சக மந்திரிகளில் எ.வ.வேலு மட்டும்தான் பொன்முடியுடன் முழுமையாகச் சிரித்துப் பழகி, பேசிக் களித்து வருபவர். மற்றவர்கள் பொன்முடியிடம் ஏதாவது பரிந்துரை என்றாலே பயந்து நடுங்குகிறார்கள்.
விழுப்புரத்தைச் சுற்றி வந்தால், சென்னை - கும்பகோணம் நெடுஞ்சாலை கப்பிக்காம்புலியூரில் இருக்கிறது சிகா அறக்கட்டளை. ஆரம்பத்தில் இங்கு ரெசிடென்ஷியல் ஸ்கூல் மட்டும் தொடங்கப்பட்டது. சமீபத்தில் கலை அறிவியல் கல்லூரியும்,ஆசி ரியர் பயிற்சிக் கல்லூரியும் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் சூரியா அறக்கட்டளை பெயரில் பொறி யியல் கல்லூரி, பாலிடெக்னிக், நிர்வாகவியல் கல்லூரி எனப் பிரமாண்டமான கட்டடங்கள் எழுந்துவருகின்றன. பெருமுக்கல் என்ற இடத்தில் ஜல்லி உடைக்கும் நிறுவனம், காங்கிரீட் தயாரிப்பு நிறுவனம் வளர்ந்து வருகிறது. கடலூரில் ஹீரோ ஹோண்டா விற்பனையகம் உள் ளது. சிமென்ட் வர்த்தகமும் உண்டு. கல்லூரிப் பேராசிரியராக இருந்த காலத்தில் இருந்து வாடகை வீட்டில்தான் வசித்து வந்தார். இன்று விழுப்புரத்திலும், சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீராம் நகரிலும் வீடுகள் இருக் கின்றன. அந்த வீட்டு நிலம் தொடர்பான வழக்கும் நிலு வையில் உள்ளது. சென்னையில் எழும் ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் இவர்தான் என்று அப்பகுதியினர் சொல்கிறார் கள்.
பொன்முடிக்கு இரண்டு மகன்கள். மூத்தவர், பொன் கௌதம சிகாமணி. அடுத்தவர், பொன் அசோக் சிகாமணி. இருவருமே டாக்டர்கள். கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு ஊர்வலத்தைப் பார்வையிடும் குஷ்புவின் மடியில் அமர்ந்திருந்த சின்னப் பெண் பெயர் கயல், கௌதம சிகாமணியின் மகள். கௌதமன் டி.வி. நிகழ்ச்சிகள் தயாரிப்பிலும் இறங்கியிருக்கிறார். வட மாவட்டத்தில் கட்சியின் முக்கியப் பிரமுகராகவும் வளர்ந்து வருகிறார். தளபதி நற் பணி மன்றம் ஆரம்பித்து இருக் கிறார். அழகிரி மன்றங்களுக்குத் தடை போட்ட தலைமை, இதைக் கண்டுகொள்ளாதது ஆச்சர்யம்தான். இவரது பெயர் இல்லாமல் மாவட்டத்தில் விளம்பரங்கள் செய்ய முடியாது. வேண்டியவர்கள், சாதிக்காரர்கள் மட்டுமே அமைச்சரால் வளர்த்துவிடப்படுவதாகக் கட்சிக்குள் பொருமல் கேட்கிறது. இது தொடர்பான எத்தனையோ புகார்கள் அறிவாலயம் வாசலைத் தட்டி இருக்கின்றன. ஆனால், கருணாநிதியின் கவனத்துக்குப் போனதாகத்தான் தெரிய வில்லை.
நுழைவுத் தேர்வை ரத்து செய்தது, கலைக் கல்லூரிகளில் ஷிஃப்ட் முறையைக் கொண்டுவந்தது, கல்லூரி மாணவர்களுக்கு இலவசப் பேருந்து அட்டை, முதுகலைப் பட்டம் வரை கல்விக் கட்டணம் ரத்து போன்றவை பொன்முடி காலத்துச் சாதனைகளாகச் சொல்லப்படும். நுழைவுத் தேர்வு ரத்து காரணமாக கிராமப்புற மாணவர்கள் 54 ஆயிரம் பேர் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்திருப்பது முக்கியச் சாதனை. 16 நிகர் நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு மத்திய அரசு செக் வைத்தபோது, 'அனைத்து நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தையும் ரத்து செய்ய வேண்டும்' என்று துணிச்சலாகக் குரல் கொடுத்தார் பொன்முடி. அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலையும், பல்கலைக்கழக மானியக் குழுவையும் இணைத்து தேசிய உயர் கல்வி ஆணையம் அமைக்க மத்திய அரசு முயற்சித்தபோது, 'இதனால் உயர் கல்வியில் மாநில அரசுக்கு இருக்கும் அதிகாரம் குறையும்' என்று எதிர்த்தார். ஆனால், உயர் கல்வி என்பது இன்று வைரம், வைடூரியத்தைவிட விலைமதிப்பானதாக மாறிக்கொண்டு இருப்பதை இந்த அரசு உணர்ந்ததாகத்தெரிய வில்லை.
பொறியியல் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் இடம்கிடைத் தால், 32 ஆயிரம் ரூபாயும், நிர்வாக ஒதுக்கீடாக இருந்தால் 62 ஆயிரத்து 500 ரூபாயும்தான் வசூலிக்க வேண்டும் என்கிறது அரசு உத்தரவு. இது மெகா பொய் என்பதை பொறியியல் படிக்கும் மாணவனின் குடும்பங்கள் அறியும். தமிழகத்தில் இருக்கும் 350-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் அதிகபட்சம் ஆறு லட்சம் வரைக்கும் சில பாடங்களை பெற தர வேண்டியுள்ளது. இதை உயர் கல்வித் துறை கண்டுகொள்வதே இல்லை.
"உயர் கல்வியைக் குறைந்த செலவிலும் அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கும் வகையிலும் வழங்குவதன் மூலமே உயர் கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகப்படுத்த முடியும்" என்று சட்டசபையில் பொன்முடி சொன்னார். ஆனால், நடைமுறையில் அதை அமல்படுத்த எதையும் செய்ததாகத் தெரியவில்லை. கல்வித் தந்தைகளின் பண பலத் துக்கு முன்னால் எந்தக் கல்விக் கொள்கையும் கரைந்துபோகும் என்பதற்கு பொன்முடி மட்டும் விதி விலக்காக இருக்க முடியுமா என்ன?
|