விவசாயம், ஃபைனான்ஸ், பனியன் கம்பெனி, தார் தொழிற்சாலை, கான்ட்ராக்ட், ரியல் எஸ்டேட், அலாய் வீல் தயாரிப்பு, சில ஸ்பின்னிங் மில்களுக்கு உதவி என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் இவரது பெயரைச் சொல்லி, தொழில்கள் இன்று திருப்பூரையும் அதன் எல்லைகளையும் தாண்டி இருக்கின்றன. பொதுப் பணித்துறையைப் போலவே நெடுஞ்சாலைத் துறையிலும் கான்ட்ராக்டர்கள் மொய்த்துக்கொண்டு இருப்பார்கள். பசையானவர் களுக்கு மட்டுமே கான்ட்ராக்ட்டுகள் வழங்கப்படுவதாக தி.மு.க. வட்டாரத்திலேயே வருத்தங்கள் உண்டு. இதனால், பாதிக்கப்பட்ட தி.மு.க. கான்ட் ராக்டர்கள் தங்களது வருத்தங்களைத் தலைமைக்குத் தபால் அனுப்பிவிட்டுப் பல ஆண்டுகளாகக் காத்திருக்கிறார்கள். இந்த விஷயங்களில் அமைச்சர்கூட அதிகம் தலையிடவில்லை. தனது உறவினர்களான மூவர் வசம் முழுப் பொறுப்பையும் வழங்கி இருக்கிறார். 'எஸ் மனசு வெச்சாதான் இங்க எதுவும் நடக்கும்' என்பது கான்ட்ராக்டர்களின் ரகசிய வார்த்தை. 'கட்சிக்காரர்களுக்குக் கசப்பு... உறவினர் களுக்கு உற்சாகம்' என்பது இவர் குறித்து கொங்கு வட்டாரம் அடிக்கும் விமர்சன வார்த்தைகள். ஒரு தொண்டர் சொன்னது கொஞ்சம் ஓவராக இருந்தாலும், சொல்லியாக வேண்டும். 'இவரை நம்புறதைவிடப் பக்கத்துல இருக்கிற காங்கிரஸ் எம்.எல்.ஏ-வை நம்பினால் சில நல்லதாவது நடக்கும்'!
சாமிநாதனைப் பொறுத்தவரை, அவருக்கு ஆரம்ப காலத்தில் அதிகமான இடைஞ்சலாக இருந் தவர், என்.கே.கே.பி.ராஜா. இருவரையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் ஸ்டாலின். ஆனால், ராஜாவின் குடைச்சலை சாமிநாதனால் தாங்க முடியவில்லை. 'மந்திரி ஆகிவிட்டால் மட்டும் போதாது' என்ற வார்த்தைகளுக்கான அர்த்தம், மந்திரிகள் அனைவருக்கும் தெரியும். ஈரோடு மாவட்டத்தில் ராஜாவுக்குத் தரப்பட்ட மரியாதையில் அரை சதம்கூட இவருக்குத் தரப்படவில்லை. அதற்காக ராஜாவை அதட்டும் சக்தியும் சாமிநாதனுக்கு இல்லை. சரியான காலத்துக்காகக் காத்திருந்தார். 'திருப்பூரைத் தலைமையகமாகக்கொண்ட தனி மாவட்டம் அமைக்க வேண்டும்' என்று அந்தப் பகுதி மக்கள் போராடியபோது, விழித்துக்கொண்டார் சாமிநாதன். தனது வெள்ளக்கோயில் தொகுதியைச் சத்தம் இல்லாமல் திருப்பூரில் கொண்டுபோய்ச் சேர்க்க அவரே சிக்னல் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. இதை அந்தப் பகுதி மக்கள் விரும்பவில்லை. 'வெள்ளக்கோயிலைத் திருப்பூருடன் இணைக்காதே!' என்று மக்கள் போராட்டம் நடத்தினார்கள். மீறிச் சேர்க்கப்பட்டது. புதிய திருப்பூர் மாவட்டச் செய லாளராக சாமிநாதன் அறிவிக்கப்பட்டார். அதுவரை தனது பூர்வீக ஊரான முத்தூரில் இருந்தவர், திருப்பூரில் குடியேறினார்.
பொங்கலூர் மணி எம்.எல்.ஏ. இவரைக் கடுமையாக எதிர்க்கும் மனிதர். திருப்பூர் மேயர் செல்வராஜும் அதே ரகம்தான். கட்சி முக்கியஸ்தர்களே இப்படி இருக்க, இவரது எல்லைக்கு உட்பட்ட திருப்பூர் நாடாளுமன்றத்தை அ.தி.மு.க. சிவசாமியும் பொள்ளாச்சி நாடாளுமன்றத்தை அ.தி.மு.க. சுகுமாரும் கைப்பற்றியதால், தலைமைக்கு இவர் மீது வருத்தம். தொடக்க காலத்தில் இருந்து ஸ்டாலினுடன் நெருக்கம், அதன்பிறகு, ராஜாத்தி - கனிமொழி குடும்பத்துடன் ஏற்பட்ட நட்பு என்று தலைமையைச் சுற்றியே வலம் வந்தால்போதும் என்று நினைத்துவிட்டார்.
|