ஸ்பெஷல் -1
Published:Updated:

சாய்னா 25

சாய்னா 25


சாய்னா 25
சாய்னா  25
சாய்னா  25
இர.ப்ரீத்தி
சாய்னா  25

சாய்னா நெஹ்வால்... உலகப் பெண்கள் பேட்மிட்டன் தர வரிசையில், எந்த நேரமும்

முதல் இடத்தை முத்தமிடும் பக்கத்தில் இருப்பவர். சர்வதேச விளையாட்டு அரங்கில் இந்தியக் கொடிக்குக் கௌரவம் தேடித் தரும் மிகச் சிலரில் ஒருவர். 25 வயதைக்கூட எட்டாத சாதனைப் பெண்ணைப்பற்றிய 25 குறிப்புகள் இங்கே...

சாய்னா, 1990 மார்ச் 17-ல் ஹரியானாவில் பிறந்தவர். ஆனாலும், விளையாடி வளர்ந்தது எல்லாமே ஹைதராபாத்தில். சாய்னாவின் இன்ஸ்பிரேஷன், அவரின் அப்பா டாக்டர் ஹர்விர் சிங். சாய்னாவின் அப்பா - அம்மா இருவருமே பேட்மிட்டன் சாம்பியன்கள்!

சாய்னாவின் அக்கா, சந்திரான்சு. ஃபார்மசி பட்டதாரியான சந்திரான்சு, வாலிபால் பிளேயர். ஆனால், தங்கை அளவுக்கு விளையாட்டில் ஆர்வம் இல்லை!

ஐந்து மாத சிசுவாக இருந்தபோது சாய்னாவை ஒரு பேட்மிட்டன் போட்டியைப் பார்க்கத் தூக்கிச் சென்று இருக்கிறார்கள். உள்ளே நுழைந்ததும்... சாய்னா பாப்பா முதன்முறையாக வாய்விட்டுச் சிரித்ததாம். அடக்க முடியாத ஆனந்தச் சிரிப்பாம். பின்னாட்களில் விளையாட்டில் சாதனைகள் படைத்த பிறகு, சாய்னாவின் அப்பா இந்த சம்பவத்தை அடிக்கடி நினைவுகூர்வார்!

சாய்னாவுக்கு எட்டு வயது இருக்கும். அதிகாலை 4 மணிக்கே எழுப்பி, 25 கி.மீ. தொலைவில் இருக்கும் மைதானத்துக்கு ஸ்கூட்டரில் பயிற்சிக்கு அழைத்துச் செல்வார் அவரது தந்தை. பயிற்சி முடிந்து பள்ளிக்குக் கொண்டுவிடும்போது, ஸ்கூட்டரில் அமர்ந்தபடியே சாய்னா தூங்கிவிடுவாராம். அதனால், சாய்னாவை அணைத்துப் பிடித்துக்கொள்ள, அவருடைய அம்மாவும் பில்லியனில் உடன் வரத் தொடங்கினார்!

பயிற்சிக்கெனத் தினமும் 50 கி.மீ. பயணம் செய்வது சிரமமாக இருந்ததால், மைதானத்துக்கு அருகிலேயே ஒரு வீடு பார்த்து மாறிக்கொண்டார்கள் சாய்னா குடும்பத்தினர்!

சாய்னாவின் பயிற்சிக்கென, அப்போதே மாதம் 12 ஆயிரம் ருபாய் ஒதுக்கிச் செலவழித்தார் அவரது தந்தை. சாய்னாவின் தொடர் வெற்றிகளுக்குப் பிறகு, யோனெக்ஸ் நிறுவனம்தான் முதன்முறையாக சாய்னாவுக்கு ஸ்போர்ட்ஸ் கிட் ஸ்பான்சர் செய்தது!

சாய்னா  25

சாய்னா... வீட்டின் பிரியமான இளவரசி. செல்லமாக 'ஸ்டெஃபி' என்றுதான் அழைப்பார்கள்!

இருட்டு என்றால் இப்போதும் பொண்ணுக்கு ரொம்பப் பயம். அம்மா அல்லது அக்கா என யாராவது உடன் இருந்தால்தான், தூங்கவே செல்வார். 'இதுவரை ஓர் இரவுகூட இவள் தனியாகத் தூங்கியது இல்லை!' என்கிறார் சாய்னாவின் அம்மா சிரித்துக்கொண்டே!

'ராஜீவ் காந்தி கேல் ரத்னா' விருது வென்ற முதல் பெண் பேட்மிட்டன் பிளேயர், ஒலிம்பிக்கில் கால் இறுதி வரை முன்னேறிய முதல் இந்தியப் பெண், உலக ஜூனியர் பேட்மிட்டன் பிரிவில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்று பல 'முதல்' சாதனைகளுக்குச் சொந்தக்காரர்!

சிறு வயதில் இருந்தே சினிமாவுக்குச் சென்றது இல்லை. ஓய்வு நேரங்களில்கூட விளையாட்டு, செய்தி சேனல்களில் மட்டுமே சாய்னாவின் கவனம் இருக்கும். பிடித்த நடிகர் என்றால், ஷாரூக்!

பெரும்பாலும் சாதாரண ஆடைகளிலேயே இருப்பார். இதுவரை டிசைனர் சுடிதார், பகட்டான புடவைகள் என எதுவும் வாங்கியது இல்லை.சாய்னாவின் அம்மாவும் இதுவரை புடவை உடுத் தியது இல்லை. புடவையே இல்லாத வீடு என்ற 'பெருமை' இவர்கள் வீட்டுக்கு உண்டு!

சி.பி.எஸ்.இ. சிலபஸில் பள்ளி இறுதி மட்டுமே தொட்டவர் சாய்னா. இவரது விளையாட்டுத் துறை சாதனைகளை ஊக்குவிக்கும் பொருட்டு, கௌரவ எஸ்.பி. அந்தஸ்து அளித்தார்கள். ஆனால், அது பேட்மிட்டன் பயிற்சியைப் பாதிக்குமோ என்ற தயக்கத்தில், அந்த வாய்ப்பை சாய்னா ஏற்கவில்லை!

லேட்டஸ்ட் மாடல் லேப்-டாப் மற்றும் செல் போன்களைத் தனது கலெக்ஷனில் அப்டேட் செய்து கொண்டே இருப்பார். அடிக்கடி தன் நம்பரை மாற்று வதும் சாய்னாவின் பழக்கம்!

காமன் வெல்த் போட்டிகளில் 2004-ல் இரண்டு வெள்ளிப் பதக்கங்கள், 2006-ல் மூன்று வெண்கலப் பதக்கங்கள், 2007 தேசிய விளையாட்டுப் போட்டியில் ஒரு தங்கப் பதக்கம், 2008 இளைஞர்களுக்கான காமன்வெல்த் போட்டியில் ஒரு தங்கப் பதக்கம், 2010 ஆசிய பேட்மிட்டன் சாம்பியன்ஷிப்பில் மூன்று வெண்கலப் பதக்கங்கள், ஆகியவை தன் மனதுக்கு நெருக்கமான வெற்றிகளாக சாய்னா உணர்பவை!

வெளிநாடுகளுக்கு விளையாடச் செல்லும்போது, 'சைட் சீயிங்' மேற்கொள்ளும் பழக்கம் சாய்னாவிடம் கிடையாது. பயிற்சி, போட்டி, போட்டி முடிவுகள் குறித்த தனது ப்ளஸ், மைனஸ் பாயின்ட்டுகளின் அலசல்களில் மட்டுமே முழுக் கவனமும் இருக்கும். சமீபத்தில் பாரீஸுக்கு விளையாடச் சென்று, ஈஃபில் டவரைக்கூடப் பார்க்காமல் திரும்பியவர் சாய்னா!

கம்மல் மற்றும் ஹேர் க்ளிப் பிரியை. விதவிதமாக வாங்கிக் குவித்துவிடுவார். மற்றபடி, நகைகள் மீது விருப் பம் இல்லை. வாட்ச் அணியும் பழக்கமும் இல்லை!

சாய்னா எதற்காகவும் அடம்பிடிக்கவோ, கோபப்படவோ மாட்டார் என்கிறார் அவரது தந்தை. ஆனால், பேட்மிட்டன் பயிற்சியின்போது யாரேனும் குறுக்கிட்டால், சாய்னாவுக்குக் கெட்ட கோபம் வரும் என்று எச்சரிக்கிறார்!

கடவுள் நம்பிக்கை அதிகம். எப்போதும் விநாயகர் சிலை வைத்திருப்பார். ஆனால், கோயிலுக்குச் சென்று வழிபடும் பழக்கம் இல்லை!

டென்னிஸ் பிளேயர் ரோஜர் ஃபெடரர்... சாய்னாவுக்குப் பிடித்த பிளேயர். ரோல் மாடலும் அவரே!

பாலிவுட் பட வாய்ப்புகள் வந்தபோது, உறுதியாக மறுத்துவிட்டார். 25 வயதில் திருமணம் செய்துகொள்ளலாம் என்று ஐடியாவாம். எதிர்காலக் கணவரும் விளையாட்டுத் துறை பிரபலமாக இருந்தால் 'டபுள் ஓ.கே'!

போட்டி என்று மைதானத்தில் இறங்கிவிட்டால், 'நம்பர் ஒன் பிளேயருக்கு எதிராக விளையாடுகிறோம்', 'மூன்றாவது ரேங்கில் இருக்கும் நாம் 22-வது இடத்தில் இருக்கும் எதிராளியைச் சுலபமாக வீழ்த்திவிடலாம்' என்ற நினைப்புகளுக்கு இடம் அளிக்கவே மாட்டார். 'எதிராளி யாராக இருந்தாலும், கொஞ்சம் அசந்தாலும் நம்மை ஜெயித்துவிடுவார்!' என்று மட்டுமே நினைப்பாராம். அது தான் தன் சக்சஸ் சீக்ரெட் என்கிறார்!

'மிக நெருங்கிய நண்பர்கள் யார்?' என்ற கேள்விக்கு சாய்னாவிடம் பதிலே இருக்காது. பளிச்சென்று சொல்லும் அளவுக்கு சாய்னாவுக்கு யாரும் நெருக்கமான நண்பர்கள் இல்லை என்பதே காரணம். 'பேட்மிட்டன் மட்டுமே தனது ஒரே நெருங்கிய நண்பன்' என்பார்!

டென்னிஸ் மீதும் ஒரு கண் இருந்தது. ஆனால், பேட்மிட்டனைவிட, டென்னிஸ் பயிற்சிகள் அதிக செலவு பிடிக்கும் என்பதால், அந்த ஆசையை ஆரம்பத்திலேயே தனக்குள் புதைத்துக்கொண்டார்!

கடந்த ஜூன் மாதத்தின் மூன்று வாரங்களில் இந்தியன் ஓப்பன், சிங்கப்பூர் ஓப்பன், இந்தோனே ஷியன் ஓப்பன் என்று அடுத்தடுத்து சாய்னா குவித்த வெற்றிகள், அவரை உலக ரேங்கிங்கில் அலேக்காக இரண்டா வது இடத்துக்கு உயர்த்தியது. இந்தியர் எவரும் எட்டியிராத உயரம் அது!

மாநில அளவில் 10 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் வென்று, முதன்முதலில் சாய்னா கொண்டுவந்த பரிசுத் தொகை, 300 ரூபாய். கடந்த வருடம் உலக பேட்மிட்டன் ஃபெடரேஷன் அமைப்பு நடத்திய ஒரே போட்டித் தொடரில் வென்றதன் மூலம் அவருக்குக் கிடைத்த பரிசுத் தொகை, 18,750 அமெரிக்க டாலர்கள்!

சாய்னா  25
சாய்னா  25