"எப்படி 'கணக்கு' சரியாப் போடுறீங்க? நிறையப் பேருக்கு இந்தக் 'கணக்கு' தப்பாகுதே?"
" 'வாரணம் ஆயிரம்' வெற்றி வேற மாதிரி. எல்லோ ருக்கும் அது நினைவுகளாக மாறியிருந்தது. டைரக்டர் வெற்றிமாறன் பார்த்துட்டு, சிகரெட் குடிக்கிறதை விட்டுட்டேன்னு சொன்னார். எஸ்.எம்.எஸ்களால் என் இன்பாக்ஸ் நிரம்பி வழிந்தது. இவங்க எல்லாம் வேற. ஹரியுடன் நான் 'சிங்கம்' நடிச்சதில் என் கைக்கு வந்தவங்க வேர்வை ஒழுகி, கஷ்டப்படுற மக்கள். வேட்டியை மடிச்சுக் கட்டி, பைக்கில் விரட்டி, 'துரைசிங்கம் ரொம்ப டாப்பு'ன்னு கை வலிக்குற மாதிரி குலுக்கிச் சொன்ன மக்கள். இப்ப கோபமே வரலை. கும்பிடத்தான் தோணுது. எல்லோருக்கும் பிடிக்கிறவனாக இருக்கணும்னு நினைச்சுக்கிட்டேன். எல்லா வயசுக்கும் பிடிக்கணும். நிச்சயமா, ஒரே மாதிரி படங்கள் பண்ண மாட்டேன். 'சிங்கம்' மாதிரி நான் இன்னொரு தடவை கோபப்பட்டால் எனக்கே பிடிக் காது. அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் படம். நான் நினைப்பது நடந்தால், முருகதாஸ் படம் எனக்குப் பெரிய லெவல். அடுத்து கே.வி.ஆனந்த். ஒவ்வொரு டைரக்டரிடமும் என்னை அர்ப்பணிக்கிறேன். நான் ஒண்ணும் மகா நடிகன் கிடையாது. ஆனால், என்ன கொடுக்குறாங்களோ, அதில் என் அதிகபட்ச சக்தியைத் தருவேன். அவ்வளவுதான். இதைத்தான் நீங்கள் கணக்குன்னு சொல்றீங்க!"
"மற்ற பெரிய ஹீரோக்கள் நடிக்கிற படங்கள் தோல்வி அடையுது. உங்க படங்கள் வெற்றி அடையுது. ஏன்?"
"எவ்வளவோ விஷயங்கள் இருக்குங்க. ரிலீஸ் தேதி, என் டைரக்டரோட உழைப்பு, படத்தோட புரொமோஷன்... இப்படி நிறைய இருக்கு. மத்தவங்க யாரும் தப்பா நினைச்சிடக் கூடாது. கம்பேர் பண்றேன்னு சொல்லிடக் கூடாது. நான் என்னுடைய படங்களை ரிப்பீட் பண்றது கிடையாது. மத்த காரணங்களை நீங்க தேடிக்கங்க!"
|