Published:Updated:

துருக்கிய வசந்தம்!

பாரதி தம்பி

துருக்கிய வசந்தம்!

துருக்கியின் அழகிய இஸ்தான்புல் நகரம் போராட்டக் களமாகக் காட்சியளிக்கிறது. ஒவ்வொரு நாளும் தன்னெழுச்சியான மக்கள் திரள், ஆளும் அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்திவருகிறது. 'பிரதமர் எர்டோகன் பதவி விலக வேண்டும். அதுவரை போராடுவோம்’ என்று ஆர்ப்பரிக்கிறார்கள் போராட்டக்காரர்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எகிப்து, துனிஷியா, லிபியா, லெபனான் என மத்தியக் கிழக்கு நாடுகளை ஆட்டிப்படைத்த அரேபிய வசந்தத்தின் தொடர்ச்சிதான் இந்த துருக்கிய வசந்தம். ஆனால், அரேபிய வசந்தத்தைக் கொண்டாடிய மேற்கத்திய நாடுகள், துருக்கிய வசந்தத்தைக் கண்டுகொள்ளவும் இல்லை. சரியாகச் சொல்வதானால், அப்படி ஒன்று நிகழ்ந்துவிடக் கூடாது என்று நினைக்கிறார்கள்!

##~##

சில மாதங்களுக்கு முன்பு துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் உள்ள தக்சிம் சதுக்கத்தை அகற்றிவிட்டு, அங்கு வணிக வளாகம் அமைக்கும் திட்டத்தை துருக்கி அரசு செயல்படுத்தியது. இதற்காக சதுக்கத்தில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டன. இதை எதிர்த்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராடத் துவங்கினார்கள். அவர்கள் மீது போலீஸ் படைகள் கண்ணீர்ப் புகைகுண்டு வீசித் தாக்கின. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் வெவ்வேறு சக்திகள் போராட்டத்துடன் தங்களை இணைத்துக்கொண்டார்கள். ஐரோப்பாவில் பாதி, ஆசியாவில் மீதி என இருகூறாகப் பிரிந்துகிடக்கும் துருக்கியை பொஸ்போரூஸ் என்ற பிரமாண்ட பாலம்தான் இணைக்கிறது. போராட்டக்காரர்கள் இந்தப் பாலத்தின் ஒவ்வோர் அங்குலத்தையும் மனிதத் தலைகளால் நிரப்பினார்கள். மரங்களை வெட்டுவதற்கு எதிரான போராட்டமாகத் தொடங் கிய இது, மாபெரும் அரசு எதிர்ப்பு எழுச்சியாக மாறியது. இதற்கான சமூகக் காரணத்தை அறிந்துகொள்ள குர்து இன மக்களின் போராட்டத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும். துருக்கியில் துருக்கி மொழி பேசும் பெரும்பான்மை இனத்தைத் தவிர, ஆர்மேனியர்கள், குர்தியர்கள், அரேபியர்கள் ஆகிய இனத்தவரும் வாழ்ந்துவருகின்றனர். பெரும்பான்மை மதம் இஸ்லாம். குர்தியர்கள் முழுக்க முழுக்க மலைப் பகுதிகளில் வசிக்கின்றனர்.

துருக்கிய வசந்தம்!

இந்தப் பின்னணியில், முதலாம் உலகப் போரின் முடிவில் கெமல் அட்டடூர்க் என்ற ராணுவ அதிகாரி துருக்கியில் ஆட்சியைக் கைப்பற்றுகிறார். மத அடிப்படைவாதத்தை அடியோடு ஒழித்துக்கட்டிய அவர், கல்வியில் பெரும் சீர்திருத்தத்தைக் கொண்டுவருகிறார். இப்படி முற்போக்கு முகம் காட்டிக்கொண்டே, ஆர்மேனியர் இனத்த வரை அழித்து ஒழிக்கிறார். பல லட்சம் ஆர்மேனி யர்கள் இனப்படுகொலை செய்யப்படுகின்றனர். இதே நிலைமை குர்தியர்களுக்கும் வருகிறது. குர்து மொழியை வீதியில் அல்ல... வீட்டில் பேசுவதற்கும் கூடத் தடை விதிக்கப்படுகிறது. எங்கும் எதிலும் துருக்கி மொழி மட்டுமே ஆக்கிரமித்திருந்தது.

இந்த நிலைமையை எதிர்த்துப் போராடும் சமூகச் சூழல் அன்றைய குர்து இன மக்களுக்கு இல்லை. பொருளாதாரப் பலமும், நவீன உலகின் வசதிகளும், வாய்ப்புகளும் இல்லாத மலைப் பிரதேசத்தில் வாழும் அவர்களுக்கு அதுவரை அரசியல் தலைமையேற்க எவரும் இல்லை. அந்த நிலையில்தான் 1970-களின் இறுதியில் அப்துல்லா ஒச்சலான் என்ற இளைஞர், குர்து இளைஞர்களை ஒருங்கிணைத்து 'குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி’ (பி.கே.கே) என்ற அமைப்பைத் தொடங்குகிறார். ஆயுதப் போராட்டம் மூலம் குர்திஸ்தான் என்ற தனிநாடு அடைவதே இவர்களின் லட்சியம். அன்றைய உலகச் சூழலில் பி.கே.கே-வை ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் ஆதரித்தன. இதனால் ஒச்சலான், குர்து இன மக்களின் மாபெரும் தலைவராக உருவெடுக்கிறார். ஏராளமான குர்து இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர். மறுபக்கம், அப்பாவி குர்து இன மக்களைத் துருக்கியின் ராணுவம் கொன்று குவித்தது. சாதாரணத் துருக்கி இளைஞர்களின் மனதில்கூட குர்தியர்கள் என்றாலே தீவிரவாதிகள் என்ற எண்ணம் விதைக்கப்பட்டது. குர்தியர்களை மலைவாழ் துருக்கியர்கள் எனப் பாடப் புத்தகத்தில் சொல்லித்தந்தார்கள்.

இப்போதும் இந்தப் பகைமை தீர்ந்துவிடவில்லை. ஆனால், ஆளும் அரசுக்கு எதிரான துருக்கியர்களின் போராட்டங்களுடன் குர்தியர் களும் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர். இத்தனை காலமும் குர்தியர்களையும் துருக்கியர்களையும் எதிரிகளாகச் சித்திரித்துக் காலத்தை ஓட்டிய ஆளும் சக்திகளால் இந்த ஒற்றுமையைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. கடுமையான வறுமை, வேலைவாய்ப்பின்மை, பொருளாதாரத் தள்ளாட்டம் எனப் போராடுவதற்கு துருக்கியர்களுக்கும் பல காரணங்கள் இருக்கின்றன. பிரதமர் எர்டோகன், மத அடிப்படைவாதக் கருத்துகளை விதைத்துவருவதை மக்கள் விரும்பவில்லை. அத்துடன் அண்டை நாடான சிரியாவின் உள்நாட்டுப் போரில் துருக்கி தலையிடுவதையும் மக்கள் எதிர்க்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஒரு புள்ளியில் ஒன்றிணைவதற்கு தக்சிம் சதுக்கத்தில் வெட்டப்பட்ட மரங்கள் உதவியிருக்கின்றன. எகிப்துப் புரட்சி நிகழ்ந்தது தஹ்ரீர் சதுக்கத்தில் என்றால், இப்போது துருக்கிப் புரட்சி நிகழ்வது தக்சிம் சதுக்கத்தில்!

சென்னையிலும்தான் அண்ணா சதுக்கம் இருக்கிறது. பொரி கடலையும், பானி பூரியும் சாப்பிடுவதைத் தவிர, வேறு எதுவும் அங்கு நடப்பதாகத் தெரியவில்லை!