சினிமா
Published:Updated:

சாம்பியன்களின் சாம்பியன்!

கி.கார்த்திகேயன்

##~##

ஸ்திரேலியாவுக்கு எதிரான 'டெஸ்ட் போட்டி’த் தொடரை 4-0 என்று கைப்பற்றிய இந்திய அணி, ஐ.சி.சி. சாம்பியன் கோப்பை 'ஒரு நாள் போட்டி’த் தொடரில் ஒரு போட்டியைக்கூட இழக்காமல், '20-20’ஆக நடந்த அந்த ஃபைனலில் சாம்பியன் பட்டம் தட்டியிருக்கிறது. சந்தேகமே வேண்டாம்... டெஸ்ட், ஒரு நாள், 20-20... இந்த மூன்று வடிவங்களிலும் இப்போதைக்கு சாம்பியன் இந்தியாதான்!

ஆர்ப்பாட்டம் இல்லை. அதிர்ச்சி வைத்தியங்களும் இல்லை. ஜஸ்ட் லைக் தட் க்யூட்டாக 2013 சாம்பியன் கோப்பையை வென்றிருக்கும்   இந்திய அணியின் வெற்றிப் பயணம் மிக சுவாரஸ்யமானது. ஒரு விளையாட்டு என்பதையும் தாண்டி, அதில் நாம் கற்றுக்கொள்ளச் சில பாடங்கள் இருக்கின்றன.

சாம்பியன்களின் சாம்பியன்!

  'சீசண்டு சீனியர்கள்’ இல்லாத, அனுபவமற்ற ஜூனியர்கள் மட்டுமே நிரம்பிய அணி என்பதால், தொடருக்குள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் கலந்துகொண்டது இந்திய அணி. ஆனால், 'வார்ம்அப்’ அளிக்கும் பயிற்சிப் போட்டிகளில் இலங்கை நிர்ணயித்த 334 ரன் இலக்கைத் துரத்திப் பிடித்ததும், 308 ரன் இலக்கை நிர்ணயித்து ஆஸ்திரேலியாவை 65 ரன்களுக்குள் சுருட்டியதும்... இந்திய அணி பெற்ற அசுரத்தனமான வெற்றி. மற்ற அணிகள் பயிற்சிப் போட்டிகளைச் சும்மா 'வார்ம்அப்’தானே என்று விளையாட, இந்தியா அந்தப் போட்டிகளை சீரியஸாகவே எதிர்கொண்டது. பயிற்சிப் போட்டிகளில் 'உள்ளும் வெளியிலுமாக’ 15 பேர் வரை விளையாடிக்கொள்ளலாம் என்ற விதியை இந்தியா அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை. இலங்கைக்கு எதிரான இமாலய இலக்கைத் துரத்தி எட்டிய பின் பேசிய டோனி, 'இங்கு விளையாடும் 11 பேர்தான் முக்கியமான போட்டிகளிலும் விளையாடவிருக்கிறார்கள். அதனால், அந்த விதியை நாங்கள் பயன்படுத்திக்கொள்ளவில்லை. பயிற்சிப் போட்டியென்றாலும், போட்டி போட்டிதானே!’ என்றார். அந்த வெற்றிகளுக்குப் பிறகு, பிற அணிகள் களம் இறங்குவதற்கு முன்னரே இந்தியாவை நினைத்து மிரளத் தொடங்கிவிட்டன. எந்தச் செயலின் தொடக்கமும் சிறப்பாக இருந்தால், பாதி வேலை முடிந்துவிட்டதாகக் கணக்கில்கொள்ளலாம் என்பார்கள். அப்படிப் பயிற்சி ஆட்டங்களிலேயே 'பாதி வெற்றி’யை எட்டிவிட்டது இந்திய அணி!

சாம்பியன்களின் சாம்பியன்!
சாம்பியன்களின் சாம்பியன்!

 'அனுபவமற்றவர்கள்’ என்று விமர்சிக்கப்பட்டாலும் ஷிகர் தவான், ஜடேஜா போன்றவர்களுக்கு எப்படி வியூகம் வகுப்பது, ஜடேஜா பந்து வீச்சை எப்படி எதிர்கொள்வது என மற்ற அணியினர் குழம்பிவிட்டார்கள். இது இந்திய அணிக்குச் சாதகமாக அமைந்த திருப்புமுனை. முக்கியமான தருணங்களில் சில ரன்களை விட்டுக்கொடுத்தாலும் விக்கெட் எடுப்பது இந்தியப் பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவின் வழக்கம். இறுதிப் போட்டியில் முந்தைய மூன்று ஓவர்களில் இஷாந்த் 27 ரன்களை வழங்கியிருந்தாலும், 18-வது ஓவரை அவரையே வீசச் செய்தார் டோனி. அனைவரும் எதிர்பார்த்ததுபோலவே, சிக்ஸர், இரண்டு வொய்டுகள் என்று முதல் மூன்று பந்துகளில் ரன்களை வாரி வழங்கினார் இஷாந்த். கிட்டத்தட்ட போட்டி கைவிட்டுப் போய்விட்டது என்று நினைத்த சமயம், அடுத்தடுத்து இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்களைப் பறித்தார் இஷாந்த். அதுவும் நன்றாக செட்டில் ஆகி பந்துகளை விளாசிக்கொண்டிருந்த மோர்கன், போபரா ஆகிய இருவரின் விக்கெட்டுகள். அந்த இருவரும் கடைசி ஓவர் வரை விளையாடியிருந்தால், வெற்றி நிச்சயம் இங்கிலாந்து வசமாகியிருக்கும். 'இஷாந்த் பந்தைச் சுலபமாக அடிக்கலாம் என்று இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் நினைப்பார்கள். சுலபமாக அடிக்கவும் செய்வார்கள். ஆனால், அவர் பந்தில்தான் அவுட்டும் ஆவார்கள் என்று நினைத்தேன். ரன்கள் போனாலும் அலட்டிக்கொள்ளாமல் விக்கெட்டுகளைப் பறிக்கும் குணம் இஷாந்திடம் உண்டு!’ என்றார் டோனி. துல்லியமாகக் கணக்கிட்டால் நமது பலவீனங்களையே பலமாக மாற்றிக்கொள்ளலாம் என்பதற்கு, இவையெல்லாம் உதாரணங்கள்!

சாம்பியன்களின் சாம்பியன்!
சாம்பியன்களின் சாம்பியன்!

 இதற்கு முன்னரெல்லாம் பெரிய போட்டித் தொடரில் இந்திய அணி கால் இறுதியைத் தாண்டியிருக்காது. ஆனால், போட்டித் தொடரில் அதிக ரன்களைக் குவித்தவராக சச்சினோ, கங்குலியோ பட்டியலில் முதல் இடம் பிடிப்பார்கள். இல்லாவிட்டால், அப்படியான தனி நபர் சாதனைகள் எதுவும் இல்லாமல், ஒவ்வொரு போட்டியிலும் தட்டிமுட்டி, குறைந்தபட்ச வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இடம் பிடித்து, அடுத்த சுற்றுக்கு முன்னேறி, கடைசிக்கட்ட நெருக்கடியில் ஜெயிக்கும் இந்திய அணி. ஆனால், இந்தத் தொடரில் அப்படியான எந்த இக்கட்டையும் இந்தியா சந்திக்கவில்லை. விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி, புள்ளிப் பட்டியலில் முதல் இடம், தொடரில் அதிக ரன்கள் குவித்தவர் இந்தியாவின் ஷிகர் தவான், அதிக விக்கெட் வீழ்த்தியவர் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா. க்ளீன் ஸ்வீப்!

'ஒவ்வொரு போட்டியிலும் 50 ரன்களுக்குக் குறையாமல் எடுக்க வேண்டும் என்பது எனக்கு அளிக்கப்பட்ட இலக்கு. இதே போல ஒவ்வொருவருக்கும் அவரவர் தகுதிக்கேற்ப இலக்கு நிர்ணயித்தார்கள். அவரவர் வேலையை அவரவர் செய்தோம். கோப்பை நம் வசமானது!’ என்கிறார் ஷிகர் தவான். திறமையைக் கையாளுதல் என்பார் கள் இதை, மேலாண்மைப் பாடங்களில்!

சாம்பியன்களின் சாம்பியன்!

  கேப்டன் டோனி தன் அணியினரை எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்கவில்லை. வெற்றிக்குப் பின்னர், 'மேட்ச் ஃபிக்ஸிங், சூதாட்டப் புகார் களங்கங்களைத் துடைக்கத்தான் இப்படி வெறி பிடித்தாற்போல விளையாடினீர்களா?’ என்ற கேள்விக்கு, 'இல்லவே இல்லை. இங்கே கிரிக்கெட் விளையாடத்தான் என் பாய்ஸை நான் அழைத்துவந்தேன். 'ரேங்க்கிங்கில் மட்டும் நம்பர் ஒன்னாக இருந்தால் பத்தாது. களத்திலும் அப்படி இருக்க வேண்டும். உங்கள் திறமைகளை நீங்கள்தான் நிரூபிக்க வேண்டும்’ என்று மட்டும் அவர்களிடம் சொன்னேன்!’ என்றார் டோனி. தன் அணியினரை சில்லறைக் காரணங்களுக்காக விட்டுக்கொடுக்காத அதே சமயம், 'இங்கு அடிக்கடி மழை பெய்யும். நாம் மோசமாக விளையாடி மழை வந்து நம்மைக் காப்பாற்றாதா என்ற நினைப்போடு யாரும் களம் இறங் காதீர்கள். ஆட்டத்தின் எந்தக் கட்டத்திலும், எந்த ஓவரிலும் நம் கைதான் ஓங்கியிருக்க வேண்டும்’ என்று அவர்களிடம் வலியுறுத்தவும் தவறவில்லை. புறக் காரணங்களை மனதில்கொள்ளாமல், சாக்கு சொல்லாமல் நம் கடமையைக் கச்சிதமாகச் செய்ய வேண்டும் என்பது இங்கு 'நோட் தி பாயின்ட்’!

சாம்பியன்களின் சாம்பியன்!
சாம்பியன்களின் சாம்பியன்!

 நம்புவீர்களா...? 31 வயதே ஆன டோனிதான் இப்போதைய இந்திய அணியில் மிக சீனியர் ப்ளேயர். முழுக்கவே புதியவர்களின் கைகளில் அணியைக் கொடுத்துவிட்டு, சிக்கலான தருணங் களில் வழிநடத்தும் பொறுப்பை மட்டும் மேற் கொள்கிறார் டோனி. ஆனால், பேட்டிங்கோ, விக்கெட்-கீப்பிங்கோ... அந்தப் புதியவர்களுக்குச் சவால் கொடுக்கும் வகையில் பெர்ஃபார்ம் செய்வதும் டோனி ஸ்பெஷல். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் 55 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தத்தளித்த அணியை, 77 பந்துகளில் 91 ரன்கள் குவித்து 308 ரன்களுக்குக் கரை சேர்த்தபோதும் சரி... தொடரில் அதிகபட்ச ஆட்டமிழப்புகளுக்குக் காரணமாக (9... அதில் 4 ஸ்டம்ப்பிங்!) இருந்த விக்கெட் கீப்பராகப் பட்டியலில் முதல் இடம் பிடித்தபோதும் சரி... தனிநபராகவும் டோனி அட்டகாசப்படுத்தினார்.    

இது போக, தொடர் முழுக்கவே போட்டிகளின்போது இக்கட்டான சமயங்களில் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளானார் டோனி. அந்தப் பல மணி நேர உளைச்சல்களுக்குப் பரிசாகக் கிடைத்த சாம்பியன் கோப்பை டோனியின் கைகளில் எவ்வளவு நேரம் இருந்தது தெரியுமா? 17 நொடிகள்! பரிசளிப்பு மேடையில் தன்னிடம் வழங்கப்பட்ட கோப்பையை உடனடியாக அணியினரிடம் ஒப்படைத்துவிட்டு, ஓரமாக ஒதுங்கி நின்றுகொண்டார் எம்.எஸ்.டி.

அதுதான் ஒரு தலைவனுக்கு அழகு!