மழைக்குக் குடை பிடித்து நின்றுகொண்டு இருக்கிறது ஒரு புலி.
செல்போனில் பறைந்துகொண்டு இருக்கிறது ஒரு சிங்கம். ஓரம் ஒதுங்கி மழைக் குளிருக்கு இதமாகத் தம்மடித்துக்கொண்டு இருக்கிறது தொந்தி பெருத்த சிறுத்தை ஒன்று. விலங்குகளின் சேட்டைகளைக் கண்டு, விலா நோகச் சிரித்து மகிழ்கிறது திருச்சூர்!
'சிவாஜி' படத்தின் பல்லேலக்கா பாடலைக் காட்டிலும் பிரமாண்டமாக ஊரே புலி வேஷத்தில் அலைய, நொடிக்கு நொடி சந்தோஷம் கரைபுரண்டு ஓடுகிறது கேரளாவின் திருச்சூர் வீதிகளில்!
மலையாளிகள், கலகலப்பாக... கலர்ஃபுல்லாகக் கொண்டாடும் ஓணத் திருவிழாவின் ஒரு வைபவம்தான் 'புலிகளி' திருவிழா. அதாவது, புலி விளையாட்டு. ஓணத்தின் நான்காம் நாளன்று திருச்சூர் முழுக்க புலி வேடமிட்ட மனிதர்கள் நவரசம் காட்டுகிறார்கள்.
நாட்டுப்புற நடனம் ஆடத் தெரிந்த நான்கைந்து நபர்கள் ஒரு 'சங்கமாக' இணைகிறார்கள். கொண்டாட்ட தினத்தன்று ஒரு ஷெட் பிடித்து மேக்-அப் மேளா ஆரம்பிக்கிறார்கள். முதலில் கை, மார்பு, கால்களில் உள்ள ரோமங்களைச் சுத்தமாக சவரம் செய்கிறார்கள். பிறகு கலர் பொடிகள், வார்னிஷ் போன்றவற்றின் மூலம் பளபள ஜிகுஜிகு பெயின்டிங் படலம் துவங்கும். குறைந்தபட்சம் அரை நாள் நீளும் பெயின்டிங் வேலைகள். அதன் பிறகு, இன்னொரு அரை நாள் நீளும் ஆட்டம்பாட்டம் கொண்டாட்டங்கள். ஆக, ஒருநாள் முழுக்க புலி வேஷமிட்டவர்கள் மிகக் குறைந்த உணவு, அலைச்சல் என்று கொஞ்சம் அடக்கமாகவே இருக்க வேண்டும். பெரும்பாலும் புலி வேஷம்தான் என்றாலும் சிலர் சிறுத்தை, சிங்கம் என்று வித்தியாசமாகவும் மெனக்கெடுவார்கள்.
பெயின்டிங்கின்போதே ஒரு புலி மற்றொரு புலியின் இடுப்பில் கிள்ளுவதும், 'அடே பட்டி... போய்க்கோடா அப்டி!' என்று இவர் கடுப்பாவதுமாக, சிரிசிரி சில்மிஷங்களுக்கும் குறைவில்லை. உடல் முழுக்க வண்ணம் தீட்டப்பட்டதும் கைகளை நீட்டி, இரண்டு குச்சிகளைப் பிடித்துக்கொண்டு மணிக்கணக்காக வெயிலில் காய்கிறார்கள் புலிகளும், சிறுத்தைகளும். மேக்-அப் உலர்ந்ததும் தங்கள் உடல்வாகுக்கு ஏற்ப ஒரு முகமூடியை மாட்டிக்கொண்டு வேட்டைக்குக் கிளம்புகிறார்கள் புலிகள். காடு நோக்கியல்ல... ரோடு நோக்கி!
'அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா!' என்ற கங்கணத்துடன் உடுக்கை போன்ற உருமி வாத்தியங்கள் அதிரடிக்கின்றன. ஆவேசமாக, மிக வீராவேசமாக புலிப் பார்ட்டிகள் பாய்வதும், பதுங்குவதும், உறுமுவதுமாக அதகளப்படுத்துகிறார்கள். கொஞ்சம் காமாசோமாவாக ஆட்டம் போடும் புலிகளின் வாலைப் பிடித்துத் திருகி கலாய்க்கவும் செய்கிறார்கள் சேச்சிகள்!
|