தலையால் முட்டி ஸ்ரீனிவாசனிடம் பந்தை அனுப்-பியவர், "தொப்பி போட்டு ஃபுட்பால் விளையாடக் கூடாது. 'அவன் இவன்' படத்துக்காக என் தலை-முடியை கலரிங் பண்ணியிருக்கேன்... அதான் தொப்பி. நான் தொப்பியை எடுத்தா, பாலா என் தலையை எடுத்திருவார்!" என்று சிரித்தார்.
"யார் உங்களுக்குப் பிடிச்ச பிளேயர்?" என்று ஆர்யா கேட்க, "பிரேசில் காகா... என் ஃபேவரைட். ஆளும் அழகு. ஆட்டமும் அழகு!" என்று ஸ்ரீனிவாசன் சொல்ல, "அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்ஸிதான் நம்ம ஆளு. பாதி கிரவுண்ட்ல இருந்து எதிரணி கோல் போஸ்ட் வரைக்கும் மெஸ்ஸி பாலைக் கடத்திட்டுப் போற ஸ்டைலே தனி. நாலு பேர் சுத்தி வளைச்சாலும் தண்ணி காட்டிருவான் தலைவன். மெஸ்ஸியின் கால்ல பால் பட்டாலே கோல்தான். ஆனா, இந்த வேர்ல்டு கப் நம்ம ரெண்டு பேருக்குமே ஷாக்கிங்காதான் இருக்கும். காகாவால் பிரேசிலைக் காப்பாத்த முடியலை. மெஸ்ஸியால் அர்ஜென்டினாவுக்கு 'கால்' கொடுக்க முடியலை. அர்ஜென்டினா தோத்த அன்னிக்கு ராத்திரி எனக்குத் தூக்கமே வரலை!" என்ற படியே ஆர்யா ரிவர்ஸில் திரும்பிப் பந்தை உதைக்க, மிகச் சரியாக ஸ்ரீனிவாசனிடம் வந்து சேர்ந்தது பந்து.
"இவ்ளோ நல்லா விளையாடுறீங்க... ஏதாவது கிளப்புக்காக ஆடலாமே" என்று கேட்டார் ஸ்ரீனிவாசன். "உடம்பு ஃபிட்டா இருக்கணும்னுதான் விளையாடுறேன். கிளப்புக்கு விளையாடப் போனா, தினமும் நிறையப் பயிற்சி எடுக் கணும். நுணுக்கங்கள் கத்துக்கணும். உடம்போட எனர்ஜி எப்பவும் குறையாமப் பார்த்துக்கணும். உணவுப் பழக்கத்தை மாத்தணும். அதெல்லாம் சாதாரண விஷயம் இல்லை. இதுல எங்கேயாவது சொதப்பிட்டா, கிரவுண்டில் காமெடி பீஸ் ஆகிருவோம். அதனால, அந்த ரிஸ்க்கே வேண்டாம்னு விட்டுட்டேன்!" என்று ஆர்யா முடிக்கவும், அவரது நண்பர்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்து விளையாடத் தயாராக இருந்தார்கள்.
"வாங்க!" என்று ஆர்யா அழைக்க, சந்தோஷமாக மைதானத்தில் இறங்கினார் ஸ்ரீனிவாசன். அணிக்கு ஆறு பேர், 20 நிமிடம் போட்டி என்கிற விதியோடு களம் இறங்கினார்கள் ஆர்யா அண்ட் கோ. பரபரப்பான 20 நிமிட சேஸிங்கில் ஆர்யா அணி 1-0 என்கிற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
|