பெட்ரோல் விலை 3 ரூபாய்தான் கூடுகிறது. ஆனால், அதைச் சொல்லி 300 பேர் தங்களது பொருட்களின் விலைகளை உயர்த்துகிறார்கள். லாரி வாடகை கூடும், சரக்குக் கட்டணம் அதிகரிக்கும், வேன் வாடகை கூடும், போக்குவரத்துக் கட்டணம் அதிகரிக்கும், காய்கறி விலை எகிறும், ஆட்டோக்காரர்கள் தங்களது கட்டணத்தைக் கூட்டுகிறார்கள். இதைவைத்துப் பார்த்தால் 3 ரூபாய் பெட்ரோல் கூடும்போது, மத்தியதர வர்க்கத்து மனிதன் கூடுதலாக 100 ரூபாயை அழ வேண்டி இருக்கிறது. மெத்தப் படித்த பொருளாதார மேதைகளின் மூளைக்கு இதெல்லாம் தெரியும். இருந்தாலும், "மிகவும் இக்கட்டான சூழலில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதை மக்கள் உணர்ந்துகொள்வார்கள்" என்று விளக்கம் அளிக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்.
மிகமிக அத்தியாவசியமான பொருட்களின் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டு இருப்பதைத் தவிர்க்க வேறு வழி இல்லையா?
"விற்பனை வரி, கலால் வரி, சுங்க வரி போன்றவற்றைச் சரிசெய்தாலே, இந்த பெட்ரோலிய விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால், அப்படிச் செய்வதன் மூலம் வருமானம் குறையும்" என்று சொல்லும் பங்குச் சந்தை நிபுணர் நாகப்பன், "இந்திய பெட்ரோலிய நிறுவனங்கள் சந்தை விலையைவிடக் குறைவாகத்தான் பெட்ரோலியப் பொருட்களை வழங்குகின்றன. இதனால், அந்த நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. அதைச் சரிகட்ட, அரசு அவர்களுக்கு இழப்பீடு செய்யும் வகையில், மானியங்கள் வழங்குகிறது. இதுவும் ஒரு வகையில் அரசுக்கு நஷ்டம்தான். தற்போது பெட்ரோலியப் பொருட்களுக்கு விலையை உயர்த்தியிருப்பதன் மூலம் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் மானியங்கள் குறையும். சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு 35 ரூபாய் அதிகரித்து இருப்பதும், போக்குவரத்துச் செலவுகள் கூட இருப்பதும் மத்தியதர வர்க்கத்துக்கான இழப்புகள். அதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும். வட்டி விகிதம், பணவீக்கம் போன்றவையும் அதிகரிக்கும் என்பது உண்மையாக இருந்தாலும், இதை தாங்கித்தான் ஆக வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் இந்த விலை உயர்வுகள் மூலம் அரசு மக்களிடம் இருந்து அதிகப் பணத்தை வாங்குவது தப்பா, இல்லையா என்பதைவிட, அப்படி வாங்கிய பணத்தைக்கொண்டு மக்களுக்கு நல்லது செய்கிறதா, இல்லையா என்பதுதான் முக்கியம்" என்கிறார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் சி.ஐ.டி.யூ-வின் பொதுச் செயலாளருமான சௌந்தரராஜனிடம் கேட்டபோது, "இந்த விலை உயர்வு எல்லா மக்களையும் பாதிக்கக்கூடியது. உணவுப் பொருட்களின் பண வீக்கம் 17 சதவிகிதமாகவும், பொதுவான பண வீக்கம் 13 சதவிகிதமாகவும் உயர்ந்திருக்கிறது. 'மானியம் தருகிறோம். அதனால் நஷ்டம் ஏற்படுகிறது' என்று இந்த விலை ஏற்றத்துக்குக் காரணம் சொல்கிறது அரசு. ஆனால், அது முற்றிலும் தவறு. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 56.90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதில் சுமார் 28.50 ரூபாய் ஆயில் கார்ப்பரேஷனுக்குச் செல்கிறது. பாக்கி வரி என்ற பெயரில் மத்திய மாநில அரசுகளுக்குச் செல்கிறது. மக்கள் பயன்படுத்தும் இந்த அத்தியாவசியமான பொருட்களுக்கு ஆடம்பரப் பொருட்களைப்போல விலையை உயர்த்தி இருக்கிறார்கள். கடந்த பிப்ரவரி மாதத்தில் 3 ரூபாய் உயர்த்தினார்கள். அது முழுக்க முழுக்க அரசுக்கு |