விகடன் வரவேற்பறை
இதற்கு முன்பும், இதற்குப் பிறகும் - மனுஷ்ய புத்திரன்
வெளியீடு: உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-18.
பக்கம்: 320 விலை:

190

ஒரு பிரத்யேக அனுபவத்தை உருவாக்குபவை மனுஷ்யபுத்திரனின் கவிதைகள். 'பண்டிகைக்கு முதல் நாள்/ குழந்தைக்குப் புத்தாடை வாங்க/ பணம் கேட்பவன்/ குழந்தைக்கு உடல் நலமில்லை/ எனப் பொய் சொல்கிறான்/ கடவுள் அவனை/ கொஞ்சம் மன்னிக்கிறார்/ அவனும் கடவுளை/ கொஞ்சம் மன்னிக்கிறான்’ எனச் சில சொற்களில் வாழ்க்கையைக் குறுக்குவெட்டாகக் கடந்து செல்கிறார். குறுங்கவிதை முதல் நெடுங்கவிதைகள் வரை எல்லாவற்றிலுமே பாடுபொருளின் தன்மை மென்மையாகவோ, வன்மையாகவோ... எப்படி இருப்பினும் மனுஷ்யபுத்திரனின் வார்த்தைகள் மட்டும் ஆழ்ந்த அமைதியுடன் ஒரு துறவியைப் போலவே காட்சியளிக்கின்றன!
செய்திகளை ஜாலியாக வாசிப்பது... http://www.mevio.com/

நாட்டு நடப்புகளை வீடியோ மூலம் ஜாலியாக விளக்கும் வெப்சைட். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த செய்தி சேனல்களில் வந்த பொழுதுபோக்கு, உடல் நலம், அரசியல், விளையாட்டு, பொருளாதாரம் எனப் பல்துறைச் செய்திகளைத் தொகுத்துத் தருகிறார்கள். அனைத்தும் மூன்று நிமிட வீடியோக்கள்தான். இவை போக, ஜாலி கேலி வீடியோ க்ளிப்பிங்குகளும் பார்வைக்கு வைக்கிறார்கள். ரிலாக்ஸ் சமயத்தில் உபயோகமாக உலகத்தை மேய இங்கு க்ளிக்கலாம்!
வட கிழக்கின் குரல்! www.northeastspeaksout.blogspot.com

மிசோரம், அஸ்ஸாம், மேகாலயா, மணிப்பூர், நாகலாந்து, திரிபுரா, அருணாசலப்பிரதேசம் ஆகிய ஏழு பகுதிகளை உள்ளடக்கிய வட கிழக்கு மாகாணங்களில் ராணுவத்தின் அத்துமீறல் குறித்து பதியும் வலைப்பூ. 'ஏழு சகோதரிகள்’ என்று அழைக்கப்படும் இந்த மாகாணங்களில், சிவிலியன்களின் வாழ்க்கை இந்திய ராணுவங்களால் சிதைபட்டுக் கிழியும் அவலங்களைப் பதிவு செய்கின்றன ஒவ்வோர் எழுத்தும். மணிப்பூரில் அற வழியில் போராடும் ஐரோம் ஷர்மிளா ஷானுவின் அறிக்கை, 1958-ல் இருந்து ராணுவம் படிப்படியாக மக்களின் இயல்பு வாழ்க்கையை ஆக்கிரமித்த வரலாற்று நிகழ்வுகள்!
தாய் இயக்கம்: அகர்செங்குட்டுவன்

நியாயமான கூலி கேட்டதால், கொல்லப்படும் கூலித் தொழிலாளியின் மனைவி, தன் மகனை கலெக்டருக்குப் படிக்கவைக்க ஆசைப்படுகிறார். வறுமை, உறவுகளின் பாராமுகம் தாண்டிப் படிக்கும் மகனால், தேவைப்படும் மதிப்பெண்கள் எடுக்க முடியவில்லை. கலெக்டர் கனவு தகர்ந்துபோக, வாத்தியார் ஆகிறார். இரண்டாம் தலைமுறையில் வாத்தியார் மகன் மாவட்டத்தில் முதல் மதிப்பெண் வாங்க, அம்மாவிடம் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ள தேடிச் செல்கிறார் வாத்தியார். அம்மா என்ன ஆனார் என்பது இந்தக் குறும்படத்தின் க்ளைமாக்ஸ். நேர்த்தியான ஒளிப்பதிவு, இயல்பான நடிப்பு இரண்டுமே இந்தத் 'தாயின்’ வசீகரம்!
தேநீர் விடுதி இசை: எஸ்.எஸ்.குமரன்
வெளியீடு: திங்க் மியூஸிக் விலை:

99

'மெல்லெனச் சிரிப்பாளோ’ பாடலில் வார்த்தைகளுக்கு இணையாக ஓடி வரும் சாக்ஸ போன் இசை வசீகரம். கேட்கக் கேட்கப் பிடிக்கும் வகைப் பாடல். துள்ளல் தாளமும் குதூகலக் குரல்களும்தான் 'என்னவோ பண்ணுது’ பாடல் ஸ்பெஷல். இசை, வார்த்தைகள், குரல் என அனைத்திலும் மென் சோகம் தொனிக்கும் காதல் மெலடி 'ஒரு மாலைப் பொழுதில்’. புல்லாங்குழலில் இருந்து இசையாகக் காற்று வெளியேறுவதைப்போல மனம் வருடுகிறது சோனா மொஹாபட்ராவின் குரல். காதல் உணர்வுகளை மட்டுமே டெடிகேட் செய்திருக்கும் விடுதி!