'மனிதன் கருவியை முதலில் வடிவமைக்கிறான்; அந்தக் கருவி வெற்றி பெற்றுவிட்டால், அது அவனை வடிவமைக்கிறது' என்கிறார் மேக்லூகன். இந்த அடிப்படைத் தத்துவத்தை விளக்க, சக்கரத்தை எளிய உதாரணமாகச் சொல்லலாம். சக்கரத்தை வடிவமைக்கும் வரை மனிதன் பொருட்களையும் தன்னையும் ஓர் இடத்தில் இருந்து மற்ற இடத்துக்கு நகர்த்த ரொம்பவும் கடினப்பட்டான். சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டதும், அவனது இயல்பே மாறிவிட்டது.
சுத்தியல் என்பது கைகளின் நீட்சி; சக்கரம் என்பது கால்களின் நீட்சி என்று உருவகப்படுத்திக்கொண்டால், இதை இன்னும் எளிமைப்படுத்தலாம். சொல்லப்போனால், ஊடகம் - மனிதர்களின் தகவல் தொடர்புக்குத் தேவையான அத்தகைய நீட்சியே. தொழில்நுட்ப வளர்ச்சிகளும், கண்டறியப்படும் புதுமைகளும் ஊடகத்தின் வலிமையை மாற்றிக்கொண்டே வருவதால், மனிதர்களின் தன்மையும் மாறிக்கொண்டே வருவது தெளிவாகத் தெரிகிறது.
அச்சு ஊடகத்தில் தொடங்கி, இணையம் வரை ஒவ்வொரு காலகட்டத்தில் புதிதாகக் கண்டறியப்பட்ட, அறிமுகப்படுத்தப்பட்ட ஒவ்வோர் ஊடகமும் மனித வாழ்வை வித்தியாசமாக வடிவமைப்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.
இதில் இணையத்தின் தாக்கம் மலைக்கவைக்கிறது. ஒப்பீட்டுக்கு, இப்படிப் பார்க்கலாம்.
50 மில்லியன் பயனீட்டாளர்களை அடைய, கீழ்க்கண்ட ஊடகங்களுக்கு எத்தனை வருடங்கள் ஆகின?
ரேடியோ 38 வருடங்கள், தொலைக்காட்சி 13 வருடங்கள், இன்டர்நெட் 4 வருடங்கள், ஐ-பாட் 3 வருடங்கள் (ஆம், ஐ-பாட் இசை கேட்கப் பயன்படும் சாதனம் மட்டுமே அல்ல; அது ஓர் ஊடகமும்கூட; இதைப் பயன்படுத்திச் செய்யப்படும் பாட் காஸ்ட் (Podcast) பற்றி இன்னொரு வாரத்தில் பார்க்கலாம்)
சமூக ஊடகம்? மூச்சைப் பிடித்துக்கொள்ளுங்கள்...! ஒன்பது மாதங்களுக்குள் ஃபேஸ்புக் 100 மில்லியன் பயனீட்டாளர்களை ஒன்றிணைத்து இருக்கிறது.
புதிதாக வரும் ஒரு மக்கள் தகவல் தொடர்பு ஊடகம் ஏற்கெனவே இருக்கும் தொடர்பு ஊடகங்களையும், அவற்றை அடிப்படையாகக்கொண்ட வியாபார உள்கட்டமைப்புகளையும் எப்படிப் பாதிக்கிறது என்பதை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். சில ஊடகங்கள் மற்றவற்றைப் பாதிக்கலாம்; அல்லது பாதிக்காமலும் இருக்கலாம்.
உதாரணத்துக்கு, தொலைக்காட்சி பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னரும், ரேடியோவின் முக்கியத்துவத்தை முழுதும் நீக்கிவிட முடியவில்லை. அதே நேரத்தில், ஒரு காலத்தில் மிக முக்கியத் தொடர்பு ஊடகமான தந்தி என்பதை அலைபேசி ஊடகம் பயனற்றதாகச் செய்துவிட்டது.
ஆனால், இணையம் மட்டுமே இதுவரை பயன்பாட்டில் இருக்கும் ஒவ்வொரு ஊடகத்தின் தன்மையையும், அந்த ஊடகத்தைச் சார்ந்து கட்டப்பட்டு இருக்கும் வியாபாரத்தின் பிசினஸ் மாடல்களையும் ஆணி வேரில் இருந்து அசைக்கிறது. காரணம், இணையத்தின் ஊடகங்களை உள்ளிணைக்கும் (Convergence) வலிமை.
இதை இப்படிப் பார்க்கலாம்.
நாளிதழை அச்சு வடிவத்தில் படித்து, செய்திகளை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு, காரில் செல்லும்போது ரேடியோவில் பாடல்களைக் கேட்டுக்கொண்டு, வார இறுதி என்றால் தியேட்டருக்குச் சென்று படம் பார்த்துவிட்டு, உறவினர்களிடம் தொடர்புகொள்ள பேப்பரில் கடிதம் எழுதி, தபாலில் போட்டு என்று ஒவ்வொரு தகவல் |