"இரண்டாம் வகுப்பு படிக்கும்போது, கருப்பையாவுக்குப் பார்வை பறிபோனது. சென்னை பார்வையற்றோர் பள்ளியில் படித்தான். 10-ம் வகுப்பில் 500-க்கு 421 மதிப்பெண்கள் எடுத்து, பார்வையற்ற மாணவர்களில் மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றான். விடுமுறைக்கு ஊர் திரும்பிய கருப்பையா, ஊரில் நடந்த இலவச கண் சிகிச்சை முகாமுக்குச் செல்கிறான். அங்கு அறுவை சிகிச்சை செய்கிறார்கள். ஐந்து நாட்கள் கழித்து ஒரு கண்ணுக்குப் பார்வை வருகிறது. 17 ஆண்டு இருட்டு முடிவுக்கு வருகிறது. ஆனால், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 'பார்வையற்றோருக்கு மட்டும்தான் பதிவோம், உனக்குத்தான் பார்வை தெரிகிறதே' என்று திருப்பி அனுப்பிவிட்டார்கள். பார்வை வந்தது சந்தோஷமா... துக்கமா? கொஞ்ச நாட்கள் அரசு சலுகைக்காக, வேலைக்காக அலைந்து திரிந்து சலித்து, தேனி பஸ் ஸ்டாண்டில் பழக்கடை வைத்துப் பிழைப்பு நடத்துகிறார். அந்த கருப்பையாதான் எழுத்தாளர் தேனி சீருடையான். 'கடை' என்கிற அவர் முதல் நாவல், இன்று பல்கலைக்கழகத்தின் பாடநூல். அவருடைய பார்வையற்ற வாழ்க்கையின் நிஜ தரிசனம்தான் 'நிறங்களின் உலகம்' நாவல். இரானிய Color of Paradise படத்தை நாம் கொண்டாடுகிறோம். இந்தக் கதை படமானால் அதைவிடச் சிறந்த படமாக இருக்கும்!"
வாங்கிய பொருள்கபிலன், கவிஞர்.
|