தன்னுடைய கட்சியில் மட்டுமல்ல...எதிர்க் கட்சியினர்கூட, தனது தொகுதியிலும் மாவட்டத்திலும் தலை எடுப்பதை அவ்வளவாகச் சகித்துக்கொள்ளாதவர் ராமச்சந்திரன். ஜெ. அணியில் இவர் இருக்கும்போது, ஜானகி அணியில் தி கிரேட் தாமரைக்கனி இருந்தார். ஜானகியும் ஜெயலலிதாவும் இணைந்தால்கூட இவர்கள் இருவரது பகைமையும் குறையாத அளவுக்குப் பகைமை படர்ந்திருந்தது. 1988-ம் ஆண்டு சாத்தூரில் ஒரு திருமணத்தை முடித்துவிட்டுத் திரும்பிய ராமச்சந்திரன் முகத்தை நோக்கித் திராவகம் பாய்ச்சப்பட... அதில் அவரது முகமே சிதைந்தது. இன்று வரை அதன் தழும்புகள் அப்படியேதான் இருக்கின்றன. அதன் பிறகு, இவருக்கும் ஜெயலலிதாவுக்குமே கசப்புகள் வர... கட்சியைவிட்டு வெளியேறி, 91 தேர்தலில் தி.மு.க. ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளராக நின்றார். வென்றார்.
தேர்தல் நேரத்தில், அருப்புக்கோட்டை அருகே செம்பட்டி என்ற இடத்தில் உணர்ச்சி வசப்பட்டு துப்பாக்கியைத் தூக்கிக் காட்டி மிரட்டிய வழக்கு பூதாகாரமாக வெடித்தது. அதில் இருந்து காப்பாற்றிக்கொள்ள மீண்டும் ஜெயலலிதாவுடன் ஐக்கியம் ஆனார். போயஸ் கார்டன் வீட்டில் தனது மனைவியுடன் ஜெ-வைச் சந்தித்தார். அம்மா கட்சியின் குல வழக்கப்படி சாஷ்டாங்கமாக மனைவியுடன் விழுந்து வணங்கினார். அந்த புகைப்படத்தை 'மிக மிக மோசமான குணத்துடன்' பத்திரிகைக்குக் கொடுத்தார்கள். தனது வாழ்க்கையில் இனி நிம்மதிதான் என்று நினைத்து, போயஸ்கார்டனில் இருந்து நேராக திருப்பதிக்குப் போய் வெங்கடாசலபதியை வணங்கிவிட்டு, சாத்தூரார் மலை இறங்கவில்லை... மாலைப் பத்திரிகையில் படம் வந்துவிட்டது. அவமானம் என்பது தைரியசாலிகளைத்தான் அதிகமாக நொறுக்கும் என்பார்கள். சப்தநாடிகளும் ஒடுங்கிப் போனார் சாத்தூரார். சுமார் எட்டு ஆண்டு காலம் எதிலும் ஈடுபாடு இல்லாமல் வாழ்ந்து வந்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் இவர் அதிரடி என்றால், அவருக்கு நேர்மாறான சாந்த சொரூபியாக தி.மு.க-வில் இருந்து வந்தவர் அமைச்சர் தங்கப் பாண்டியன். அவரது திடீர் மரணம், சாத்தூரார் மனதை மாற்றியது. ஓரங்கட்டப்பட்ட நிலையில், அ.தி.மு.க-வில் இருப்பதைவிட தி.மு.க-வின் வெற்றிடத்தை நிரப் பினால் என்ன என்று சமயோசிதமாக யோசித் தார். உள்ளே வந்தார். ஸ்டாலினைச் சிக்கெனப் பிடித்தார். தங்கப்பாண்டியன் மகன் தங்கம் தென்னரசுவின் வருகை இவருக்குக் கசப்பை ஏற்படுத்தியது. அவரை வளர்த்து விடுகிறார் என்ற கோபத்தில் மு.க.அழகிரியைச் சந்திக்காமல் தள்ளியே இருக்கிறார் சாத்தூரார். இன்றைய விருதுநகர் மாவட்ட தி.மு.க. என்பது ராமச்சந்திர னின் தி.மு.க-தான். இன்றையபொறுப்பாளர் களில் 70 சதவிகிதம் பேர் அ.தி.மு.க-வில் இருந்து இவருடன் வந்தவர்கள்தான். தங்க பாண்டியன் தரப்பு தி.மு.க-வினர் இதை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்தப் பழைய பாசம்தான் அமைச்சரின் துறை மாறியதற்கு முதல் காரணம். கருணாநிதி அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராகத்தான் சாத்தூரார் முதலில் இருந்தார். அம்மா கட்சி ஆட்களுக்குக் காட்டிய கருணை, மேலிடத்துக்குத் தெரிந்தது. "தலைவரே இதை நேரில் அழைத்து விசாரித்தார். இல்லை என்று இவர் மறுத்தார். டேப் ஆதாரம் ஒன்று ஒலிபரப்பானதும் ஒப்புக்கொண்டார். 'கட்சியை வளர்க்கணும்னா, எல்லாக் கட்சிக்காரங்களையும் கைக்குள்ள போட்டுக்கணும்' என்று இவர் சொல்ல... 'அந்த பாலிசி எல்லாம் தி.மு.க-வுல சரியா இருக்காது' என்றார் தலைவர். அதன் பிறகுதான் சுகாதாரம் பறிக்கப்பட்டு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் கைத்தறித் துறை அமைச்சராக்கப்பட்டார்" என்கிறார்கள். இங்கும் நடந்த பசையான விவகாரங்கள் மேலிடம் வரை போய் கண்டிப்பு காட்டப்பட்டது.
சாத்தூராருக்கு நிழல் அவரது தம்பியும் அருப்புக்கோட்டை யூனியன் சேர்மனுமான கே.கே.எஸ்.எஸ்.வி.டி.சுப்பாராஜ்! ஆனால், இப்போது சாத்தூராரின் குடும்பத்துக்குள் புகைச்சல். இவருக்கு நாராயணன், ரமேஷ் என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்தவர் நாராயணன், ஸ்பின்னிங் மில் பிசினஸ் என்று ஒதுங்கிவிட்டார். ஆனால், இளைய மகன் ரமேஷுக்கு அரசியலில் ஆர்வம். மேலும், தம்பியை வளர்த்து விட்டது போதும், நம் பிள்ளைகளை அரசியலில் வளர்த்துவிடுங்க என்று குடும்பத்தில் கோரஸ் குரல் ஒலித்திருப்பதாகத் தகவல். அதனால், இளைய மகன் ரமேஷை இரண்டு ஆண்டு களுக்கு முன்பு, தி.மு.க இளைஞர் அணி நிர்வாகியாக ஆக்கியுள்ளார்.
சாத்தூர் தொகுதியில் அண்ணாச்சிக்கு அடுத்தபடியாக இப்போது ரமேஷ்தான் கட்சி நிகழ்ச்சிகளிலும், பொது நிகழ்ச்சிகளிலும் தலை காட்டி வருகிறார். இதற்கு வசதியாக, அருப்புக்கோட்டையில் ரமேஷுக்கு ஸ்பின்னிங் மில், கதிர் ஜவுளிக் கடை என்று வியாபாரத்தைத் தொடங்கிவைத்து, மகனை அங்கே செட்டில் செய்துவிட்டார். தீபாவளியை முன்னிட்டு கதிர் ஜவுளிக் கடைக்குத் துணி எடுக்க வரும் பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் போஸ்டர் அடிக்கும் வேலையை கழகத்தினர் பார்க்கிறார்கள்.
|