வெள்ளை வேட்டி - சட்டை தவிர, பிற நிற உடைகளை தமிழக பொது மேடைகளில்
பயன்படுத்தாத ஸ்டாலின், கலக்கல் உடைகளில் சீனாவில் வலம் வந்தார். எப்போதுமே பாரம்பரிய சேலை, நெற்றி நிறையக் குங்குமம் எனக் காட்சி அளிக்கும் துர்கா ஸ்டாலினும் கலர்ஃபுல் சுடிதாரில் வலம் வந்தது தம்பதிகளுக்கு இளமை திரும்பிவிட்டதோ என்று எண்ணத் தோன்றியது! துணை முதல்வர் ஸ்டாலினிடம், "இது என்ன சார் ஹனிமூன் பயணமா?" என்றால், வெட்கப்பட்டு சிரிக்கிறார்!
"அதெல்லாம் திருமணம் ஆனதுமே ஊட்டிக்குப் போயிட்டு வந்துட்டோம். கல்யாணத் தம்பதியினர் ஒருவருக்கு ஒருவர் புரிந்துகொண்டு, குடும்ப வளர்ச்சியை மேம்படுத்த தேனிலவுப் பயணங்கள் உதவும். அதைப்போல, சீன, கொரியத் தொழில் அதிபர்களுடன் புரிந்துணர்வு ஏற்படுத்தி, தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு வித்திட, நிர்வாகரீதியான இந்தப் பயணம் பயன்பட்டது!" என்று துணை முதல்வராகப் பதில் அளிக்கிறார்.
|