விஞ்ஞானிகள், 'உலகின் மிகப் பெரிய எண்ணெய்க் கசிவு' என்று பதறு கிறார்கள். விபத்து நிகழ்ந்த ஆழ்கடல் பகுதி முழுக்க 'டெட் ஸோன்' என்று அறிவிக்கச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். தன் நாட்டின் எல்லைப் பகுதி அருகிலேயே இத்தனை விபரீதங்கள் அரங்கேறிய பிறகும், வாய் மூடி மௌனியாகவே இருந்தது அமெரிக்கா. 'அதிபர் ஒபாமாவே பதவி விலகு!' என்று அமெரிக்க செனட் சபைக்குள் கூக்குரல்கள் ஒலிக்கத் தொடங்க வும்தான், சட்டெனச் சுதாரித்த ஒபாமா, 'இனி மெக்சிகோ கடல் பகுதியில் புதிதாக எண்ணெய் எடுக்க யாருக்கும் அனுமதி இல்லை. தற்போதைய எண்ணெய்க் கசிவின் மொத்த விளைவுகளுக்கும் BP நிறுவனம்தான் பொறுப்பு!' என்று அறிவித்தார். ஆனால், அது கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்!
விபரீத விளைவுகளை உலகம் கவனிக்கும் முன்னரே, எண்ணெய்க் கசிவைத் தடுத்து நிறுத்த BP நிறுவனம் முடிந்த மட்டும் முயற்சித்தது. கசிவின் ஊற்றுக்கண் மீது ராட்சச மூடிகளைப் பதிக்க மேற்கொண்ட ஆறு முயற்சிகள் தோல்வி. தலா 125 டன் எடைகொண்ட மெகா சிலிண்டர் வடிவ உருளைகளைக் கசிவின் மீது பதித்து அப்படியே எண்ணெயைச் சேகரிக்க முயன்றார்கள். ஆனால், மீத்தேன் வாயு குளிர் நீருடன் கலந்து உருளையின் வாய்ப் பகுதியை அடைத்துக்கொண்டு பெப்பே காட்டியது. பிறகு, 'டாப் கில்' என்று ஒரு முயற்சி மேற்கொண்டார்கள். அதாவது, கசியும் எண்ணெய் மீது மேல்புறத்தில் இருந்து எதிர்வினைத் திரவங்களைப் பீய்ச்சி அடித்து, கசிவைக் கட்டுப்படுத்தி சிமென்ட் பலகைகளால் அடைப்பது. ஆனால், அதுவும் புஸ்ஸ்ஸ்ஸ். இதன் பிறகு, வேறு வழி இல்லாமல் அமெரிக்காவிடம் உதவி கேட்டு இருக்கிறார்கள். அதிபர் ஒபாமாவின் எரிபொருள் சக்தி ஆலோசகர், நைட்ரஜன் குண்டு கண்டுபிடித்தவர் உள்ளிட்ட அமெரிக்க உயர்மட்டக் குழு விஞ்ஞானிகள் வந்து நிலைமையை ஆராய்ந்து, கசிவை அடைக்க மேற் கொண்ட முயற்சிகளை அலசிப்பார்த்தார்கள். வெறுத்துப்போய், 'அட... ஏங்க இவ்வளவு மெனக்கெட்டுக்கிட்டு... பேசாம ரெண்டு அணு குண்டுகளை அந்த இடத்தில் வெடிக்கவெச்சுக் காலி பண்ணிட லாம். எண்ணெயே தீய்ஞ்சுபோயிடும்லா!' என்று ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள். BP அதிகாரிகளே மிரண்டுவிட்டார்களாம். 'ஐயோ, அது சரி வராதுங்க. ஏற்கெனவே ட்ரில்லியன் கணக்குல கீழே எண்ணெய் இருக்கலாம். அதுல அணுகுண்டைப் போட்டா நிலைமை இன்னும் ரொம்ப சிக்கலாயிரும். அப்புறம் சமாளிக்கவே முடியாது!' என்று பதறியிருக்கிறார்கள். 'அப்படிங்கிறீங்களா... என்னமோ நீங்க சொல்றீங்க!' என்று அரைகுறையாகச் சமாதானம் ஆகியிருக்கிறார்கள். (உலக மகா ஜனங்களே... நம்புங்க இவ்வளவுதான் ஒபாமா அதிகாரிகளின் புத்திசாலித்தனம்!)
|