ஸ்க்ரீன்ஸ்
##~## |
தனுஷ், முதன்முதலாக இந்தியில் நடித்து வெளியாகி இருக்கும் 'ராஞ்சனா'... அடுத்ததாக 'அம்பிகாபதி' என்ற பெயரில் தமிழில் 'டப்' செய்து வெளியிடப்பட்டுள்ளது. இயக்கம்: ஆனந்த் எல் ராய், இசை: ஏ.ஆர்.ரஹ்மான், பாடல்கள்: வைரமுத்து, கதை, திரைக்கதை: ஹிமான்ஷ§ ஷர்மா, வசனம்: ஜான் மகேந்திரன்.
காசியிலிருந்து தொடங்குகிறது கதை. அங்கே புரோகிதர் மகனாக லந்துவிட்டபடி வலம் வரும் தனுஷ் (குந்தன் சங்கர்), சிறுவயதிலேயே இஸ்லாமிய பெண் சோனம் கபூர் (ஜோயா) மீது ஈர்ப்பாகிறார். ஒருகட்டத்தில் அது காதல் என்று உணர்ந்து சோனத்திடம் சொல்லும்போது... 'இளவயது ஈர்ப்பு' என்றபடி கடக்கிறார். இதற்கிடையே 'மேற் படிப்பு'க்காக டெல்லி செல்கிறார் சோனம். இடைப்பட்ட எட்டு வருடங்களில், தன்னை உயிருக்கு உயிராகக் காதலிக்கும் இன்னொரு பெண்ணை ஏற்காமல், சோனத்துக்காகவே காத்திருக்கிறார் தனுஷ். ஆனால், சோனம்... தன்னுடன் கல்லூரியில் படிக்கும் ஒருவரைக் காதலிக்கிறார். அங்கேயும் மதப்பிரச்னை வெடிக்க... அந்தக் காதலன் இறக்கிறார். கடைசியில்... தனுஷ், சோனம் ஜோடி சேர்ந்தார்களா... என்பதுதான் க்ளைமேக்ஸ்!

தனுஷ், 'கோலிவுட்'டிலிருந்து 'பாலிவுட்'டுக்கு பறந்திருக்கும் நிலையில், எதிர்பார்ப்புடன் தியேட்டருக்குள் நுழைந்தார்கள் கல்லூரி மாணவிகளான அம்மு, ரமாதேவி, பிரதீமா மற்றும் கௌதமி. படம் முடிந்த கையோடு, நால்வரும் கடகடவென எழுதித் தந்த விமர்சனம் இதோ...
கௌதமி: யூத்ஸ் மத்தியில, இன்னிக்கு தனுஷ் மேல பெரிய கிரேஸ். இந்தப் படத்தின் மூலம், அதை அப்படியே தக்க வெச்சுருக்காருனுதான் சொல்லணும். காரணம்... யூத்ஸுக்கு புடிச்ச காதல் கதையாச்சே! கலர்ஃபுல்லா இருக்கணும்கறதுக்காகவே... காசியை மையமா வெச்சு எடுத்திருப்பாங்க போல. அடிக்கடி ஃபங்க்ஷன், கலர்ஃபுல் பொடிகள், கலர்ஃபுல் பூக்கள்... இப்படி முதல் பாதி முழுக்க வண்ணமயமா இருக்கு. ஆனா, ரெண்டாவது பாதி படு வெறிச்! மருந்துக்குக்கூட 'பளிச்' இல்லை.

பஞ்ச்: சோனம், 'ஓ’வென அழுகிறார்... ஓவராக சிரிக்கிறார். ஆனால், நடிக்க மட்டும் மறந்துவிட்டார்.
பிரதீமா: ஏ.ஆர்.ரஹ்மான், தன் வேலையை மிகச்சரியாகச் செய்திருக்கிறார். வைரமுத்துவின் வரிகளும் கைகோக்க, 'பார்க்காதே..’, 'உன்னைத்தேடி ஒவ்வொரு நாளும்...’, 'கனாவே... கனாவே...’ பாடல்கள் சூப்பர்! காதலுக்காக தனுஷ் எட்டு வருடம் காத்திருப்பாராம்... சோனம் மட்டும் டெல்லி போனவுடன் இவரை மறந்து, வேறு ஒருவரைக் காதலிப்பாராம்.. பெண்களை, ஏமாற்றுப் பேர்வழிகள் போல காட்டியிருப்பதை ஏற்க முடியவில்லை!
பஞ்ச்: ஹலோ டைரக்டர்ஸ்... சின்ன வயது காதலை வைத்துக் கொண்டு, இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் பூ சுற்றுவீர்களோ?
அம்மு: எட்டு வருஷம் கழித்து ஊருக்கு வரும் சோனத்துக்கு, தனுஷை அப்படியா அடையாளம் தெரியாமல் போகும்? படத்தின் இரண்டாவது பாகம், 'கோ’ படத்தை நினைவுப் படுத்துகிறது. கல்லூரியில் நடக்கும் அரசியல் சார்ந்த பிரச்னைகளை, இன்னும் உணர்ச்சிப்பூர்வமாக காட்டியிருக்கலாம். 'ஏழரை சனி விட்டாலும்... இவ உன்னவிட மாட்டா போலிருக்கு'னு தனுஷோட நண்பன் முரளி பேசறது... சீப் டேஸ்ட் டயலாக்!
பஞ்ச்: அய்யா, ஏழரை சனி... இந்த சினிமாக்காரங்கள 'எழுபதரை சனி'யா துரத்துங்க!
ரமா தேவி: தனுஷின் படங்களில் பெரும்பாலும் ஒன்று இவர் இறந்துவிடுவார் அல்லது சைகோ போல சுற்றித் திரிவார். இந்த படத்திலும் 'நான் யாருக்காக வாழணும்' என்றே பேசித் திரிவது... செம போர்! டைரக்டர் சார்... எங்க தனுஷ், நல்லாவே டான்ஸ் பண்ணுவாரு... ஆனா, அநியாயத்துக்கும அழ வெச்சே படத்தை முடிச்சுட்டீங்களே! இந்தியில ஜெயிச்சுட்டோம்னு தமிழுக்கு கொண்டு வந்தீங்க சரி. ஆனா, அநியாயத்துக்கும் அடிக்கற இந்தி வாடையை மறந்துட்டீங்களே?
பஞ்ச்: கடுப்பேத்தறாங்க மை லார்ட்!

- வே.கிருஷ்ணவேணி, படம்: அபிநயா சங்கர்