிரம் பழங்குடி மக்களைக் கொலை செய்தும், பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியும், சொத்துகளைச் சூறையாடியும் வருகிறது. அதற்கான பழிதீர்க்கும் நடவடிக்கைதான் இந்தத் தாக்குதல். இந்த எதிரிகளின் மரணத்துக்காக பஸ்தர் பகுதியே கொண்டாட்டத்தில் மூழ்கியிருக்கிறது. இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் ராணுவத்தினரின் குடும் பத்தினரிடம் ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்!’ என்கிறது தாக்குதலுக்குப் பிறகு வந்த மாவோயிஸ்ட் கட்சியின் அறிக்கை.

'மாவோயிஸ்ட்கள் பலவீனமடைந்துவிட்டார்கள். காடுகளுக்குள் முடங்கிவிட்டார்கள்’ என நம்பிக்கொண்டிருந்தவர்களுக்கு இந்தத் தாக்குதல் மிகப் பெரிய அதிர்ச்சி. ஆசாத், கிஷன்ஜி உள்ளிட்ட பல முக்கிய மாவோயிஸ்ட் தலைவர்கள் கடந்த காலங்களில் துணை ராணுவப் படைகளாலும், காவல் துறையாலும் கொல்லப்பட்டுவிட்டனர். இன்னும் பலர் கைது செய்யப்பட்டுவிட்டனர். ஆனாலும், 'எங்கள் வலிமை இன்னும் குறைய வில்லை’ என்பதை இந்தத் தாக்குதல் மூலம் உணர்த்தி இருக்கிறார்கள் மாவோயிஸ்ட்கள். எத்தனை முறை வெட்டினாலும், துளிர்த்து முளைக்கும் மாவோயிஸ்ட்களின் ஆணி வேர் எது? இந்தக் கேள்விக்கும் விடைக்கும் இடையே சுமார் 50 ஆண்டு கால ரத்த வரலாறு உள்ளது.

நக்சல்பாரி எழுச்சி!

நக்சலைட்கள் என்றாலே தீவிரவாதிகள் என்று நினைக்கும் சூழல்தான் இன்று உள்ளது. ஆனால், அதன் வரலாறு வேறு. சுதந்திர இந்தியாவில் 1960-கள் காலகட்டத்தில் நாடே கடும் பஞ்சத்திலும், கொடிய வறுமையிலும் சிக்கியது. காலராவில் மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்தனர். தொலைதூரப் பிரதேசமான மேற்கு வங்க மாநிலத்தின் நக்சல்பாரி கிராமத்திலும் இதுதான் நிலைமை. அந்த ஊரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியரான சாரு மஜூம்தார், சீனாவில் ஆயுதம் தாங்கிய மக்கள் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய மாவோவின் சித்தாந்தங் களைப் படித்தார். அந்த வாசிப்பு உண்டாக்கிய உணர்வெழுச்சியில் தனது 50 ஏக்கர் நிலங்களையும் அதில் வேலை செய்த ஏழைக் கூலிகளுக்குப் பிரித்துக் கொடுத்தார். 'புரட்சி என்பது கேளிக்கை விருந்தல்ல; அது கலகத்தின் மூலம் ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை வெல்வதாகும்’ என்ற மாவோவின் கோஷத்தை உள்வாங்கி, பண்ணையார்களிடம் இருந்து நிலங்களைக் கைப்பற்றுமாறு மக்களுக்கு அறைகூவல் விடுத் தார். சாரு மஜூம்தாரின் அந்தக் குரல்தான் இந்தியாவில் ஆயுதம் தாங்கிய கம்யூனிஸ்ட்களின் முதல் கலகக் குரல்!

கம்யூனிஸ்ட்கள் என்றால் தொழிற்சங்கம், விவசாயச் சங்கம், ஆர்ப்பாட்டம் என்கிற வரலாற்றை உடைத்து ஆயுதப் புரட்சியை அறிமுகப்படுத்தினார். இந்தப் புதிய வகை கம்யூனிஸ்ட்கள் 'மாவோயிஸ்ட்கள்’ என அழைக்கப்பட்டனர். 'தேர்தல் பாதை திருடர் பாதை... மக்கள் பாதை புரட்சிப் பாதை’ என்ற கோஷத்தோடு இந்தியா முழுக்கப் புரட்சிக்கான சூழலை உருவாக்க முயன்றார். தேர்தல் பாதையில் பயணித்த பிற கம்யூனிஸ்ட்கள் அவரை மனநோயாளி என்றும் அமெரிக்கக் கைக்கூலி என்றும் சொன்னார்கள். ஏனென்றால், அவர் இந்தக் கிளர்ச்சியைத் தொடங்கியது கம்யூனிஸ்ட்கள் ஆட்சி செய்து கொண்டிருந்த மேற்கு வங்க மாநிலத்தில்.

சிவப்புத் தாழ்வாரத்தின் கதை!

நாட்டின் இதரப் பகுதிகளில் சாரு மஜூம்தாரின் கோஷத்தால் பலர் ஈர்க்கப்பட்டனர். மாவோயிஸ்ட்கள் முன்வைத்த கவர்ச்சிகரக் கோஷங்களும், பழமையைப் பொசுக்கும் பாடல்களும் இந்தியா முழுக்கக் கல்லூரி மாணவர்களிடையே தீவிரமாகப் பரவியது. மேல்தட்டு மாணவர்களிடையே மாவோயிஸம் ஒரு கவர்ச்சிப் படிமமாகவும் சாரு மஜூம்தார் கனவு நாயகனாகவும் பதிந்தார்கள். பொறியியல், மருத்துவம், சட்டம் படித்த மாணவர்கள் மாவோயிஸத்தால் ஈர்க்கப்பட்டு, ஆயுதப் போராட்டத்துக்கு வந்தபோது தென் இந்தியாதான் மாவோயிஸத்தின் மையமாக இருந்தது. பிறகு, சாரு மஜூம்தார் போலீஸிடம் பிடிபட்டு, உடல் நலம் குன்றி மரணம் அடைந்தார்.

ஆனாலும், சாரு மஜூம்தார் கொளுத்திய நெருப்பின் ஜுவாலை கேரளம், தமிழகம், கர்நாடகம், ஆந்திரா என தென்னிந்தியா முழுக் கப் பரவியிருந்தது. தமிழகத்தில் தர்மபுரி, பெண்ணாகரம் பகுதி அவர்களின் மையமாக இருந்தது. ஆந்திராவில் குறுகிய காலத்தில் பல லட்சம் ஏக்கர் நிலங்கள் ஏழை விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. மத்திய-மாநில அரசு கள், மாவோயிஸ்ட்களை ஒழிக்க நவீன ஆயுதங்களுடன்  காடுகளுக்குள் புகுந்து வேட்டையாடின.தமிழகத்தில் மட்டும் 30-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட... இயக்கம் முடிவுக்கு வந்தது.

எஞ்சியிருந்த மாவோயிஸ்ட்கள் தமிழகம், ஆந்திரத்தை விட்டு வெளியேறி சத்தீஸ்கர் காடுகளுக்குள் இடம் பெயர்ந்தார்கள். மேற்கு வங்கம் நக்சல்பாரி கிராமத்தில் வேர்விட்டு, தென்னிந்தியாவில் வலுப்பெற்ற மாவோயிஸம், மத்திய இந்தியாவின் தண்டகாரண்யக் காடுகளில் நிலைகொண்ட வரலாறு இதுதான்!

பழங்குடி மக்களின் கண்ணீர்க் கதை!

மத்திய இந்தியாவின் சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிஸ்ஸா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஆந்திரப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் என்ற 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இன்றும் செல்வாக்குடன் பரவியிருக்கிறார்கள் மாவோயிஸ்ட் கள். அதன் இதயமாக இன்று மத்திய இந்தியக் காடுகள் திகழ்வதால் ஊடகங்கள் அதை 'சிவப்புத் தாழ்வாரம்’ என்று அழைக்கின்றன.

சிவப்புத் தாழ்வாரத்தின் கதை!

மேற்கு வங்கம், ஜார்கண்ட், ஒடிஸ்ஸா, சத்தீஸ்கர், ஆந்திரா ஆகிய மாநில எல்லைகளை இணைத்தபடி பரந்து விரிந்திருக்கும் அடர்ந்த காட்டுப் பகுதியைத்தான் 'தண்டகாரண்யா’ என்கிறார்கள். இங்கு கோண்டு, சான்தால், முண்டா, ராஜ்பான்சி ஆகிய பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கின்றனர். காடு அவர்களின் தாய் என்றபோதிலும், அவர்களுக்கு அதில் உரிமை ஏதும் இல்லை. ஒரு பழங்குடியிடம் இருந்து ஒரு கிலோ புளியை ஒரு ரூபாய்க்கு வாங்கும் வணிகர்கள், வெளியில் நூற்றுக்கணக்கில் விலைவைத்து விற்கிறார்கள். பல நூறு ரூபாய் மதிப்புள்ள அரிய தானியங்களைக் கொட்டிக் கொடுத்தால் மட்டுமே அவர்களுக்கு ஒரு கிலோ கல் உப்பு கிடைக்கும். ஊட்டச் சத்துள்ள உணவை ஒருபோதும் அவர்கள் உண்டது இல்லை. ஆனால், அவர்களின் காலடியில்தான் பல மில்லியன் கோடி ரூபாய் மதிப்புள்ள 27 வகையான கனிம வளங்கள் புதைந்திருக்கின்றன. அதைக் குறிவைத்துப் பல பன்னாட்டு நிறுவனங்கள் அங்கு வட்டமிடுகின்றன.

இதை எதிர்த்துதான் மாவோயிஸ்ட்கள் மக்களைத் திரட்டி ஆயுதப் போராட்டம் நிகழ்த்துகின்றனர். காட்டுக்குள் மக்கள் யார், மாவோயிஸ்ட்கள் யார் எனப் பிரித்துப் பார்க்க முடியாதபடி இரு தரப்பும் கலந்திருக்கின்றனர். ஒரு மலேரியா மருந்தையோ, நோய்த் தடுப்பு மாத்திரைகளையோ வைத்திருந்தால் அவர்கள் மாவோயிஸ்ட்கள் என்பதுதான் நடைமுறை உண்மை. எனில், ஒரு மலேரியா மாத்திரை யைக்கூட மக்களுக்குத் தர முடியாத கீழ் நிலையில்தான் அங்கு அரசு நிர்வாகம் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

தண்டகாரண்யா காட்டின் ஒவ்வொரு மலையின் மீதும், ஒவ்வொரு மரத்தின் மீதும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அவை ஒவ்வொன்றும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ளவை. ஆகவே, மாவோயிஸ்ட்களின் போராட்டத்தை வெறுமனே வறட்டுத் தீவிரவாதம் என்றோ ஆயுதங்களின் மீது காதல்கொண்டவர்களின் வெறியாட்டம் என்றோ புரிந்துகொள்ள முடியாது. அதற்கான அரசியல் நியாயம் உள்ளது. ஆனால், பதுங்கியிருந்து தாக்குதல்களை நடத்திக்கொண்டு இருப்பதன் மூலமாக, அவர்கள் தங்களது கோரிக்கையை வெல்ல முடியாது.

பெருந்திரள் மக்கள் தங்களின் கோரிக்கைகளுக்காக ஒன்று கூடிப் போராடி வெல்லும் வரலாற்றில் இருந்து மாவோயிஸ்ட்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்!

சிவப்புத் தாழ்வாரத்தின் கதை!

சல்வா ஜூடும்... மகேந்திர கர்மா!

மாவோயிஸ்ட் தாக்குதலில் கொல்லப்பட்ட மகேந்திர கர்மா, பஸ்தர் பகுதியில் பெரும் பண்ணையார் குடும்பத்தைச் சேர்ந்தவர். சட்டம் படித்து 1975-ம் ஆண்டு சி.பி.ஐ-யில் எம்.எல்.ஏ-வாக இருந்தவர். பிறகு, காங்கிரஸில் இணைந்தார். சத்தீஸ்கர் தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டபோது, தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சரானார். தனது அமைச்சரவை அதிகாரத்தைப் பயன்படுத்தி தண்டகாரண்யா காட்டுப் பகுதிகளில் உள்ள கனிமங்களைச் சுரண்ட பல நிறுவனங்களுக்கு  அனுமதி அளித்தார். அதற்கு நிலம் தர மக்கள் மறுத்தபோது போலீஸையும் குண்டர்களையும் ஏவிவிட்டு அடித்து நொறுக்கினார். இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கத் தடையாக இருக்கும் மாவோயிஸ்ட்களை ஒழித்துக்கட்டுவதில் காங்கிரஸ், பா.ஜ.க., முதலாளிகள் ஆகியோர் முக்கோணக் கூட்டணி அமைத்தனர். அதன் விளைவாக 'சல்வா ஜூடும்’ எனும் படை உருவானது. இதற்கு மகேந்திர கர்மா தலைமை ஏற்றார்.

சல்வா ஜூடுமிலும் பழங்குடி மக்களே சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு நவீன ஆயுதங்கள் வழங்கப்பட்டு, மாதச் சம்பளம் தரப்பட்டது. அவர்கள் தங்கள் சொந்த சகோதரர்களை வன்முறையாகச் சுட்டுக் கொன்றார்கள். ஊர் ஊராக எரித்து தீக்கிரையாக்கினார்கள். சல்வா ஜூடும் படையினரால் எரிக்கப்பட்ட மொத்தக் கிராமங்களின் எண்ணிக்கை 640. லட்சக்கணக்கான பழங்குடி மக்கள் உடுக்க உடையின்றி காடுகளுக்குள் அடைக்கலம் புகுந்தனர். இப்படி நாடோடிகளாக்கப்பட்ட மொத்த மக்களின் எண்ணிக்கை 50 லட்சம். இவர்களில் 50 ஆயிரம் பேர் அரசு நடத்திய நிவாரண முகாம் களில் அடைக்கப்பட்டனர். பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டனர். மக்கள் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்பட்டனர். உடல்களைத் துண்டு துண்டாக வெட்டி ஆறுகளில் வீசினார்கள். அப்பாவிகளாக இருந்தவர்கள் சல்வா ஜூடுமில் இணைந்து இரக்கமற்ற கிரிமினல்களாக மாறினார்கள். இத்தனைக்கும் தலைமையேற்று செயல்பட்டவர்தான் தற்போது கொல்லப்பட்ட மகேந்திர கர்மா!