நான் பள்ளிக்கூடம் படித்தது முழுக்க முழுக்க சென்னையில்தான். கல்லூரி படிப்பதற்கு 99, 2000 ஆகிய இரண்டு ஆண்டுகள் கொழும்பில் தங்கிஇருந்தேன். நான் இந்தியக் குடியுரிமை வைத்து இருந்ததால், தங்கதுரையின் மகன் என்ற அடை யாளமே தெரியாமல், படித்து முடித்தேன். பிறகு, லண்டனுக்கு படிக்கப் போனேன். இப்போது கல்யாணம். இதுவரையிலான, என் அமைதியான வாழ்க்கைக்கு ஆதரவளித்த தமிழகத் தலைவர்களுக்கு நன்றி!" என்கிற கரிகாலனுக்கு சிறையில் இருந்தபடியே அந்தப் பெயரை வைத்தவர் தங்கதுரைதான்.
"லண்டனில் இயங்கும் பல்வேறு தமிழ் அமைப்புகளில் ஓர் அங்கத்தினனாக இணைந்து செயல்படுகிறேன். என் தந்தையின் உயிர்த் தியாகத்துக்குக் காரணமான ஈழத் தமிழரின் உரிமைப் போராட்டத்தைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். இந்தப் போராட்டத்தின் மீது எத்தனையோ விமர்சனங்கள் இருக்கலாம். பலர் விடுதலைப் புலிகள் சிறுவர்களைப் போராட்டத்தில் இணைத்துக்கொண்டதாகச் சொல்வார்கள். அப்படிக் கட்டாயத்தின் பேரில் இணைக்கப்பட்டு இருந்தால், நான் அதை ஆதரிக்கவில்லை. ஆனால், புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் ஆதரவால்தான் இலங்கையில் போராட்டம் நடந்தது என்று சொல்வதை நான் ஏற்கவில்லை. அவர்கள் பணம் கொடுக்கலாம். ஆதரவாக இருக்கலாம். ஆனால், அவை எதுவுமே இல்லை என்றாலும், அங்கு போராட்டம் நடந்திருக்கும். அதற்கான தேவை அங்கு இருந்தது. தவிரவும், கோடி கோடியாக கொட்டிக் கொடுக்கப்படும் புலம்பெயர் தமிழர்களின் பணத்தைக் காட்டிலும் வன்னியில் சாகும் தமிழர்களின் உயிர் முக்கியமானது.
நான் கடைசியாக சமாதான காலத்தின் முடிவில் இலங்கைக்குப் போனேன். அதன் பிறகு போகவில்லை. இப்போது இலங்கையில் இருக்கும் தமிழ் மக்கள் அடிப்படை வசதிகள்கூடக் கிடைக்காத நிலையில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். சாப்பிட உணவும், வசிக்க ஒரு கூடாரமும், உடலை மறைப்பதற்குத் துணியும், தொடர்ச்சியான வருமானத்துக்கான தொழிலும்தான் அந்த மக்களுக்கான உடனடித் தேவைகள். ஈழத் தமிழர் பிரச்னையில், பல்வேறு கருத்து முரண்பாடுகள் உள்ள அமைப்புகள் ஒன்றிணைந்து இன்னும் உண்மையாக, நியாயமாக உழைக்க வேண்டும். இலங்கையில் இன்னொரு ஆயுதப் போராட்டம் சாத்தியமா என்று கேட்டால், அதற்கு நேரடியாகப் பதில் சொல்ல முடியவில்லை. ஆனால், விதவிதமான துப்பாக்கிகள் மட்டுமே ஆயுதங்கள் இல்லை. அடிக்க வருபவரை நோக்கி கல் எடுத்து வீசுவதும் ஆயுதப் போராட்டம்தான். அப்படி ஓர் உரிமைப் போராட்டத்தை நான் வரவேற்கிறேன்... ஆதரிக்கிறேன்!"
|