சட்டென்று அந்த இறுக்கத்தைக் கலைத்த கிருஷ்ணமூர்த்தி, "சொல்லுங்க செல்வா... என்ன விபத்து... எப்படி நடந்தது?" என்று கேட்டார். "கூலி வேலை பார்த்துட்டு இருந்தேன் ஐயா. மூணு வருஷம் முன்னாடி ரோடு வேலைக்காக லாரியில போயிட்டு இருந்தோம். அப்போ எதிர்பார்க்காம குறுக்கே புகுந்துட்ட ஒரு பாட்டி மேல மோதாம இருக்குறதுக்காக, டிரைவர் திடீர்னு பிரேக் போட்டாரு. அந்த வேகத்துல நான் லாரியோட கேபின்ல மோதிக்கிட்டேன். சின்ன சிராய்ப்புகூட இல்லை, ஒரு துளி ரத்தம்கூட வரலை. ஆனா, கழுத்து எலும்பின் பின்பக்க இணைப்பில் வலுவான அடி. அங்கேயே சுருண்டு விழுந்துட்டேன். ஒரு அடிகூட எழுந்து நடக்க முடியலை. படுத்த படுக்கையாக்கிடந்தேன்.
'செல்வா, நீ அவ்ளோதான்டா'ன்னு சூனியத்தை வெறிச்சுட்டு கிடந்தப்பதான், உங்க போட்டோவைக் காண்பிச்சார் என் நண்பர் சிவராஜ். உங்களைப்பத்தி நிறையச் சொன்னார். அவர் சொல்லச் சொல்ல, நான் ஆடிப் போயிட்டேங்க. நீங்க எதிர்கொண்ட சோதனைக்கு முன்னாடி என் வேதனை எல்லாம் ஒண்ணுமே இல்லைன்னு ஒரு உத்வேகம் பிறந்தது.
அதுவரை வெட்டிப் போட்ட வாழை மட்டை மாதிரி இருந்தேன். அதுக்கு அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாப் பயிற்சி எடுத்து... நிக்க, நடக்கப் பழகினேன். தொடர் பயிற்சி, விடா முயற்சி காரணமா ஓரளவுக்கு உடம்பு ஸ்திரமாகி நடக்க ஆரம்பிச்சேன். என்னை நம்பி அம்மா, மனைவி, மகன்னு மூணு பேர் இருக்காங்க. அவங்களுக்கு நான் ஒருத்தன்தான் ஆதாரம். குச்சி ஐஸ், பிளாஸ்டிக் சாமான்னு என்னென்னமோ வித்துப் பொழைச்சுக்கெடக்கோம். அடிபட்ட கழுத்தெலும்பு பெரிய வைத்தியம் கேட்டுக் கதறுது. ஆனா, ஏற்கெனவே பார்த்த வைத்தியம் இழுத்துவிட்ட கடனே, என்னை எங்கேயும் நகர முடியாம முடக்கிப் போடுது. மேற்கொண்டு சின்னதா ஒரு அதிர்வோ, வலியோ அந்த எலும்புல இறங்குனா... ஆளே இருக்க மாட்டேனாம். இன்னும் என்னன்னவோ சொன்னாங்க. எதுவும் புரியலை. ரொம்ப நாள் இருக்க மாட்டேன்னு மட்டும் புரியுது. போய்ச் சேர்றதுக்குள்ள எதையாவது சொல்லிக்கிற மாதிரி செய்யணும்னு மனசு துடிக்குது. ஆனா, வலிக்கும் வறுமைக்கும் நடுவுல என்ன பண்ண முடியும்னு தெரியலை. மனசு கிடந்து அல்லாடிட்டே இருக்கு. அது சமாதானமாகுற மாதிரி ஏதாவது சொல்லுங்க ஐயா!" என்று கிருஷ்ணமூர்த்தி முகம் நோக்கி அமர்ந்தார் செல்வகுமார்.
உதடுகளில் மென் புன்னகை படரவிட்ட கிருஷ்ணமூர்த்தி "ஒரு திடகாத்திர மனிதனாப் பிறந்து குழந்தைப் பிராயம், சிறு வயது, இளைஞன்னு பல பருவங் களையும் சந்தோஷமா, ஆரோக்கியமாக் கடந்து வந்த நீங்க, இந்த ஒரு பிரச்னைக்காகத் தளர்ந்து உக்காரணுமா? கூடவே கூடாது! பிறந்ததுல இருந்தே உடல் அளவுல சிறு குழந்தையா இருக்கிற என்னோட மன உறுதி ஆயிரம் பேருக்குச் சமம். சும்மா பெருமைக்காகச் சொல்லலை. இறைவன் தன் படைப்புகள் அனைத்துக்கும் ஏதாவது ஒரு சிறப்புத் தகுதி வெச்சிருப்பான். அது என்னன்னு கண்டுபிடிச்சு வெளிப்படுத்துறவங்களை, இந்த உலகம் சாதனையாளர்னு கொண்டாடுது. அப்படி அவன் எனக்குப் பரிசாக் கொடுத்தது அபார மன உறுதி. அந்த மன உறுதிதான் எதுக்கும் யாரையும் சார்ந்து இருக்கக் கூடாதுங் கிற வைராக்கியத்தை எனக்குள் உறுதி ஆக்குச்சு.
|