Published:Updated:

மீண்டும் பள்ளிக்குச் செல்லலாம்!

க.நாகப்பன், படம்: சி.சுரேஷ்பாபு

##~##

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள்... இதோ திறக்கவிருக்கின்றன! விடுமுறைக் குதூகலங்கள் மனதிலிருந்து மறைவதற்குள் மூன்றாம் வகுப்பு வரையிலான குழந்தைகளைக் கோபப்படாமல், திட்டாமல், அடிக்காமல் பள்ளிக்கு அனுப்புவது லேசுப்பட்ட சாதனையல்ல என்பதே பெரும்பாலான பெற்றோரின் பதில். ஆனால், ''அப்படிலாம் எதுவும் கிடையாது. உங்க அணுகுமுறை சரியா இருந்தா, அதுலாம் ஒரு பிரச்னையே இல்லை'' என்கிறார் விஜயலட்சுமி. பள்ளி மாணவர்களின் மனநிலை சார்ந்த தொடர் ஆய்வில் ஈடுபட்டுவரும் விஜயலட்சுமி, திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர். மாணவர்களின் நலன் சார்ந்து இயங்கிவரும் விஜயலட்சுமி, குழந்தை களின் மீண்டும் பள்ளி செல்லல் குறித்தான மனோதத்துவ வழிமுறைகளை விளக்கினார்.  

''விடுமுறை நாட்களில் குழந்தைகள் நினைச்ச நேரத்தில் தூங்கி, எந்திரிக்கப் பழகியிருப்பாங்க. அந்தப் பழக்கத்தை உடனே மாத்துறது சிரமம்தான். ஆனா, அதுக்காக அந்தப் பழக்கத்தை பள்ளிக்கூடம் திறந்த பிறகும் தொடர அனுமதிக் கக் கூடாது. தாமதமாக எந்திரிக்கும் குழந்தை களிடம், 'சீக்கிரமே எந்திரிச்சா உனக்குப் பிடிச்ச ஏதாவது ஒரு பொருளை வாங்கித் தருவேன்’ என்று சொல்லலாம். அது மிக காஸ்ட்லியான பொருளாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. குழந்தைகளை எளிதில் கவரும் ஏதேனும் சின்ன விளையாட்டுப் பொருளாகக்கூட இருக்கலாம்.

மீண்டும் பள்ளிக்குச் செல்லலாம்!

'நீ ஸ்கூலுக்கு நேரத்துக்குப் போகணும்னு உனக்கு அம்மா உதவி பண்றேன்’னு சொல்லி யூனிஃபார்ம் எடுத்துவைப்பது, பென்சில் பாக்ஸ், புத்தகங்களை எடுத்துவைப்பது போன்ற வேலை களைக் குழந்தைகளின் கண்முன் செய்யுங்கள். 'ஸ்கூலுக்குப் போனா உன் ஃப்ரெண்டைப் பார்க் கலாம். அவனுக்கு இந்த சாக்லேட்டைக் கொடு. நீ போய்ட்டு வந்த சம்மர் ட்ரிப் பத்தி அவன்கிட்ட சொல்லு, அங்கே நாம் எடுத்த போட்டோக்களை அவன்கிட்ட காமி. ரொம்ப நாள் கழிச்சு உன் மிஸ் உன்னைப் பார்க்க ஆர்வமா இருப்பாங்க. அவங்ககிட்ட உன் போட்டோ இருக்கிற இந்த கீ செயினைக் காமி’ என்றெல்லாம் பல்வேறு காரணங்கள் சொல்லி உற்சாகப் படுத்துங்கள். அதேசமயம் பள்ளிக்குச் செல்ல அடம்பிடிக்கும் குழந்தைகளை, 'பார்க்/பீச்/சினிமாவுக்குப் போறோம்’ என்று  பொய் சொல்லி பள்ளிக்கு அழைத்துச் செல்லாதீர்கள். அப்படிப் பொய் சொல்லி பள்ளியில் விட்டுவந்தால், குழந்தைக்குப் பள்ளி மீதும் எரிச்சல் உண்டாகும். 'நம்மை ஏமாத்திட்டாங்களே’ என்று உங்கள் மீதும் வெறுப்பு உண்டாகும்.

மீண்டும் பள்ளிக்குச் செல்லலாம்!

பள்ளிவிட்டு வந்ததும் அன்றைய தினம் பள்ளி யில் நடந்த நிகழ்வுகளை அவர்களைச் சொல்லச் சொல்லிக் கேளுங்கள். 'என்ன ரைம்ஸ் சொல்லிக்கொடுத்தாங்க?’, 'உன் லஞ்ச் பத்தி ஃப்ரெண்ட்ஸ்லாம் என்ன சொன்னாங்க?’, 'நீ ஹோம்வொர்க் நல்லா பண்ணியிருக்கனு மிஸ் 'வெரிகுட்’ சொன்னாங்களா?’ என்றெல்லாம் கேட்டு, அவர்கள் சொல்லும் பதில் களுக்கு ஏற்ப அவர்களைப் பாராட்டியோ, உற்சாகப் படுத்தியோ ரியாக்ஷன் கொடுங்கள். இதனால் உங்களிடம் தினமும் சபாஷ் பெற வேண்டிய விஷயங்களைப் பகிர்ந்துகொள்வதற்காகவே பள்ளிக் கும் ஆர்வமாகச் செல்வார்கள், வகுப்பிலும் ஆக்டிவ்வாக இருப்பார்கள்.

பொதுவாக, குழந்தைகளுக்கு எட்டு, பத்து வயது வரை விளையாட்டுத்தனம் அதிகம் இருக்கும். அந்த வயதில் வகுப்பில் தோழர்களுடன் நடக்கும் சண்டை காரணமாக, 'அவன் அடிச்சிட்டான், கிள்ளிட்டான், தள்ளிவிட்டான்’ என்று குழந்தைகள் வாசிக்கும் புகார்களுக்கு, 'இனி அவன் கூடப் பேசாத... நான் மிஸ்கிட்ட வந்து அவனைப் பத்தி சொல்றேன்’ என்று அதீதமாக ரியாக்ட் செய்யாதீர்கள். இதனால், அவர்களுக்குள் ஒரு விரோதத்தன்மை வளரும். நீங்கள் அந்தச் சண்டையைக் கண்டு கொள்ளாமல் இருந்தாலே, நாளடைவில் அந்தக் குழந்தைகள் மீண்டும் நட்பாகிவிடுவார்கள்.

'மறுபடியும் எப்ப லீவு விடுவாங்க?’ என்று குழந்தைகள் கேட்காத அளவுக்கு அவர்கள் பள்ளிக்குச் செல்வதை இனிமையாக்குவது பெற்றோரின் பொறுப்பு!''