நந்திகொட்டூர் கிராமத்தின் ஆலமர மேடையில் அமர்ந்து இருந்த வயதானவர்கள் பேசத் தொடங்கினார்கள். "89-வது வருஷம் நல்லமலையில சில இளைஞர்கள் ஒண்ணு சேர்ந்து 'ரேடிகல் ஸ்டூடன்ட் யூனியன்', 'ரேடிகல் யூத் லீக்'னு ரெண்டு குழுக்களை ஆரம்பிச்சாங்க. ரெண்டுக்கும் ரெண்டு தலைவருங்க இருந்தாங்க. ஒருத்தர்... ஆஞ்சநேய பாபு. இன்னொருத்தர்... தொம்மல சின்ன நரசிம்மலு. இந்த ரெண்டு பேரும்தான், முதல்ல எங்க கிராமங்களுக்குள் வந்தவங்க. கிராம மக்களை ஒன்று திரட்டி, கிராம முன்னேற்றத்துக்காக சங்கம் அமைச்சாங்க. 'உழுபவனுக்கு நிலம், வேலைக்கு ஏத்த கூலி, சரிசம வாழ்க்கை' இதுதான் கொள்கை. எங்களுக்கு விவசாயம்தான் தொழில். நாங்க காட்டுக்குப் போய் பீடி சுத்த இலைகளைக் கொண்டுவருவோம். மூங்கில் கட்டைகளையும் கொண்டுவருவோம். எங்களை ஃபாரஸ்ட்காரங்க ரொம்பத் துன்பப்படுத்துவாங்க. அவங்ககிட்ட இருந்து எங்களைக் காப்பாத்துனது இந்த இயக்கத்துக்காரங்கதான். அதே சமயம், எங்களுக்கு 'காடுகளை அழிக்கக் கூடாது'ன்னு தனியா வகுப்பும் எடுப்பாங்க. இப்படித்தான் எங்களுக்கும் அவங்களுக்கும் நெருக்கம் உருவாச்சு. கொஞ்ச நாள் கழிச்சு, அவங்க கையில் துப்பாக்கி வந்துச்சு. எங்களுக்குப் பிரச்னைன்னா, எந்த நேரமும் அவங்கதான் வந்து நிப்பாங்க. நாங்க செய்யற சமையலைச் சாப்பிடுவாங்க. எங்களுக்குப் புரியாத அரசியல் எல்லாம் பேசுவாங்க!"
இன்னோர் இளைஞர் பேசத் தொடங்கினார்... "94-ம் வருஷம் நக்சல்கள் தேர்தலைப் புறக்கணிக்கச் சொன்னாங்க. நல்லமலையைச் சுத்தி உள்ள எல்லாக் கிராமங்களும் தேர்தல் புறக்கணிப்பு முடிவை எடுத்தோம். உடனே, போலீஸ் படை ஊருக்குள் வந்து, எங்களைச் சித்ரவதை பண்ண ஆரம்பிச்சது. சிலரை ஜெயிலுக்குள்ள பிடிச்சுப் போட்டாங்க. இது இயக்கத்துக்காரங்களுக்குக் கோபத்தை உண்டுபண்ணுச்சு.
நல்லமலை அடிவாரத்தில் பைருலூட்டி பங்களான்னு ஒண்ணு இருந்தது. ஆந்திராவில் எந்த ஆட்சி வந்தாலும் அந்தப் பங்களாவுக்குப் புதுப் பொலிவு கொடுப்பாங்க. அதை இயக்கத்துக்காரங்க குண்டு வெச்சுத் தரை மட்டமாக்கினாங்க. அடுத்த ரெண்டே நாள்ல, இயக்கத் தலைவர் ஆஞ்சநேய பாபுவை போலீஸ் சுட்டுக் கொன்றது. அப்ப இருந்துதான் இந்தப் பகுதிக்கும் நக்சல்களுக்கும் ஒரு நெருக்கமான பிணைப்பு உருவாச்சு" என்றார் அந்த இளைஞர்.
ஆந்திராவின் சூப்பர் ஹிட் திட்டமான இந்திரம்மா வீட்டு வசதித் திட்டத்தை வெலுக்கோடு கிராமத்தினர் மட்டும் சபித்துக்கொண்டு இருந் தார்கள். ஊர்க்காரர் ரங்கையாவிடம் காரணம் கேட்டேன்.
"இந்தப் பக்கத்தில் செயல்படுத்தப்படும் அரசாங்கத் திட்டங்களில் ஊழலே இருக்காது. காரணம், இயக்கத்துக்காரங்க மேல் உள்ள பயம். இப்போ ஒரு வருஷமா அவங்க யாரும் வர்றது இல்லை. உடனே, இந்திரம்மா வீட்டு வசதித் திட்டத்தில் 400 வீடுகள் கட்டினதாக் கணக்குக் காட்டி இரண்டு கோடி ரூபாய் கொள்ளை அடிச்சுட்டாங்க. பேப்பர்காரங்க இதைப்பத்தி எவ்வளவோ எழுதிட்டாங்க. ஒண்ணும் நடக்கலை. இயக்கம் வந்தாத்தான் சரியா வரும். வருவாங்கன் னுதான் நாங்களும் காத்துக்கிடக்கோம்" என்கிறார்.
நல்லமலை கிராம மக்களுக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்குமான இணைப்பைத் துண்டிக்க ஆந்திர அரசு ஓசைப்படாமல் ஒரு காரியம் செய்தது. ஆறு வருடங்களுக்கு முன்பு ஆந்திராவின் கொடூரக் கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்களை ஒன்றுதிரட்டி அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கி, நல்லமலையின் அடிவாரத்தில் சித்தாபுரத்தில் குடிவைத்தது. இலவச நிலம், பாசன வசதி எல்லாம் வழங்கப்பட்டது. ஆனால், அரசாங்கம் நினைத்தது நடக்கவில்லை. அந்தப் பகுதியில் சாராய ஆறு பெருக்கெடுத்ததுதான் மிச்சம்.
|