Published:Updated:

அவள் சினிமாஸ் - சிங்கம் II

ஸ்க்ரீன்ஸ்

##~##

மூன்று ஆண்டுகளுக்கு முன் வெளியாகி, கலக்கல் வெற்றியைக் கைப்பற்றிய 'சிங்கம்’ படத்தின் க்ளைமாக்ஸ் சின்ன டிவிஸ்ட்டோடு முடியும். அதிலிருந்து தொடங்குகிறது   'சிங்கம் - 2’.

வெளியுலகுக்கு தன் போலீஸ் வேலையை ராஜினாமா செய்யும் 'துரைசிங்கம்' சூர்யா, தூத்துக்குடி பள்ளிக்கூடமொன்றில் 'என்.சி.சி மாஸ்டர்' பதவியில் இருந்தபடியே, ரகசிய போலீஸ் 007 வேலையைச் செய்கிறார். உள்ளூர் தாதாக்கள் இருவர் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டிருப்பதைக் கண்டுபிடிக்கும் சூர்யாவுக்கு, ஆப்பிரிக்காவின் பிரபல போதைப் பொருள் கடத்தல் மன்னன் டேனியும் இதில் கைகோத்திருப்பது தெரிந்து அதிர்கிறார். அதேசமயம், ஊருக்குள் திடீரென்று சாதி ரீதியிலான மோதல் வெடிக்க... சமயம் பார்த்து மீண்டும் காக்கி சட்டையை மாட்டிக் கொண்டு வேட்டையை ஆரம்பிக்கிறது சிங்கம். காதல், பாசம், ஆக்ஷன், காமெடி என விறுவிறுவென நகரும் படம்... 'சிங்கம்-3' வந்தாலும் வரும் என்றபடி வணக்கம் சொல்கிறது!

இந்த இதழ் 'அவள் சினிமாஸ்' பகுதிக்காக படத்தைப் பார்த்த சென்னை, கல்லூரி மாணவிகள் தந்த விமர்சனம் இதோ...

அவள் சினிமாஸ் - சிங்கம் II

ப்ரீத்தி ஸ்ரீநிவாசன்: பொதுவா, தமிழ்ல செகண்ட் பார்ட் படம் வந்து பெருசா ஜெயிச்சதா சரித்திரம் இல்ல. அந்த வகையில சிங்கம்-2, தெம்பா காலரை தூக்கி விட்டுக்கலாம். தன்னோட வழக்கமான ஆக்ஷன் மூலமா டைரக்டர் ஹரி இதை சாதிச்சுட்டார். சிங்கம் - 1 போலவே... திகுதிகு குறையாம ஆக்ஷன் காட்சிகளைத் தந்திருக்கறது... படத்தை தூக்கி நிறுத்துது. இந்தியாவுல இருக்கும் ஒவ்வொரு போலீஸும் சூர்யா போல கம்பீரமா இருந்தாலே போதும், நம்ம நாட்டுல சமூக விரோத செயல்களே நடக்காது. ஆனாலும்... நாலு வில்லன்கள்... நமக்கே டயர்டா இருக்கு.

பஞ்ச்: இண்டியன் போலீஸுக்கு... ராயல் சல்யூட்!

அவள் சினிமாஸ் - சிங்கம் II

தீபிகா: 'சிங்கம்' படத்துலயே... 'உங்க மனைவி'னு அனுஷ்காவை பத்தி சூர்யா கிட்ட சொல்வார் உள்துறை அமைச்சர் விஜயகுமார். ஆனா, சிங்கம்-2... கல்யாணம் ஆகாதது போலவே நகருது. ஆனா, இந்தத் தடவை நிச்சயதார்த்தத்தை முடிச்சுட்டாங்க. சிங்கம் -3லயாவது கல்யாணம் கட்டிப்பாங்களா? அனுஷ்கா, காஸ்ட்யூம்ஸ் அவ்வளவா ஈர்க்கல. இன்னும் கொஞ்சம் கவனம் எடுத்திருக்கலாம். ஹன்ஸிகா... ஸ்கூல் ஸ்டூடன்ட்டாம். 'எல்.கே.ஜி' படிக்கறதா சொல்லாம, 'ப்ளஸ் டூ’னு சொன்னதுக்காக சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான். இப்படி சின்னச் சின்ன ஓட்டைகள் இருந்தாலும்... கம்பீரம், காதல், சண்டைக் காட்சிகள், காமெடினு எல்லா ஏரியாவுலயும் புகுந்து விளையாடி, படத்தை தூக்கி நிறுத்துறார் சூர்யா. மிகையான காட்சியமைப்புகளைக்கூட, தன்னோட நடிப்பால நம்ப வைக்கிறார்.

பஞ்ச்: முன்ன ஓங்கி அடிச்சப்ப ஒண்ணரை டன் வெயிட்... இப்ப பாய்ஞ்சு அடிக்கறப்ப பத்தரை டன் வெயிட்!

தர்ஷிகா ராஜசேகரன்: நிறைய காட்சிகள், 'சிங்கம் - 1’ படத்தை நினைவுபடுத்துது. அதுக்காக பாட்டுகளைக்கூடவா அதே பாணியில எடுக்கணும். ஆனாலும்... 'கண்ணுக்குள்ள Gunன வெச்சு என்ன சுடாதே’, 'புரியவில்லை’ பாடல்கள், நம்மையும் பாட வெச்சுடுது. ஆப்பிரிக்கா வரைக்கும் போய், வில்லன் டேனியைப் பிடிக்கறது சரி. அதுக்காக... டர்பன் போலீஸுக்கே தெரியாத ரூட்களை எல்லாம், அந்த ஊருக்கு புதுசா போற சூர்யா கண்டுபிடிச்சு பாயறது... காதுல பூப்பந்துதான்! இதெல்லாம் எப்பூடி துரைசிங்கம்?!

பஞ்ச்: ஆயிரம் இருந்தாலும்... அனைத்து கிளாஸ் ஆடியன்ஸும் போடுறாங்க... சிங்கம் டான்ஸ்!

வினீதா: சந்தானம், சரியான செலக்ஷன். எல்லா படத்துலயுமே ஒன் லைன் நக்கல் கமென்ட்ஸ்களைத்தான் எடுத்து விடறார். ஆனாலும்... ச்சும்மா பிய்ச்சு உதறுதுல்ல! அனுஷ்காவைப் பார்த்ததுமே... சிங்கம் - 1 படத்தோட 'காதல் வந்தாலே' பாட்டுல சூர்யாவுக்குப் பதிலா, தான் அனுஷ்காவோட ஆடற மாதிரி சந்தானம் நினைச்சு பார்க்கறது... சூர்யாகிட்டயே போய் 'சும்மா அரேபிய குதிரை'னு உளறி வைக்கறது... கடைசியில சூர்யா - அனுஷ்கா ரெண்டு பேரும் லவ்வர்ஸுனு தெரிஞ்சதும் தரையில படுத்துக்கிட்டு பாவமன்னிப்பு கேட்டு பம்முறதுனு... தியேட்டர்ல இருக்கற பெருசுங்களை மட்டுமில்ல, குட்டீஸ்களையும் ஒட்டுமொத்தமா குத்தகை எடுத்து சிரிக்க வைக்கறார்.

பஞ்ச்: கொடுக்குற காசுக்கு கூடுதலாவே பொழுதுபோகும்!

அவள் சினிமாஸ் - சிங்கம் II

- வே.கிருஷ்ணவேணி, படம்: அபிநயா சங்கர்