2006 சட்டமன்றத் தேர்தல் வந்த போது, தனக்கும் ஸீட் கேட்டார். மகளுக்கும் கேட்டார். இருவரில் ஒருவருக்குத்தான் என்று கருணாநிதி சொல்லிவிட்டார். எனவே, மகளுக்கு விட்டுத் தர வேண்டிய நெருக்கடி பெரியசாமிக்கு. அந்த விட்டுக் கொடுத் தலுக்குக் காரணம், வென்றால் மகள் மந்திரி ஆவார் என்ற நம்பிக்கைதான். அது வீண் போகவில்லை. பெரிய சாமியின் பெரிய கனவு நிறைவு அடைந்தது!
அமைச்சர் கீதா ஜீவன் மேடைஏறிவிட்டால்... தி.மு.க அரசின் சாதனைகள், நலத்திட்ட உதவிகள் என அத்தனையையும் மடமடவென மனப் பாடமாகச் சொல்லிவிட்டுத்தான் கீழே இறங்குவார். இதை தூத்துக்குடியில் நடந்த கட்சியின் பொதுக் கூட்டத்தில் நேரடியாகவே பார்த்துவிட்ட அமைச்சரும் பொதுச் செயலாளருமான அன்பழகன், "தலைவர் பக்கத்துலயே இருந்து திட்டங்களை உருவாக்குற எங்களுக்கே அத்தனை திட்டங்களையும் வரிசையா சொல்ல முடியலை. ஆனா, பெரியசாமியோட மகள், அத்தனையையும் ஒண்ணுவிடாம வரிசையா சொல்லிடுறாரே!" எனப் புகழ்ந்தார். இப்போது எல்லாம் கீதா ஜீவனை நியமிக்கப்படாத 'கொள்கை பரப்புச் செயலாளர்' என்றே சொல்கிறார்கள்!
ஆரம்பத்தில் கீதா ஜீவனுக்குக் கால்நடை பராமரிப்புத் துறை தரப்பட்டது. சமூக நலத் துறை அமைச்சராக இருந்த பூங்கோதை, ஓர் பரிந்துரை புகாரில் சிக்கியதால் அவரிடம் இருந்து பறிக்கப்பட்ட சமூக நலத் துறை, கீதா ஜீவனுக்குக் கிடைத்தது. சமூக சேவையும் செய்யலாம், சுய சேவையும் செய்துகொள்ளலாம் என்பதற்கு வசதியான துறைதான் இது. சத்துணவுத் திட்டம் தொடங்கி, பல்வேறு சமூக உதவித் திட்டங் களை ஒழுங்காகச் செய்து கொடுத்தாலே மந்திரிக்கு கெட்ட பெயர் இல்லாமல் போகும். ஆனால், கான்ட்ராக்ட் விவகாரங் கள் தொடங்கி, கடைநிலை ஊழியர் நியமனம் வரை அப்பாவின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டி இருப்பதால், விமர்சனங்களைத் தவிர்க்க முடியவில்லை. இன்னும் ஏராளமான காலி இடங்கள் அப்படியே இருக்கின்றன. 'சமூகக் காப்பகங்கள்' என்கிற போர்வையில் குழந்தைகள் கடத்தல் அதிகமாக நடப்பதை மந்திரியால் தடுக்க முடியவில்லை. மோசடியான காப்பகங்களை முறைப்படுத்த முழு மூச்சான நடவடிக்கைகள் இல்லை. அனுமதி பெறாத காப்பகங்கள் ஏராளமாக உள்ளன. அதிக அளவில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடத்தும் இடங்களாக சமூக நலத்துறை அலுவலகங்கள்தான் இருக்கின்றன. துறை சார்ந்த அக்கறை அமைச்சருக்கு இருந்தாலும், தைரியமாகத் திட்டமிட்டு செய்யும் வேகம் இல்லை என்றே அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு இருக்கிறது.
அய்யாசாமி தொடங்கி சிவசாமி, சௌந்தரபாண்டியன், தனசேகரன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகிய அரசியல் எதிரிகளை அப்பாவே 'அமைதி'யாக்கிவிடு வதால், கீதா ஜீவனுக்கு எதிர் கோஷ்டித் தொந்தரவுகளும் இல்லை. வெங்கடேசப் பண்ணையாரின் மனைவி ராதிகா செல்வி மட்டும்தான் இவருக்கு நெருடல் சொப்பனம். அதுவும் அவர் மத்திய உள்துறை இணைஅமைச்சராக இருந்த காலத்தில், இவர்கள் இருவரும் கலந்துகொண்ட கூட்டங்கள் முட்டலும், மோதலுமாக முடிந்தன. ராதிகாவுக்கு இப் போது பதவிகள் இல்லாததால், கீதாவுக்குச் சிக்கல்களே இல்லை.
அனிதா ராதாகிருஷ்ணன் அ.தி.மு.க-வில் இருந்தபோது, வர்த்தகக் காரணங்களால் தூத் துக்குடி பெரியசாமிக்கு இணக்கமாகத்தான் இருந்தார். அவர் தன்னை தி.மு.க-வில் இணைத்துக்கொண்ட பின்னால் இந்தக் குடும்பத்துக்கு ஆகவில்லை. இந்த வகைப்படி பார்த்தால், கடந்த 25 ஆண்டு தூத்துக்குடி தி.மு.க-வில் பெரியசாமிக்குச் சரியான போட்டியாக வந்திருக்கும் முதல் ஆள் அனிதா மட்டுமே!
இதைச் சரிகட்ட பெரியசாமி - கீதா ஜீவன் போட்டுள்ள திட்டத்தை அ.தி.மு.க-காரர் ஒருவர் சொன்னபோது, நம்ப கஷ்டமாகத்தான் இருந்தது. "எங்கள் கட்சியில் தொகுதிப் பொறுப்பாளர்களை அம்மா நியமித்துள்ளார். அதில் மூன்று தொகுதிகளின் பொறுப்பாளர்கள் பெரியசாமியுடன் நட்பு பாராட்டுகிறார்கள். அவருடன் தொழில் தொடர்புகளை வைத்து உள்ளார்கள். அழகிரியையும் ஸ்டாலினையும் தரக்குறைவாகப் பேசிய ஒருவரின் பண்ணை வீட்டில்தான், இவர்கள் அடிக்கடி தங்கி பொழுதைக் கழிக்கிறார்கள்!" என்கிறார் அந்த இரட்டை இலைக்காரர்.
கீதா ஜீவனுக்கு ராஜா, ஜெகன், அசோக் என்ற மூன்று தம்பிகள். அக்காவுக்குத்தான் அப்பா அதிக செல்லம் கொடுக்கிறார் என்று கோபித்துக்கொண்டு, பாரதிய ஜனதாவுக்குப் போனார் ராஜா. அவரது இயல்புக்கு அது தோதான இடம் அல்ல என்று தெரிந்து, தே.மு.தி.க-வுக்கு மாறினார். 'இனி, எனக்கு அவன் மகனும் கிடையாது. நான் அவனுக்கு அப்பாவும் கிடையாது. முறையா சொத்தைப் பிரிச்சுக் கொடுத்துடுவேன். அதை வாங்கிட்டுப் போகட்டும். இனிமேல், என் மூஞ்சிலகூட அவன் முழிக்கக் கூடாது' என அதிரடியாக அறிக்கைவிட்டார் பெரியசாமி. அதன் பிறகு, ராஜாவைக்
குடும்பத்தில் யாருமே கண்டுகொள்ளவில்லை. 'என் வழி தனி வழி' என அவர் தனியாகவே தொழில் தொடங்கி செய்து வந்தார். அதுவும் சரிவரவில்லை. தூத்துக்குடிக்கு ஸ்டாலின் வந்தபோது, தி.மு.க-வில் தன்னை இணைத்துக்கொண்டார் ராஜா. கட்சிக்கு ஒரு சால்வை லாபம் அவ்வளவுதான்!
அடுத்த தம்பியான ஜெகன் சும்மா இருப்பாரா? 2009 நாடாளு மன்றத் தேர்தல் சமயம், ஜெகன் மூக்கில் வேர்த்தது. தூத்துக்குடி எம்.பி. தொகுதியை வாங்கித் தரச் சொல்லி அப்பாவைத் தொந்தரவு செய்தார். தென் மாவட்டம் என்பதால், அழகிரி யைச் சந்தித்து ஜெகன் பெயரை ஞாபகப்படுத்தினார். சென்னைக்கு வந்து பவர் சென்டர்களைப் பார்த்தார்கள். குடும்பத்தில் இன்னொருவருக்குக் கிடையாது என்று தலைமை சொல்லிவிட்டது. 'எவ்வளவு வெயிட் காட்டியாவது வாங்கி யாக வேண்டும்' என்ற துடிப்பு செல்லுபடி ஆகவில்லை.
|