சினிமா
Published:Updated:

பச்சைப் பலன் அறுவடை ஆகுமா?

செ.திலீபன், வ.விஷ்ணு

##~##

ச்சைக் கட்டடம், பச்சை போர்டு, பச்சை பேனர்களுடன் வரவேற்கிறது பச்சைக் காய் கறிகள் விற்கும் தமிழக அரசின் 'பண்ணைப் பசுமை நுகர்வோர் கடை’!

அம்மா உணவகத்துக்குக் கிடைத்த அதே ராஜ கம்பீர வரவேற்பு இந்தக் கடைகளுக்கும் கிடைத்துள்ளது. இந்த அங்காடிகள் தொடங்கிய முதல் நாளன்று காலை 7 மணியிலிருந்தே வாடிக்கையாளர்கள் குவிய ஆரம்பித்துவிட்டார்கள். அதிலும் தேனாம்பேட்டை காமதேனுவில் பென்ஸ் காரில் வந்திறங்கி, காய்கறி வாங்கிச் சென்றார் ஒருவர்.  தமிழக அரசின் காமதேனு அங்காடிகளில் கிடைத்த இடங்களில் காய்கறிகள் பரப்பி வைக்கப்பட, வருபவர்கள் ஒரு கூடையைக் கையில் எடுத்துக்கொண்டு விலைப் பட்டியலை ஒரு நோட்டம் விட்டுக்கொண்டு, 'நீ முந்தி... நான் முந்தி’ என்று காய்கறகளை அள்ளிச் சென்றார்கள்.

பன்னிரண்டு வகையான காய்கறிகள் விற்பனைக்கு இருந்தன. அனைத்துக் காய்கறிகளும் அடங்கிய '100 ரூபாய் காம்போ’ பையும் உண்டு. தன் குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு காய்கறிகளைப் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுத்த இல்லத்தரசி ஒருவர், 'வெங்காயம், தக்காளி மாதிரியான காய்கறிலாம் சீப்பா இருக்கு. ஆனா, சில காய்கறிகள் மாம்பலம் காய்கறி மார்க்கெட்ல இன்னும் சீப்பா இருக்கும்!'' என்று பாராட்டவும் செய்யாமல், திட்டவும் இல்லாமல் ஒரு மாதிரி கருத்து சொன்னார்.

பச்சைப் பலன் அறுவடை ஆகுமா?

காய்கறிகளை வாங்க நாள் முழுக்க காமதேனு  அங்காடிகளில் மக்கள் வரத்து இருந்துகொண்டே இருக்க, பல அங்காடிகளின் அருகிலேயே திடீர் கேன்டீன்கள் முளைத்தன. ஆக, பசுமைப் பண்ணை நுகர்வோர் கடைகளுக்கு அருகிலேயே 'அம்மா மெஸ்’ஸுக்கும் பிசினஸ் இருக்கிறது ஆபீஸர்ஸ்! முதல் நாளன்று காய்கறிகள் சீக்கிரம் தீர்ந்துவிட்ட குறையை இரண்டாம் நாள் போக்கிவிட்டனர் அதிகாரிகள். வெங்காயம், தக்காளிகளை டெம்போவிலிருந்து லோடு லோடாக மதியம் வரை இறக்கிக்கொண்டிருந்தார்கள்.  

பச்சைப் பலன் அறுவடை ஆகுமா?

பண்ணைப் பசுமை நுகர்வோர் கடையின் முக்கியமான அம்சம், வாங்கிய காய்கறிகளை எலெக்ட்ரானிக் தராசில் எடைபோட்டு, முறையாக ரசீது தருகிறார்கள். ஆனால், கட்டணம் செலுத்துமிடத்தில் அவ்வளவு கூட்டம் அம்முகிறது!

முதல் வாரத்தில் அனைத்துத் தரப்பு மக்களிடமும் 'ஓஹோ’ வரவேற்பு பெற்றிருக்கிறது பசுமைப் பண்ணை நுகர்வோர் கடைகள். அடுத்தடுத்த மாதங்களும் இதே ஜரூரைத் தக்கவைத்தால், 'பச்சை’க் காய்கறிகள் பலனை நிச்சயம் அறுவடை செய்வார் ஜெயலலிதா!