காசிமேட்டின் ஒவ்வொரு தெருவிலும் காணாமல் போன கதைகளைக் கேட்க முடிகிறது. காணாமல் போய்விட்டது தெரிந்ததும், தங்கள் சொந்த முயற்சியில் தேடுவதுபோக, மீன்வளத் துறையிடமும் கடலோரக் காவல் படையிடமும் உடனே புகார் தருகின்றனர். அவர்கள் ஹெலி காப்டரில் சென்று தேட வேண்டும். "ஆனால், இதுவரை காணாமல் போன ஒரு மீனவரைக்கூட கோஸ்ட்கார்டு கண்டுபிடித்த தாகத் தகவல் இல்லை!" என்கிறார், தென்னிந்திய மீனவர் நலச் சங்கத்தின் தலைவரான பாரதி. "ஒரு தடவை ஹெலிகாப்டரில் போய் தேடினா 9 லட்ச ரூபாய் செலவாகுதாம். ஒரு மீனவன் செத்தாலே அரசாங்கம் ஒரு லட்ச ரூபாய்தான் தருது. அப்புறம் எப்படித் தேடுவாங்க? ஆனா, கோஸ்ட்கார்டுக்கு வரிசையா ஹெலிகாப்டர் வாங்கி அடுக்குற ஒவ்வொரு முறையும் 'மீனவர்களின் நலனுக் காகத்தான் இதை வாங்குறோம்'னு பெருசா சொல்லுவாங்க. சும்மா இருக்குற மெரினாவுல ஹெலிகாப்டர்ல சுத்திச் சுத்தி வர்றாங்க. அங்கே ஆகுற செலவை மீனவனைத் தேடுறதுக்கு பண்ணக் கூடாதா? ஒரு மீனவன் காணாமப் போயிட்டான்னு புகார் கொடுத்த ரெண்டு நாளுக்குள்ள நிஜமாவே தேட ஆரம்பிச்சா, நிச்சயமா கண்டுபிடிச்சுடலாம்" என்கிறார் பாரதி.
மீனவன் கடலுக்குள் காணாமல் போய்விட்டால், ஒரு லட்சம் நஷ்ட ஈடு தருவதாக அரசு சொல்கிறது. ஆனால், அவர் காணாமல் போனதில் இருந்து ஏழு வருடங்கள் வரை திரும்பி வரவில்லை என்றால்தான் இது பொருந்தும். அதுவரை அந்தக் குடும்பத்தின் கதி? ஒரு மீனவர் காணாமல் போனதாக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு 30 நாட்கள் வரை அவர் திரும்பி வரவில்லை என்றால், அந்த மீனவரின் குடும்பத்துக்கு நாள் ஒன்றுக்கு 50 ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று அரசு உத்தரவு சொல்கிறது. ஆனால், அப்படிக் காணாமல் போன பல மீனவர்களின் குடும்பங்களுக்கு பணம் முறையாகக் கொடுக்கப்படுவதே இல்லை. கையில் ஒன்று, இடுப்பில் ஒன்று என 20 வயதில் இரண்டு குழந்தைகளோடு கணவன் சுரேஷையும் கடலுக்குக் கொடுத்துவிட்டு, சூனியமான எதிர்காலத்தைக் கண்டு கலங்கி நிற்கும் பூங்கொடிக்கு இந்த சட்டங்கள் பற்றி என்ன தெரியும்? குடும்பத்தின் ஒரே சம்பாதிக்கும் ஜீவனான 17 வயது மணிவண்ணனைக் கடலுக்குள் இறங்கியா தேடுவார் தேசம்?
அரசின் காதில் இந்த எளியவர்களின் குரல்கள் ஒருபோதும் விழுவது இல்லை. ஆனால், எத்தனை இழப்புகள் வந்தபோதிலும் மீனவர்கள் இந்தத் தொழிலை யும் கடலையும் வெறுப்பது இல்லை. 11 வருடங்களுக்கு முன்பு தன் அன்புக் கணவர் பெருமாளைக் |