ஸ்பெஷல் -1
Published:Updated:

நீ இல்லாத நிகழ்காலம்

நீ இல்லாத நிகழ்காலம்


நீ இல்லாத நிகழ்காலம்!
நீ இல்லாத நிகழ்காலம்
நீ இல்லாத நிகழ்காலம்
நீ இல்லாத நிகழ்காலம்

வெங்கட் தாயுமானவன்... 18 வருட வாழ்க்கையைச் செலவிட்டு, சினிமாவில் ஓர்

இயக்குநராக ஜெயித்துவிடப் போராடியவர். வாய்ப்பு கை கூடி வந்த தருணத்தில், புற்றுநோய் அவரை முடக்கிப்போட்டது. கடந்த வருடம் தாயுமானவன் மருத்துவமனையில் இருந்தபோது 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், வெங்கட் தாயுமானவன்' என்ற தலைப்பில் 29.07.09 தேதியிட்ட விகடன் இதழில் கட்டுரை ஒன்று வெளியானது. செப்டம்பர் 18-ம் தேதி சிகிச்சைகள் பலனின்றி தாயுமானவனை மரணம் பறித்துக்கொண்டது. ஒரு வருடம் கடந்து விட்ட நிலையில், ஆசிரியையாகப் பணிபுரியும் தாயுமானவனின் மனைவி அன்பு என்கிற தயானி தாயுமானவன் எழுதிய பிரிவின் கவிதை ஒன்றும், வரைந்த ஓவியம் ஒன்றும் இங்கே...

நீ இல்லாத நிகழ்காலம்

இப்போதும் இனிக்கிறது
உன் கவிதைகள்
உன் காதலைச் சொல்லிய
அந்தக் கணத்தின்
இனிமையைப்போல!

நீ இல்லாத நிகழ்காலம்

உன் அறையெங்கும்
சுழல்கிறது சுவாசம்
தீராத எழுத்தின் தாகத்தோடு!

உன் கணினியில் வழிகிறது
நலம் விசாரிக்கும் உன்
நண்பர்களின் மின்னஞ்சல்கள்!

உன் முடிவுறாத
இரவின் உரையாடல்கள்
கைபேசியில் உறைந்துகிடக்கிறது
மௌனங்களாக!

உன் கலந்துரையாடல்களால்
களைகட்டும் நம் வீடு
நிசப்தம் தாங்கிய
மௌனத்தின் சாட்சியாய்...
உன் வளர்ப்பு நாயின்
உண்ணாநோன்பும்!

உன் சாம்பல் கிண்ணம்
கங்குகள் காணாது
காத்துக்கிடக்கிறது
நீயே சாம்பலானது அறியாமல்!

பழுத்த இலையின் வெம்மைபோல்
சுட்டெரிக்கிறது உன் நினைவுகள்
நம் கிராமத்தின் பாதையெங்கும்
யூகலிப்டஸ் மரங்கள்
அசைந்தாடுகின்றன,
என்றோ நாம் பேசிய
கதைகளைக் காற்றில் மொழிபெயர்த்தபடி!

உன்னால் எப்படி முடிந்தது
காற்றடிக்கும் திசையில் பயணிக்க,
உமிபோல் விதைநெல் மறந்து!

நீ இல்லாத நிகழ்காலம்
நீ இல்லாத நிகழ்காலம்