Published:Updated:

வருங்காலத் தொழில்நுட்பம்

வருங்காலத் தொழில்நுட்பம்


வருங்காலத் தொழில்நுட்பம்
வருங்காலத் தொழில்நுட்பம்
வருங்காலத் தொழில்நுட்பம்
அண்டன் பிரகாஷ்
வருங்காலத் தொழில்நுட்பம்

ந்த வாரத்தின் ஹாட் டாபிக், கூகுளுக்கும் சீனாவுக்கும் நடக்கும் லடாய்தான்.

ஒரு சுருக் பின்னணி... தகவல் தேடும் இயந்திரத் தொழில்நுட்பத்தின் மீது கட்டப்பட்டு இருக்கும் கூகுள் என்ற நிறுவனத்தின் நம்பகத்தன்மை அது தரும் தேடல் பதில்களில்தான் இருக்கிறது. உதாரணத்துக்கு, நீங்கள் 'செம்மொழி மாநாடு' என்று கொடுத்தால், பொருத்தமான வலைதளங்கள் பதிலாக வர வேண்டும். எது பொருத்தமானது என்பதைத் தேர்ந்தெடுக்க கூகுள் வைத்திருக்கும் ஃபார்முலா உலகளாவிய வலையில் இருக்கும் ஒவ்வொரு தளத்தில் இருக்கும் ஒவ்வொரு பக்கத்துக்கும் Page Rank என்ற மதிப்பெண்ணைக் கணக்கிடுகிறது. (கூகுளின் நிறுவனர்களில் ஒருவரான Larry Page கணினி இயலில் ஆராய்ச்சிப் படிப்பின்போது கண்டறிந்த ஃபார்முலா என்பதால், Page Rank. வலைப்பக்கங்களுக்கானது என்பதால் அல்ல!) இந்த Page Rank ஐ அடிப்படையாகக்கொண்டு இருக்கும் தேடல் இயந்திரம் அவர்களது அறிவுசார் சொத்து என்றாலும், ஓரளவுக்கு இதைக் கணித்துவிட முடியும்.

வருங்காலத் தொழில்நுட்பம்

எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், வலைப்பக்கம் ஒன்றில் செறிந்திருக்கும் தகவல்களையும், அந்தப் பக்கத்துக்குக் கொடுக்கப்படும் இணைப்புகளையும் பொறுத்து, அந்தப் பக்கத்தின் முக்கியத்துவம் கணிக்கப்படுகிறது. (Page Rank ஃபார்முலாவைத் தீர்க்கமாகப் புரிந்துகொள்ளத் துடியாகத் துடிப்பவர்கள் இந்த விக்கி உரலியைப் படிக்கலாம். http://en.wikipedia.org/wiki/PageRank )

மனிதர்களின் இடையீடு எதுவும் இன்றி, தேடல் பதில்களைக் கொண்டுவருவதால், கூகுளின் தேடல் பதில்களில் நம்பகத்தன்மை அதிகரிக்கிறது. அதனால், பயனீட்டாளர்களின் எண்ணிக்கை உயர்கிறது; அதன் மூலம் டிராஃபிக் அதிகரிக்கிறது; விளம்பரதாரர்களால் அதிக மக்களைச் சென்றடைய முடிகிறது. இந்தக் காரணங்களால், தேடல் இயந்திர இயக்கத்தில் எந்தக் காரணத்தைக்கொண்டும் தலையிடுவது இல்லை

வருங்காலத் தொழில்நுட்பம்

ஆனால், இந்தக் கறார் பாலிஸி சீனாவுக்குள் எடுபடவில்லை. new.google.cn என்ற உரலியில் இயக்கப்படும் கூகுள் தளத்தில் காட்டப்படும் பதில்கள் தணிக்கை செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் என்று சீன அரசாங்கம் வலியுறுத்த, 'அப்படி எல்லாம் செய்ய முடியாது. அப்படிச் செய்துதான் ஆக வேண்டுமானால், அந்தத் தளத்தையே நடத்தத் தேவை இல்லை' என்று வீராப்பாகச் சொல்லிவிட்டு, new.google.cn தளத்துக்குச் செல்பவர்களை new.google.hk தளத்துக்குத் திருப்பிவிட்டது. (hk-ஹாங்காங்). சீனாவின் சென்சார் விதிகள் ஹாங்காங்கில் வலியுறுத்தப்படுவது இல்லை என்பதால், சீன தளத்துக்குச் செல்பவர்களை ஹாங்காங் தளத்துக்கு வரவழைத்து கட்டுப்பாடுகள் இல்லாத தேடல் பதில்களைக் கொடுக்கலாம் என்பது கூகுளின் திட்டம். புகுந்த வீட்டில் இழைக்கப்படும் அநீதியைப் பொறுக்க முடியாமல், தனிக் குடித்தனம் சென்ற மருமகளைப்போல நடந்துகொண்டது கூகுள். யாஹூ போன்ற மற்ற தளங்கள் சீனாவின் விதிகளை முதல் நாளில் இருந்து 'யெஸ் சார்' பாணியில் கடைப்பிடித்து வந்ததை இந்த இடத்தில் சொல்லியாக வேண்டும். காரணம், சீனா என்பது மிகப் பெரிய சந்தை. சீனாவின் மனித உரிமை சார்ந்த நிகழ்வுகளைப் பட்டும் படாமலும் அமெரிக்க அரசாங்கம் கண்டிக்கக் காரணம், சீனச் சந்தையின் முக்கியத்துவத்தால்தான் என்பதால், கூகுளின் நடவடிக்கை டெக் உலகத்தை மூக்கில் விரல் வைத்து ஆச்சர்யப்படவைத்தது. இதுபற்றி கூகுள் சென்ற மார்ச்சில் வெளியிட்ட அறிக்கையைப் பார்க்க இங்கே சொடுக்கவும் http://googleblog.blogspot.com/2010/03/new-approach-to-china-update.php .

இந்த அறிக்கையைத் தொடர்ந்து சீன அரசாங்கம் கூகுளுக்குக் கொடுத்த நெருக்கடி கொஞ்சநஞ்சம் இல்லை. சீனாவின் கூகுள் அலுவலக ஊழியர்கள் மிரட்டப்பட்டார்கள். (நம்மூர் ஆட்டோ ஸ்டைல் நிகழ்வுகள் பல). அதற்கெல்லாம் அசராத கூகுள், சீனா சென்ற மாதம் கொளுத்திப்போட்ட சரவெடியில் அதிர்ந்துபோனது.

வருங்காலத் தொழில்நுட்பம்

வேறொன்றும் இல்லை, உலக நாடுகளின் வலைதளப் பெயர்களை அந்தந்த நாடுகளே கட்டுப்படுத்துகின்றன. உதாரணத்துக்கு, in என முடியும் ஒரு வலைதளத்தை அனுமதிப்பது இந்திய அரசின் உரிமை. ஜூன் 30 அன்று google.cn தளத்தின் லைசென்ஸ் புதுப்பிக்கப்பட்டாக வேண்டும். ஹாங்காங் தளத்துக்கு redirect செய்வதை நிறுத்தாவிட்டால், உங்கள் வலைதளத்தின் லைசென்ஸைப் புதுப்பிக்க மாட்டோம் என்று சொல்ல, கூகுள் சற்றே இறங்கி வந்திருக்கிறது. இந்தக் கட்டுரை எழுதப்படும் இரவில் new.google.cn தளம் கூகுள் தேடல் இயந்திரம் போன்ற ஒரு படத்தைக் காட்டுகிறது. அதைச் சொடுக்கினால், new.google.hk தளத்துக்கு உங்களை டிரான்ஸ்ஃபர் செய்கிறது. இன்னொரு விதத்தில் சொல்லப்போனால், தானாகவே கொண்டுசெல்லாமல், பயனீட்டாளரைச் சொடுக்கவைத்து ஹாங்காங் தளத்துக்குக் கொண்டுசெல்கிறது. 'இதன் மூலம் new.google.cn கேன்சல் ஆகாமல் பார்த்துக்கொண்ட அதே வேளையில், சென்சார் செய்யாத தேடல் பதில்களை சீன பயனீட்டாளர்களுக்கு வழங்க முடிவதில் மகிழ்ச்சி அடைகிறோம்' என்று கூகுள் வெளியிட்டு இருக்கும் அறிக்கை கீழே விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டவில்லை ரேஞ்ச். 'எப்படி இருந்தவுக இப்படி ஆயிட்டாகளே!' என்று பரிதாபப்படத் தோன்றுகிறது.

வருங்காலத் தொழில்நுட்பம்

வீட்டின் பிரைவஸி பாதிக்கப்படும் என்ற காரணத்தைக் காட்டி, பார்பரா ஸ்ட்ரைசாண்ட் தனது கடற்கரையோர வீட்டின் புகைப்படங்களை பப்பராசி வலைதளம் வெளியிடாமல் இருக்க கோர்ட்டை அணுக, அதுவரை இந்தத் தகவல் தெரியாதவர்களும் அதிக ஆர்வத்தோடு வலையில் தேடி, கிடைத்த புகைப்படங்களைத் தங்களது வலைத்தளங்களிலும், வலைப்பதிவுகளிலும் வெளியிட்டனர். பார்பரா எதைத் தடுக்க வேண்டும் என்று நினைத்தாரோ, அதற்குத் தலைகீழான நிகழ்வு நடந்தது. இத்தகைய விளைவுக்குத்தான் Streisand Effect என்று பெயர்.

போதனை?

இணையத்தில் ஏதாவது பிரபலமாகிவிடக் கூடாது என்று விரும்பினால், எதுவுமே செய்யாமல் இருப்பது நலம். வெளியாகி இருக்கும் தகவலைத் தடுக்கப்போகிறேன் என்று புறப் பட்டால், எதிர்வினையாக நடந்து முடியும் வாய்ப்புகள் மிக மிக அதிகம்!

வருங்காலத் தொழில்நுட்பம்
வருங்காலத் தொழில்நுட்பம்
Log Off