அதைவிடச் சோகம், அவரது குடும்பத்தில் ஏற்பட்ட தொடர்ச்சியான இழப்புகள். அவரது குடும்பம் மிக விசாலமானது. சாவித்திரி, கிருஷ்ணவேணி என இரண்டு மனைவிகள். அவர்களுக்கு மதியழகன், இளங்கோவன், புஷ்பா, தமிழரசி, அன்பழகன், தனபால், சின்னத்துரை, புகழேந்தி எனப் பல வாரிசுகள். மூத்த மகன் மதியழகன், குத்தாலம் ஒன்றியத் தலைவராக இருந்தார். கடந்த ஆண்டு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டு இறந்துபோனார். மனைவிகள் இருவரும் அடுத்தடுத்து இறந்தார்கள், மகளும் இறந்தார் எனக் கடந்த ஐந்து ஆண்டுகளில் துன்பம் அவரைச் சூழ்ந்ததும் அவரது உடல்நலிவுக்கு இன்னொரு காரணம். 'அமைச்சருக்கு இந்த சோகச் சம்பவங்கள் தொடராமல் இருந்திருந்தால், நல்ல உடல்நலத்துடன் துறையை சிறப்பாகக் கவனித்திருப்பார்' என்கிறார்கள் கோட்டையில்.
அதையும் தாண்டி, துறையில் சில சாதனைகள் நடந்திருப்பது உண்மைதான். கூட்டுறவுச் சங்கமும் வங்கிகளும், வறுமைக்கோட்டில் இருக்கும் மக்களையும் விவசாயிகளையும் கைதூக்கிவிடும் காரியத்தைப் செய்யவே உருவாக்கப்பட்டவை. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், டெபாசிட்டாக வாங்கிய பணத்தைக்கூட திருப்பிக் கேட்டால் கொடுக்க முடியாத அளவுக்குத்தான் பல சங்கங்கள் இருந்தன. கோ.சி.மணி வந்ததும் பார்த்த முதல் காரியம், டெபாசிட் வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்க ஏற்பாடுகள் செய்தார். சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் இருந்த அமைப்புகளைக் கொஞ்சம் கை தூக்கிவிட்டார். தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களின் கையிருப்பைக் கணிசமாக உயர்த்த முயற்சித்தார். நலிந்த சங்கங்களுக்கு 20 லட்சம் டெபாசிட்டுக்கு ஏற்பாடுகள் செய்தார். இதனால், கிராமப்புற மக்களது வாழ்வாதாரத்தில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது. அதேபோல் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டுறவுக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பல மாநிலங்களில் இருந்து இதைக் கேள்விப்பட்டு வந்து பார்த்துச் செல்கிறார்கள். ஆனால், அது மட்டும் போதுமா?
எல்லாவற்றுக்குள்ளும் அரசியல் நுழைந்து செல்லரித்தது மாதிரி, கூட்டுறவுச் சங்கங்களையும் அது கெடுத்துக் குட்டிச் சுவராக்கியது. இன்றைக்கு ஆளும் கட்சிக்காரர்கள் கை அரிப்புடன் பார்ப்பது கூட்டுறவு அமைப்புகளைத்தான். ஆட்சி மாறியதுமே எந்த சங்கத்துக்குள்ளாவது புகுந்துகொண்டால், ஐந்து வருடங்களுக்கு ஆபத்து இல்லை என்று நினைப்பார்கள் அரசியல் பிரமுகர்கள். தி.மு.க. இப்போது ஆட்சிக்கு வந்ததும் கூட்டுறவுத் தேர்தலை நடத்தியது. இதில் தனது கூட்டணிக் கட்சிக்குக்கூட இடத்தை விட்டுத்தர முடியாத அளவுக்கு ஆளும் கட்சியே அனைத்தையும் ஆக்கிரமித்துக்கொண்டது. சி.பி.எம்மும், பா.ம.க-வும் பின்வாங்காத நிலையில், தேர்தலையே முதல்வர் கருணாநிதி தள்ளிவைத்தார். 'அரசு தள்ளிவைத்தது சரிதான்' என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, மேல் முறையீட்டு பெஞ்சு ஏற்க மறுக்க, இப்போது வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் கிடக்கிறது. அதாவது, கூட்டுறவுத் தேர்தலைக்கூட ஒழுங்காக நடத்த முடியவில்லை என்பதுதான் இவரது ஆட்சிக் காலத்து யதார்த்தம்.
கூட்டுறவுச் சங்கத்தில் யார் உண்மையான உறுப்பினரோ அவரே பொறுப்புக்கு வர முடியும் என்ற நிலையை உருவாக்காமல், இந்தத் துறையை எத்தனை கோ.சி.மணிக்கள் வந்தாலும் திருத்த முடியாது. குஜராத் மாநிலத்தில் ஒருவர் உண்மையான உறுப்பினராக இருந்து, அவர் கடன் வாங்கி, அந்தக் கடனை ஒழுங்காகத் திருப்பிச் செலுத்திஇருந்தால் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும். ஆனால், இங்குதான் ஆட்சி மாறிய மறுநாளே 10 ரூபாய் கட்டணம் கட்டி உறுப்பினர் ஆனவர், உடனே... தலைவர், செயலாளராக மாறிவிட முடியும். ஆனந்த் மில்க் யூனியன் லிமிடெட் அமைப்பு 'அமுல்' ஆக மாறியது குஜராத் அரசாங்கத்தின் வெற்றி என்றால், அப்படி ஒரு மரியாதையான நிறுவனத்தை தமிழகத்தில் உருவாக்காமல் போனது யாருடைய தோல்வி? திறமையானவர், தைரியமானவர், நிர்வாக அனுபவம் வாய்ந்தவர் என்றெல்லாம் பெயரெடுத்த கோ.சி.மணியையும் உள்ளடக்கித் தானே இவை பார்க்கப்படும்!
ஈரோட்டில் இரண்டு சங்கங்களில் தேர்தல் நடத்த முடியவில்லை என்று தகவல் வந்ததும், அந்த மாவட்டத்து அமைச்சர் ஒருவரை அழைத்து, 'உங்க ஊர்ல தேர்தல் நடத்த முடியாததை நினைச்சு உங்களுக்கே வெட்கமா இல்லையா?' என்று கண்டித்தவர் கோ.சி.மணி. திடீரென ஒரு அலுவலகத்துக்கு விசிட் போனார். மூத்த அதிகாரியை |