"எனக்கு இன்னும் நம்ப முடியலைங்க மேடம்... நீங்க எதுக்கும் என் கையில நறுக்குனு
ஒரு தடவை வலிக்கிற மாதிரி கிள்ளுங்களேன்... ப்ளீஸ்!" என்று விஜயலட்சுமி வேண்டுகோள்வைக்க, "அட, என்ன இன்னும் அசட்டுத்தனமா பேசிண்டு... அதான் நாம ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் ஆயிட்டோம்ல. இதோ போட்டோஸ்லாம் எடுக்கப்போறாங்க. பக்கத்துல உட்காருங்க! அட, ஏன் இவ்ளோ தள்ளி உட்கார்றீங்க. நல்லா பக்கத்துல வந்து உட்காருங்க. என் கையைக் கெட்டியா புடிச்சுக்குங்க. ஆங்... என் வளையல் குத்துதா... இப்போ நம்புறீங்களா?" என்று உற்சாகமூட்டுகிறார் சுதா ரகுநாதன். 'ஸ்மைல் ப்ளீஸ்' தேவை இல்லாத சந்தோஷமும் ஆனந்தமும் விஜயலட்சுமி குடும்பத்தினரிடம் பிரதிபலிக்க... ஃப்ளாஷ்!
இங்கே ஒரு ஃப்ளாஷ் பேக்!
"எனக்குச் சின்ன வயசில் இருந்தே கர்னாடக சங்கீதம் என்றால் உயிர். சாதகம் எல்லாம் செய்தேன். ஆனால், திருமணம், குழந்தைகள் என்று ஆன பிறகு, இசைபற்றி நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. ஆனால், என் கணவர் எனக்குக் கிடைத்த வரம். திருமணத்துக்குப் பிறகு, என்னை இசை சம்பந்தமான படிப்பு படிக்கவைத்து, அதில் இளநிலை பட்டம் பெறவைத்தார். ஆனாலும், எனக்குள் இதுவரை ஒரு நிறைவேறாத ஆசை. கர்னாடக மேடைக் கச்சேரிகளின் சூப்பர் ஸ்டார் சுதா ரகுநாதனுடன் சேர்ந்து, ஒரு கீர்த்தனையாவது பாட வேண்டும். விகடன் நிறைவேற்றிவைக்குமா?' - சேந்தமங்கலம் விஜயலட்சுமி அனுப்பி இருந்த கடிதத்தின் சாராம்சம் இது.
சுதா ரகுநாதனிடம் விவரம் தெரிவித்து அனுமதி கேட்டபோது, "எப்போ விஜயலட்சுமி ஃபேமிலி என்னை வந்து சந்திப்பாங்க?" என்று கேள்வியைப் பதிலாக்கினார். பன்னீர்த் தூவலாக மழை பொழிந்துகொண்டு இருந்த ஒரு காலை வேளையில்... கணவர் வெங்கடேஷ், குழந்தைகள் அஷ்மிதா, கணபதி ஆகியோருடன் சென்னையை அடைந்தார் விஜயலட்சுமி. காலாண்டுத் தேர்வுகளுக்குக் கல்தா கொடுத்து வந்திருந்தார்கள் அஷ்மிதாவும் கணபதியும். குறிப்பிட்ட நேரத்தில் சுதா ரகுநாதன் வீட்டில் விஜயலட்சுமி குடும்பத்தினர் ஆஜர். தனது டிரேட் மார்க் பட்டுப் புடவை, பொன்னகை, முகம் கொள்ளாத புன்னகையுடன் அவர்களை வரவேற்றார் சுதா ரகுநாதன். அறிமுகப்படலங்கள் இனிதே அரங்கேறியது.
|