வங்கி மோசடிகளைக் கண்காணிக்கும் பிரிவில் பணியாற்றிவிட்டு, தற்போது போலீஸ் அகாடமியில் கூடுதல் போலீஸ் சூபரின்டெண்டெண்ட் பணியாற்றிவரும் எம்.பன்னீர் செல்வம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பட்டியல்இடுகிறார்.
வாடிக்கையாளர்களுக்கு
"தொலைந்த அல்லது தகவல் திருடப்பட்ட கார்டுகள் மூலம் ஏ.டி.எம்-களில் பணம் எடுக்க முடியாது. ஆனால், பொருட்கள் வாங்கும்போது, பின் நம்பர் தேவைப் படாது என்பதால், கார்டை எடுத்தவர்கள் எவ்வளவு செலவு செய்ய முடியுமோ அவ்வளவு செய்துவிட்டு, கார்டைத் தூக்கிப்போட்டுவிடுவார்கள். அதனால், கார்டு தொலைந்துவிட்டது என்று நீங்கள் உணர்ந்த உடனேயே, வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்டு, உங்கள் கார்டை பிளாக் செய்துவிடுங்கள். பொதுவாக, உங்கள் கார்டின் எண், பாதுகாப்பு எண் (Card Verification Code - CVV) மற்றும் காலாவதி ஆகும் வருடம், மாதம் போன்ற தகவல்களை யாருடனும் பகிர்ந்துகொள்ளா தீர்கள். அதன் மூலம் ஆன்லைன் மோசடிகள் எளிதில் சாத்தியமாகும். கார்டை ஸ்வைப் செய்யக் கொடுக்கும் போது மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள். 'பாரம்பரியம் மிக்க நிறுவனத்தில்தான் பொருள் வாங்குகிறோம்!' என்ற எண்ணத்தில் அசட்டையாக இருக்காதீர்கள். அங்கு வேலை செய்யும் யாரோ ஒரு பணியாளர் தில்லாலங்கடிபேர்வழியாக இருந்தால் சிக்கல்தான். வங்கியின் வாடிக்கையாளர் சேவையில் இருந்து அழைக்கிறோம் என்று கேட்டால்கூட, உங்கள் பாஸ்வேர்டு, பின் நம்பர் போன்ற ரகசியத் தகவல்களைக் கொடுக்காதீர்கள்!" என்கிறார் பன்னீர்செல்வம்.
வணிக நிறுவனங்களுக்கு
"போட்டோவுடன் கூடிய கார்டு என்றால், போட்டோவில் உள்ள நபர்தான் கார்டைக் கொடுத்தவரா என்று ஊர்ஜிதம் செய்யுங்கள். 'மனைவி - மகன் கார்டு' போன்ற சல்ஜாப்புகளை ஏற்றுக்கொள்ளாதீர்கள். சார்ஜ் ஸ்லிப் கையெழுத்தும், கார்டின் பின்புறம் உள்ள கையெழுத்தும் ஒரே சாயல்கொண்டதா என்பதையும் பரிசோதியுங்கள். அதேபோல, கார்டில் உள்ள பெயர், எண் ஆகியவை சார்ஜ் ஸ்லிப்பில் வரும் விவரங்களுடன் பொருந்துகிறதா என்பதையும் கவனியுங்கள். இவற்றை முறையாகக் கடைபிடித்தாலே பெரும்பாலான மோசடிகளைக் களைந்து விடலாம்!
|