ஸ்பெஷல் -1
Published:Updated:

5 கேள்விகள்

5 கேள்விகள்

5 கேள்விகள்
5 கேள்விகள்
5 கேள்விகள்

அமைச்சர் ஆற்காடு வீராசாமியிடம்...

"தி.மு.க. அரசு, ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ஒன்பது ரூபாய் கொடுத்து வெளி மாநிலங்களில் இருந்தும் தனியாரிடம் இருந்தும் வாங்குவதில் காட்டும் முனைப்பை, என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதில் ஏன் காட்டுவது இல்லை என்கிறாரே விஜயகாந்த்?"

"தமிழ்நாட்டில் மின்சாரப் பற்றாக்குறை இருப்பதால், வெளி மாநிலங்களில் இருந்தும் மின்சாரம் வாங்குகிறோம். ஆனால், என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் பிரச்னை என்பது மத்திய அரசுடன் தொடர்பு உடையது. அதற்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. என்.எல்.சி பிரச்னையைத் தீர்க்கும் அதிகாரமும் தமிழக அரசுக்குக் கிடையாது. விஜயகாந்த் இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்!"

5 கேள்விகள்

அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திடம்...

" 'குடும்பத்துக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்பதற்காக, தி.மு.க. வெளியில் இருந்து ஆதரவு தரும்' என்று கருணாநிதி திடீர் அறிவிப்பு செய்யவில்லையா? 'ஆமாம். அரசியல் ஒரு வணிகம்தான்' என்கிறாரே ராமதாஸ்?"

"ராமதாஸுக்கு, அரசியல் ஒரு வணிகம்தான். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் எல்லா கூட்டணிக் கட்சிகளையும் கலந்து பேசி, அமைச்சரவை குறித்து ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்பது தார்மீகமான உரிமை. அதைத்தான் கலைஞர் வலியுறுத்தி னார். மற்றபடி, தன் குடும்பத்துக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என்று மத்திய அரசை மிரட்டவும் இல்லை, அது கலைஞரின் நோக்கமும் இல்லை. ராமதாஸ் ஒரு தேர்ந்த அரசியல் வியாபாரியாக இருப்பதால், அவர் தன்னைப்போலவே மற்றவர் களையும் நினைத்துக்கொள்கிறார்!"

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம்...

"தமிழகத்தில் காங்கிரஸைக் கூட்டணியில் சேர்க்க ஜெயலலிதாவும் முயல்வதாகத் தெரிகிறது. அவரின் முயற்சிக்குப் பலன் கிடைக்குமா?"

"தெரியாது. தமிழகத்தில் காங்கிரஸ் இயக்கத்தை முதன்மை இயக்கமாக மாற்ற வேண்டும். மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைத் தமிழகத்தில் மலரச் செய்ய வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறார் அன்னை சோனியா. கூட்டணி குறித்து, சோனியாவைத் தவிர மற்றவர்கள் சொல்வதை எல்லாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது இல்லை என்பது என் கருத்து!"

ஜெயக்குமாரிடம்...

"மதுரை பொதுக் கூட்டத்துக்கு வரும் ஜெயலலிதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இதுவரை 10 மிரட்டல் கடிதங்கள் குவிந்துள்ளன. ஆனால், அனைத்தும் ஜெயலலிதா தனக்குத்தானே எழுதிக்கொண்டவை என்கிறாரே அழகிரி?"

"மத்திய அமைச்சர் பதவிக்கே தகுதி இல்லாத, எம்.பி-க்களின் கேள்வியை எதிர்கொள்ளத் தயங்கும் அழகிரிக்கு, அம்மாவை விமர்சிப்பதற்கு அருகதை கிடையாது. வரும் 18-ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள பொதுக் கூட்டம், அம்மா மீண்டும் முதல்வராகப்போகிறார் என்பதற்கான வெள்ளோட்டம். மற்றபடி, மிரட்டல் கடிதங்கள் குறித்த அழகிரியின் அலறல் உளறல்களைக் கண்டுகொள்ள வேண்டியது இல்லை!"

அமைச்சர் கே.பி.பி.சாமியிடம்...

"சிங்களக் கடற் படையினரின் தாக்குதலைக் கண்டித்து, கச்சத் தீவை முற்றுகையிடும் போராட்டம் நடத்தும் அளவுக்கு மீனவர்கள் தள்ளப்பட்டு உள்ளனர். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் பொறுப்புதானே?"

"தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்காக முதல்வர் கலைஞர் அவர்கள் மத்திய அரசுடன் பேசி, பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். சில தினங்கள் முன்புகூட திருச்சி பொதுக் கூட்டத்துக்காக வந்திருந்த சோனியா காந்தியைச் சந்தித்த முதல்வர், அவரிடம் பேசிய முதல் விஷயமே தமிழக மீனவர்களின் பாதுகாப்பு பற்றியதுதான். உண்மை இப்படி இருக்க, கச்சத் தீவை முற்றுகையிடும் போராட்டம் என்பது எல்லாம் நடைமுறைக்கு ஒவ்வாதது!"

5 கேள்விகள்
5 கேள்விகள்