ஒரு இன்னோவாவுக்காக இப்படியா?

''நமது பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் தனிச் சிறப்புகளைப் பட்டியல் இடுங்களேன்..?''
''ஒன்றே ஒன்றைச் சொல்கிறேன். அதற்கே அசந்துபோவீர்கள். 2007 தேர்தலின்போது அவர் தாக்கல்செய்த வேட்புமனுவில், அவருடைய வயது 74 என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. (பிறந்த தேதி, 1932 செப்டம்பர் 26) இப்போது அவர் தாக்கல்செய்த வேட்புமனுவில் அவருடைய வயது 82 என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. பின்னர், கூடுதலாக ஒரு அஃபிடவிட் தாக்கல் செய்து தவறாகக் குறிப்பிடப்பட்ட வயதைத் திருத்தியிருக்கிறார்கள். நாட்டின் பிரதமர் தாக்கல் செய்யும் மனு எந்த லட்சணத்தில் தாக்கல் செய்யப்படுகிறது என்று பார்த்தீர் களா? அதுதான் மன்மோகன் சிங்!''
##~## |
- கே.சரஸ்வதி, ஈரோடு.
''சமீபத்திய அதிர்ச்சி..?''
''எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா, வை.கோ. என்று யாருமே அண்ணாவை இகழ்ந்து பேசியதாக எனக்கு நினைவில் இல்லை. ஆனால், நாஞ்சில் சம்பத் 'ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி என அண்ணா அறிவித்துத் தோற்ற வரலாற்றை மாற்றி எழுதுவதுபோல, 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கி, ஜெயலலிதா சாதனை படைத்துவருகிறார்’ என்று பேசியிருக்கிறார். ஒரு இன்னோவா காருக்காக இப்படியா பேசுவது?''
- ஜெ.கண்ணன், சென்னை-101.

'' 'சிறைக்குச் செல்லவும் தயார்’ என வீராவேசம் பேசும் சில தலைவர்கள், சிறைக்குச் சென்றவுடனே ஜாமின் மனுத்தாக்கல் செய்கிறார்களே?''
''என்ன செய்வது... 'சித்திரையில் நிலவுச் சோறு.’ ஆனால், சிறையில் அளவுச் சோறு அல்லவா?''
- பாலா சரவணன், சென்னை.
''பந்தபாசம் என்பது மனித இனத்துக்கே சொந்தமானதா?''
''அப்படியும் சொல்ல முடியாது. அது அனைத்து ஜீவராசிகளுக்கும் சொந்தமானது. கடந்த வாரம் பெண் யானை ஒன்று குண்டேரி பள்ளம் அணையில் தண்ணீர் குடித்துவிட்டுச் சென்றபோது சுருண்டுவிழுந்து இறந்தது. மருத்துவர்கள் வரத் தாமதமானதால் பிரேதப் பரிசோதனைக்காக இலை தழைகளைக் கொண்டு மூடிவிட்டு, அருகில் உள்ள காவல் கோபுரத்தில் இருந்து கண்காணித்துக் கொண்டிருந்தனர் வனத் துறையினர். இரவு கூட்டம் கூட்டமாக குண்டேரி பள்ளம் பகுதிக்கு யானைகள் வந்து, இறந்துகிடந்த யானை மீது இருந்த இலை தழைகளை அகற்றிவிட்டு, அதைத் தட்டியெழுப்ப முயற்சித்தன. கண்ணீர்விட்டன. இந்தப் பாசப் போராட்டம் விடிய விடிய நடந்தது. விடிந்ததும் அருகில் புதர்களில் மறைந்து நின்று பிரேதப் பரிசோதனை நடைமுறைகள், பொது மக்கள் அஞ்சலி, அடக்கம் வரையில் அனைத்து சம்பவங்களும் அரங்கேறும் வரை பார்த்துக் கண்ணீர்விட்டன! இதை எப்படி எடுத்துக் கொள்வது?''
- சுப்பு வேதையா சித்திரவேலு, கருப்பம்புலம்.

''ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால், வீரர்களுக்கு ஆயுள் காலத் தடை விதிக்கப்படும் என்று கூறுவதுபற்றி?''
''சரி, தண்டிக்க வேண்டியது நியாயம்தான். அதேபோல நாட்டையே சுரண்டும் ஊழல்வாதிகள் அரசியலில் ஈடுபட ஆயுள் காலத் தடை விதித்தால் என்ன? ஏன்... ஊழல்வாதி களின் மீது மட்டும் கடும் நடவடிக்கைகள் பாய்வது இல்லை?''
- பி.பாலாஜி கணேஷ், சிதம்பரம்.
'' 'ஒரு இந்தியனைக்கூட இரவில் பசியோடு தூங்கவிடக் கூடாது!’ என்பதுதான் காங்கிரஸின் லட்சியம் என்கிறாரே ராகுல்?''
''உ.பி-யில் குடிசை குடிசையா நுழைஞ்சு, ஏழைகள் வைத்திருந்த ஒரு வாய்க்கஞ்சியைக்கூட அவர் குடிச்சிட்டு, எத்தனை ஏழைகளைப் பட்டினி போட்டார். திரும்ப அதைச் செய்யாமல் இருந்தால் போதும்!''
- எஸ்.விவேக், அம்பத்தூர்.
எல்லோரும் எழுதலாம்! கேள்வியும் பதிலும் உங்களுடையதே. தபாலில் அனுப்பலாம் அல்லது செல்போனில் QA (space) விட்டு உங்கள் கேள்வி-பதிலை 562636 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். செய்யுங்கள்!